காஞ்சனா 3 – விமர்சனம்
ஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே ‘காஞ்சனா 3’.
சென்னையில் இருக்கும் ராகவா லாரன்ஸ் தன் தாத்தா- பாட்டியின் 60-ம் கல்யாணத்துக்காக குடும்பத்தினருடன் கோவை செல்கிறார். அங்கிருக்கும் மாமன் மகள்கள் மூவரும் லாரன்ஸையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என்ற மூன்று பெண்களுடன் அவரும் ஜாலியாக டூயட் பாடுகிறார்.
இதனிடையே ஊருக்கு வரும் வழியில் லாரன்ஸ் செய்த விளையாட்டுத்தனமான வேலை வினையாகி தாத்தாவின் வீட்டைப் பதம் பார்க்கிறது. இதனால் லாரன்ஸுக்குள் மொத்தமாக இறங்கிய இரு பேய்கள் ஆட்டம் போட, வீடே அதகளம் ஆகிறது. உண்மையில் அந்த ரோஸி, காளி என்ற பேய்கள் யார்? அவர்களின் முன் கதை என்ன? காளி லாரன்ஸின் உடலுக்கு புகுந்து யாரைப் பழிவாங்குகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
வழக்கமான நகைச்சுவை, திகில் கலந்த பழிவாங்கும் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ். ‘சிவலிங்கா’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ படங்களுக்குப் போதிய வரவேற்பு இல்லாததால் பழைய பாணிக்கே யு டர்ன் அடித்து டெம்ப்ளேட்டாக படம் கொடுக்காமல், டெம்ப்ளேட்டையே படமாகக் கொடுத்திருக்கிறார். அதில் எந்தப் புதுமையும் இல்லாததுதான் சோகம். படத்தின் நீளமும் ரசிகர்களை ரொம்பவே சோதிக்கிறது.
ராகவன், காளி என்ற இரட்டைக் கதாபாத்திரங்களில் லாரன்ஸ் நடித்துள்ளார். முந்தைய படங்களின் ராகவனுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சை அப்படியே இதிலும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார். ஆனால், அது படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
குழந்தைகளை பேய்க்கதை சொல்லச் சொல்லி பயமில்லாதவாறு நடிப்பது, பயம் வந்தால் அம்மா அல்லது அண்ணியின் இடுப்பில் தாவி உட்கார்வது, அம்மா உள்ளிட்ட அத்தனை உறவுகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே சிறுநீர் கழிப்பது என லாரன்ஸ் காமெடி என்ற பெயரில் நெளிய வைக்கிறார். அதுவும் மொத்தக் குடும்பத்தையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே மாமன் மகள்கள் மூவருடனும் செய்யும் காதல் சேட்டைகள் உவ்வே ரகம்.
கோவை சரளா வழக்கம் போல் கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்கிறார். தேவதர்ஷினி சம்பந்தமே இல்லாமல் வேற பாஷை பேசி சிரிக்க வைக்க முயல்கிறார். ஸ்ரீமன் தனக்கு என்ன வருமோ அதை மட்டும் சரியாய் செய்திருக்கிறார். டெல்லி கணேஷ், ஆத்மியா பாட்ரிக், ஸ்டண்ட் மாஸ்டர் தீனா, தருண் அரோரா, கபிர் துஹான் சிங், அனுபமா குமார், ஆர்.என்.ஆர்.மனோகர், அஜய் கோஷ் ஆகியோர் கதாபாத்திரத்துக்குரிய பங்களிப்பில் குறை வைக்கவில்லை. சூரி வந்த இடம் தெரியாமல் கடந்து போகிறார்.
ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என படத்தில் மூன்று நாயகிகள். யாருக்கும் பெரிதாக எந்த வேலையும் இல்லை. மோசமான உருவம்டா சாமி என்றே ஹீரோவைப் புகழ்ந்து தள்ளும் வேலை வேதிகாவுக்கு. பயந்து நடுங்கும் பேர்வழியாக ஸ்டெப் வைத்து ஆடும் ஓவியாவும் மனதில் ஒட்டவில்லை.
வெற்றி பழனிசாமி, சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு படத்துக்கு எந்த விததிலும் பலம் சேர்க்கவில்லை. டூபாடு இசையில் ருத்ரகாளி பாடல் மட்டும் டெம்ப் ஏற்றுகிறது. பின்னணி இசையில் கதைக்களத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் தமன். கிராபிக்ஸ் காட்சிகள், எடிட்டிங் படத்தின் பலவீனம்.
காமெடி, பயம் என இரண்டையும் கமர்ஷியல் கலந்து மாஸாக கொடுப்பது ராகவா லாரன்ஸின் ஸ்டைல். ஒரே கதையின் தொடர்ச்சியை வைத்து இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என எடுத்து ஹிட் அடித்து தனி ஃபார்முலாவையும் கைவரப் பெற்றிருக்கிறார். ஆனால், அது அடுத்தடுத்த பாகங்களுக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். அந்த எதிர்பார்ப்பு காஞ்சனா 3-ல் பூர்த்தி ஆகவில்லை என்பதே நிஜம். டெம்ப்ளேட்டுக்குள் சிக்கிக்கொண்டு இருக்கும் கதை- திரைக்கதையில் எந்த புத்திசாலித்தனமும் இல்லை. லாஜிக் பார்க்காமல் கதை எங்கெங்கோ நகர்கிறது.
கோடீஸ்வரன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஏன் பேய் பிடிக்கிறது? பேய் அந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம், கோவை செல்லும் லாரன்ஸ் அந்த மரத்தின் கீழ் வந்து அமர்வது, அந்த ‘ஆணிகளை’ பெயர்த்தெடுப்பது எல்லாம் தேவையே இல்லாத ஆணிதான். திடீரென்று யாராவது வருவதும் போவதுமாக திசையில்லாமல் தவிக்கும் திரைக்கதையில் கொஞ்சம் ஆசுவாசம் தருவது காளியின் முன்கதைதான். அதிலும் மூச்சுக்கு மூச்சு மாற்றுத்திறனாளி பையன் என்று சொல்லிச் சொல்லியே வார்த்தைகளால் சங்கடத்தை ஏற்படுத்துகிறார் லாரன்ஸ். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அவருக்கு இருக்கும் பெயரைச் சொல்லாமல் லாரன்ஸ் தவிர்ப்பது ஏன்?
சொல்லிவைத்ததைப் போல வரும் பாடல் காட்சிகள், பயமே வராத திகில் காட்சிகள், சிரிப்பே எட்டிப் பார்க்காத நகைச்சுவைக் காட்சிகள் என்று ‘காஞ்சனா- 3’ வறட்சியின் நிழலாகவே உள்ளது