கங்குவா – விமர்சனம்
நடிப்பு: சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிகுமார், பாபி தியோல், நட்டி ( நடராஜ்), கோவை சரளா, வசுந்தரா, போஸ் வெங்கட், கருணாஸ், பிரேம்குமார், கலைராணி, கார்த்தி (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சிவா
ஒளிப்பதிவு: வெற்றி பழனிசாமி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
கலை இயக்கம்: (அமரர்) மிலன்
படத்தொகுப்பு: (அமரர்) நிஷாத் யூசுஃப்
சண்டை அமைப்பாளர் – சுப்ரீம் சுந்தர்
தயாரிப்பு: ’ஸ்டூடியோ க்ரீன்’ கே.இ.ஞானவேல்ராஜா, ‘யுவி கிரியேஷன்ஸ்’ வம்சி பிரமோத்
தமிழ்நாடு வெளியீடு: ’சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா – நாசர்
டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானபோதே பரபரப்பும், எதிர்பார்ப்பும் தொற்றிக்கொள்ள, அடுத்தடுத்து வெளியான டீஸர், டிரெய்லர், பாடல்கள் ஆகியவை எதிர்பார்ப்பை எகிறச் செய்ய, நாயகன் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியா முழுவதும் நகரம் நகரமாகப் பறந்து சென்று மிக பிரமாண்டமாக நடத்திய பிரி-ரிலீஸ் ஈவண்ட்டுகளும், கொடுத்த பேட்டிகளும் எதிர்பார்ப்பை பல நூறு மடங்கு அதிகரிக்கச் செய்துள்ள சூழலில், உலகெங்கிலும் உள்ள சுமார் 11,500 திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், திரைத்துறையினர், விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இமாலய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொல்குடி வீரர், தன் இன மக்களை அந்நியர்களிடமிருந்து காப்பாற்ற நடத்திய வீரம் செறிந்த போராட்டம், தற்காலத்தில் ஒரு நிழல் காவலர் (பவுண்ட்டி ஹண்ட்டர்) முன்ஜென்ம உணர்வுடன் தனக்குள் நடத்தும் இனம் புரியாத போராட்டம் ஆகிய இரண்டையும் வெற்றிகரமாக இணைத்து விரிவதே ‘கங்குவா’ திரைப்படத்தின் கதை.
‘பீரியட் டிராமா ஜானர்’ வகைப்பட்ட இப்படத்தின் கதையின் பெரும்பகுதி நிகழ்காலத்தில் கோவாவிலும், கடந்த காலத்தில் பெருமாச்சி, அரத்தி, கருங்காடு, வெண்காடு, மண்டைக்காடு உள்ளிட்ட ஐந்து தீவுகளை உள்ளடக்கிய ‘ஐந்தீவு’ எனும் கற்பனைத் தீவுக் கூட்டத்திலும் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது…
2024ஆம் ஆண்டு. ரஷ்யாவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையம். அங்கு ஜீட்டா (Zeta) என்ற பத்து வயது சிறுவனின் மூளைத் திறனை செயற்கை முறையில் அதிகரிப்பதற்கான விபரீத மருத்துவப் பரிசோதனை முயற்சியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ரகசியமாக ஈடுபட்டிருக்கிறார்கள். நனவிலி மனதில் உள்ள முன்ஜென்ம நினைவுகளை நனவு மனம் உணரும் எல்லை வரை மூளைத் திறன் அதிகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த மருத்துவ ஆராய்ச்சி தரும் பயங்கர சித்ரவதையைத் தாங்க முடியாமல் சிறுவன் ஜீட்டா அங்கிருந்து தப்பியோடுகிறான். அவனைப் பிடிப்பதற்காக, ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் துப்புத் துலக்கும் வேட்டை நாயுடன் துரத்துகிறது. அவர்களிடம் சிக்காமல் தப்பித்துவிடும் ஜீட்டா இந்தியா வந்து, கோவா போய் சேருகிறான்.
கோவாவில் நிழல் காவலராக – பவுண்ட்டி ஹண்ட்டராக – இருக்கிறார் நாயகன் ஃபிரான்சிஸ் தியோடர் (சூர்யா). போலீசால் பிடிக்க முடியாத குற்றவாளிகளை, சன்மானமாகக் கிடைக்கும் பெருந்தொகைக்காகப் பிடித்துக் கொடுப்பது அவரது வேலை. அவருடைய உதவியாளராக இருக்கிறார் ’கோல்ட் 95’ (யோகி பாபு). ஃபிரான்சிஸின் தொழில் போட்டியாளராக – இன்னொரு பவுண்ட்டி ஹண்ட்டராக – இருக்கிறார் நாயகி ஏஞ்சலினா (திஷா பதானி). இவருடைய உதவியாளராக இருக்கிறார் ‘ஆக்ஸிலேட்டர்’ (ரெடின் கிங்ஸ்லி). ஃபிரான்சிஸ், ஏஞ்சலினா ஆகிய இரண்டு பவுண்ட்டி ஹண்ட்டர்களுக்கு இடையே நிகழும் மோதலும், காதலும், நகைச்சுவையுமாக பொழுது கழிகிறது. இந்நிலையில், முக்கிய குற்றவாளி ஒருவரை பிடித்துத் தருமாறு அவர்களைக் கேட்டுக்கொள்ளும் போலீஸ் உயர் அதிகாரி (கே.எஸ்.ரவிகுமார்), அதற்கு பெரிய தொகையை சன்மானமாகப் பெற்றுத் தருவதாகவும் உறுதி அளிக்கிறார்.
