ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கனவு வாரியம்’!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, உலகப் புகழ் பெற்ற இரண்டு ‘ரெமி’ விருதுகளை தட்டி சென்றிருக்கும் படம் ‘கனவு வாரியம்’. அருண் சிதம்பரம் இயக்கி நடித்துள்ள இந்த படம் தற்போது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

இதுவரை இந்த திரைப்படம் 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அருண் சிதம்பரம்? சினிமாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளாக உடற்பயிற்சி கலையில் வல்லுனராக திகழும் ‘ஆணழகன்’ டாக்டர் அ.சிதம்பரம், எம்.ஜி.ஆர் உட்பட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கு உடற்பயிற்சி ஆலோசகர். இவரது இளைய மகன் தான் அருண் சிதம்பரம்.

இயக்குனர் அருண் சிதம்பரம், அமெரிக்காவில் தனது மேற்படிப்பை (MS) முடித்துவிட்டு, சிகாகோ நகரில் உள்ள  ஜே.பி மார்கன் சேஸ் என்னும் முதன்மை வங்கியில்  பணிபுரிந்தார். வாழ்க்கையில் என்னதான் காசு பணம் சம்பாதித்தாலும் அவருக்கு சினிமாவின் மேல் இருந்த ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. சினிமாவின் மேல் அவர் வைத்திருந்த காதல் தான் இன்று ‘கனவு வாரியம்’ என்னும் அழகிய படைப்பை தமிழ் சினிமாவிற்கு வழங்கி இருக்கிறது.

“ஆயிரம் மைல்கள் தாண்டி நான் பணிபுரிந்தாலும் என்னால் தமிழ்  ரசிகர்களின் ரசனை என்ன, அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை எளிதாக உணர முடியும். ஒரு தரமான படத்தை தமிழ் சினிமாவிற்கு வழங்க வேண்டும் என்ற என் எண்ணம் தான்  ‘கனவு வாரியம்’ படத்திற்கு அடித்தளமாக விளங்கியது. மக்களை பாதிக்கும் விஷயத்தை, மக்களோடு தொடர்புள்ள விஷயத்தை படமாக்கலாம் என்று நான் யோசிக்கும்போது தான் நம் கிராமப்புறங்களில் மக்கள் மின்சார தடையால் பாதிக்கப்படும் சிந்தனை உதயமானது. படம் முழுக்க காமெடியைத் தூவி, கலகலப்பான திரைப்படமாக இதை உருவாக்கியுள்ளோம்” என்கிறார் இயக்குனர் அருண் சிதம்பரம்.

ஷாங்காய் சர்வதேச திரைப்பட திருவிழாவில் ‘கனவு வாரியம்’  திரையிடப்பட்ட பிறகு தமிழகத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கல்லா, மண்ணா…’ என்னும் பாடல், குழந்தைகளுக்கான சிறந்த பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாம் அனைவரும் விளையாடி மறந்துபோன 51 விளையாட்டுகளை மீண்டும் நம் கண் முன்னே இந்த பாடல் கொண்டு வந்து நிறுத்தும். இந்த படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, நிச்சயம் இந்த பாடல் மக்களின் உள்ளங்களில் குடிகொள்ளும் என நம்புகிறேன்” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குனர் அருண் சிதம்பரம்.

‘ஆணழகன்’ டாக்டர் அ.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் இருவரும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ்’ (DCKAP CINEMAS) பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை  தயாரித்துள்ளனர்.