போலீஸ் உயர் அதிகாரி குறிப்பிட்ட அந்த குற்றவாளியைத் தேடிச் செல்லுமிடத்தில் சிறுவன் ஜீட்டாவைப் பார்க்கிறார் ஃபிரான்சிஸ். அவனைக் கொல்லத் துடிக்கும் ஒரு கும்பலிடமிருந்து அவனை காப்பாற்ற போராடுகிறார். அச்சிறுவன் ஜீட்டாவைப் பார்க்கும்போதெல்லாம் தன்னிடம் அவன் ஏதோ சொல்ல முயற்சிப்பது போலவும், அவனை ஏற்கெனவே எங்கோ பார்த்தது போலவும் இருக்கிறது ஃபிரான்சிஸுக்கு. எனில், எங்கே…? எப்போது…?
காட்சி கி.பி.1070க்கு – சுமார் ஆயிரம் ஆண்டுகள் – பின்னோக்கி நகருகிறது. இயற்கை வளம் மிக்க பெருமாச்சித் தீவில் வாழ்ந்த இனக்குழு மக்களின் வாழ்க்கை திரையில் விரிகிறது. அவர்கள் நெருப்பை கடவுளாக வணங்குபவர்கள். போருக்கு அஞ்சாதவர்கள். வீரம் செறிந்தவர்கள். இவர்களின் தலைவராகத் திகழ்பவர் கங்குவா (சூர்யா). (இவர் தான் பின்ஜென்மத்தில் ஃப்ரான்சிஸ் ஆகத் தோன்றியவர்). பெருமாச்சித் தீவை கைப்பற்ற முயற்சி செய்கிறது அந்நிய ரோமானியப் படை. எவ்வளவு முயன்றாலும் ரோமானியப் படையால் அது முடியவில்லை.
இந்த கட்டத்தில், பேராசை பிடித்த கொடுவனுக்கு (நட்டி நடராஜ்) பணத்தாசை காட்டி, அவரைக் கொண்டு சதி திட்டம் தீட்டுகிறது ரோமானியப் படை. அதன்படி பெருமாச்சி மக்களைக் கொன்று குவிக்கிறார் கொடுவன். இதனால் கங்குவாவுக்கும், கொடுவனுக்கும் பயங்கர மோதல் ஏற்படுகிறது. கொடுவனை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திவிடுகிறார் கங்குவா. அப்போது கொடுவனின் பத்து வயது மகனை (இவன் தான் பின்ஜென்மத்தில் சிறுவன் ஜீட்டாவாகத் தோன்றியவன்) கங்குவா கையில் ஒப்படைத்து, ”இவனை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்” என்று சொல்லி சத்தியம் வாங்கிக்கொண்டு கொடுவனின் மனைவியும் தீயில் விழுந்து இறந்துபோகிறார்.
கொடூரனான கொடுவனின் வம்சம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்று ஆவேசம் கொள்ளும் பெருமாச்சி மக்கள், கொடுவனின் மகனையும் கொல்ல வேண்டும் என்கிறார்கள். ஆனால் சிறுவனின் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றவதில் கங்குவா உறுதியாக இருக்கிறார். ”தந்தை செய்த தவறுக்கு மகன் பொறுப்பாக முடியாது” என்கிறார். இதனால் பெருமாச்சி மக்களுக்கும், அவர்களின் தலைவரான கங்குவாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
இந்நிலையில், ரோமானியர்களின் சூழ்ச்சி காரணமாக பக்கத்து தீவான அரத்தியின் தலைவன் உதிரன் (பாபி தியோல்), கங்குவாவின் பெருமாச்சி மீது போர் தொடுக்கிறான். ரத்தத்தை கடவுளாக வணங்கும் அரத்தி குலத்தவனான உதிரன், இதன் மூலம் பெருமாச்சி மீது தனக்குள்ள பழைய பகையைத் தீர்த்துக்கொள்ள போரில் குதிக்கிறான். இப்போரில் வென்று பெருமாச்சி மக்களை கங்குவா காப்பாற்றினாரா? கொடுவனின் மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை அவர் நிறைவேற்றினாரா? நிகழ்காலத்தில் கோவாவில் இருக்கும் ஃபிரான்சிஸ் மற்றும் சிறுவன் ஜீட்டாவுக்கு எத்தகைய சோதனை ஏற்பட்டது? அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கங்குவா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
பவுண்ட்டி ஹண்ட்டர் ஃபிரான்சிஸ் தியோடராகவும், பெருமாச்சி இனக்குழுத் தலைவர் கங்குவாவாகவும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கியிருக்கிறார் சூர்யா. சமகாலத்தவராக துள்ளலும், சுறுசுறுப்பும் மிளிரும் நவநாகரிக ஃபிரான்சிஸாக வரும் அவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவராக வீரமும் கம்பீரமும் மிக்க தொல்குடியின் சாகச வீரர் கங்குவாவாகவும் பிரமிக்க வைக்கிறார். அகன்ற மார்பு, விரிந்த தோள்கள், கூரிய கண்கள், திரண்ட புஜங்கள், வீரநடை, நெருப்பை உமிழும் வசனம், எதிரிகளை நாசம் செய்யும் பராக்கிரமம் என வீராதிவீரர் கங்குவாவாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். மேலும், தன் தந்தையைக் கொன்றவர் என்ற நினைப்பில் சிறுவன் தரும் தொல்லைகளையெல்லாம் சத்தியத்துக்காக சகித்துக்கொள்ளும் காட்சிகளில் கண்கலங்கச் செய்துவிடுகிறார். மொத்தத்தில், கங்குவா கதாபாத்திரம் அவரது திரையுலக வாழ்நாள் சாதனை கதாபாத்திரமாக அமைந்திருப்பது சிறப்பு. கடினமான உழைப்பைக் கொட்டி, தனியொரு நடிப்புக் கலைஞராக படத்தை தோளில் சுமந்து வெற்றிகரமாக கரை சேர்த்திருக்கிறார் சூர்யா. பாராட்டுகள்.
நாயகி ஏஞ்சலினாவாக திஷா பதானி நடித்திருக்கிறார். அவர் குறைவான காட்சிகளில் வந்தபோதிலும், நடிப்பிலும் கவர்ச்சியிலும் குறை வைக்கவில்லை. அதுபோல், ஃபிரான்சிஸின் உதவியாளர் ‘கோல்ட் 95’ ஆக யோகி பாபுவும், ஏஞ்சலினாவின் உதவியாளர் ‘ஆக்சிலேட்டர்’ ஆக ரெடின் கிங்ஸ்லியும் கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்கள்.
உதிரனாக வரும் பாபி தியோல், கொடுவனாக வரும் நட்டி (நடராஜ்) ஆகியோர் வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டி மிரட்டியிருக்கிறார்கள்.
ஜீட்டாவாக வரும் சிறுவன், போலீஸ் உயர் அதிகாரியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார், மற்றும் கோவை சரளா, வசுந்தரா, போஸ் வெங்கட், கருணாஸ், பிரேம்குமார், கலைராணி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
கிளைமாக்ஸில் தொல்குடி வீரராக சிறப்புத் தோற்றத்தில் திடீரென வந்து கலகலப்பை ஏற்படுத்தும் கார்த்தி, ‘கங்குவா’ இரண்டாம் பாகத்துக்கான லீட் கொடுத்திருப்பது சர்ப்ரைஸ்.
இயக்குநர் சிவா தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி, முற்றிலும் வித்தியாசமான ஜானரில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆயிரம் ஆண்டு இடைவெளி கொண்ட இருவேறு காலகட்டங்களில் நிகழும் கதையைத் தேர்ந்தெடுத்து, அதில் ’முன்ஜென்மம்’ என்ற விஷயத்தைப் புகுத்தி, போரடிக்காத வகையில் திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். அவரது பிரமாண்ட திரையாக்கம் (மேக்கிங்) பிரமிப்பூட்டுகிறது. ”செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்”, “மன்னிப்பு இல்லையென்றால் மனிதகுலமே இருக்காது” ஆகிய எக்காலத்துக்குமான நல்லறத்தை இப்படத்தினூடே அற்புதமான மெசேஜ்ஜாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிவா. வாழ்த்துகள்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை சில காட்சிகளில் சுமாராகவும் பல காட்சிகளில் அபாரமாகவும் அமைந்திருக்கிறது.
வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு, அமரர் மிலனின் கலை இயக்கம், அமரர் நிஷாத் யூசுஃப்பின் படத்தொகுப்பு, சுப்ரீம் சுந்தரின் சண்டை அமைப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில் நுட்பங்கள் பிரமாண்டத்துக்கும், படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
இப்படத்தை 3டி-யில் பார்த்தது, என்றும் மறக்காத சுகானுபவம்.
‘கங்குவா’ – தவறாமல் குடும்பத்துடன் சென்று கண்டு களியுங்கள்!