கணம் – விமர்சனம்

நடிப்பு: ஷர்வானந்த், ரமேஷ் திலக், சதீஷ், அமலா, ரவி ராகவேந்திரா, நாசர், ரிது வர்மா மற்றும் பலர்

இயக்கம்: ஸ்ரீகார்த்திக்

தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

மக்கள் தொடர்பு: ஜான்சன்

’டைம் மிஷின்’ எனும் கற்பனை எந்திரத்தைப் பயன்படுத்தி, கடந்த காலத்திற்கும் எதிர்காலத்துக்கும் போய்வரக் கூடிய ’டைம் டிராவல்’ எனும் அறிவியல் புனைவுப் பயணத்தை மையமாகக் கொண்டு ‘இன்று நேற்று நாளை’, ‘24’, ’டிக்கிலோனா’ போன்ற சயன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படங்கள் அபூர்வமாக தமிழில் வந்துள்ளன. எனினும், முதல் முறையாக இத்தகைய சயன்ஸ் ஃபிக்‌ஷன் கதையில் தீவிரமான அம்மா செண்டிமெண்டைப் புகுத்தி முற்றிலும் புதுமையான, உணர்வுப்பூர்வமான, உள்ளத்தை அள்ளும் படமாக ‘கணம்’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இறந்துபோன அம்மாவை, அவரது மகன் டைம் மிஷினில் பயணித்து மீண்டும் சந்திக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்ற உன்னத கற்பனை தான் இப்படத்தின் ஒருவரிக் கதை.

கதையின் நாயகனான ஷர்வானந்த், சிறுவயதிலேயே தன் அம்மா அமலாவை இழந்து, அப்பா ரவி ராகவேந்திராவுடன் வாழ்ந்து வருகிறார். அம்மாவின் இழப்பு அவருக்கு ஈடு செய்ய முடியாததாக இருந்து வருகிறது.

ஷர்வானந்துடன் குழந்தைப் பருவத்தில் இருந்து ரமேஷ் திலக்கும், சதீஷும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். வீட்டு புரோக்கராக இருக்கும் ரமேஷ் திலக், சிறுவயதில் நன்றாக படித்திருந்தால் இப்போது நல்ல வேலைக்கு சென்றிருக்கலாம் என்று ஏங்குகிறார். இவர்களின் இன்னொரு நண்பரான சதீஷ்,  சிறு வயதில் ஒதுக்கித் தள்ளிய பள்ளித் தோழியை, கடந்த காலத்துக்குப் போய் காதலில் வீழ்த்த ஆசைப்படுகிறார்.

ஒருநாள் இந்த மூன்று நண்பர்களும் விஞ்ஞானி நாசரை சந்திக்க நேருகிறது. டைம் மிஷின் ஒன்றைத் தயாரித்து வைத்திருக்கும் நாசர், இவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க இவர்களை கடந்த காலத்துக்கு – அதாவது 1998ஆம் ஆண்டுக்கு – அனுப்பி வைப்பதாகவும், அதற்கு கைமாறாக, தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்.

இதற்கு சம்மதம் தெரிவிக்கும் மூவரும் கடந்த காலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்போது இவர்களுக்கு ஏற்படும் அதிசய அனுபவங்கள் என்ன? இவர்களின் பிரச்சினைகள் தீர்ந்ததா? ஷர்வானந்தின் அம்மா அமலா உயிரிழப்பதை தடுத்தார்களா? விஞ்ஞானி நாசர் கேட்ட உதவி என்ன? அதை இவர்கள் செய்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கணம்’ படத்தின் மீதிக்கதை.

0a1b

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஷர்வானந்த், இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனது சிறு பருவத்தில் இழந்த அம்மாவை மீண்டும் சந்திக்கும்போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பு நம்மை நெகிழச் செய்கிறது. அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளிலும், அம்மாவை மீண்டும் இழந்துவிடுவோமோ என்று தவிக்கும் காட்சிகளிலும் நம்மை கலங்க வைக்கிறார் ஷர்வானந்த்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றி, முதல் முறையாக அம்மா வேடத்தில் நடித்திருக்கும் அமலா, நிஜ அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார்.

சதீஷ், ரமேஷ் திலக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதோடு, அவ்வபோது நம்மை சிரிக்கவும் வைக்கிறார்கள்.

நாயகி ரீத்து வர்மாவுக்கு அதிக வேலை இல்லை; என்றபோதிலும் கொடுக்கப்பட்ட வேலையை குறைவில்லாமல் நிறைவாக செய்திருக்கிறார்.

விஞ்ஞானியாக வரும் நாசர், நாயகனின் அப்பாவாக வரும் ரவி ராகவேந்திரா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

எவர் கிரீன் கதையம்சமான தாய் பாசத்தை, முற்றிலும் வித்தியாசமான திரைக்கதையில் நேர்த்தியாகச் சொல்லி, அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் ஈர்ப்பதில் வெற்றி பெற்றுள்ள இயக்குனர் ஸ்ரீகார்த்திக்கிற்கு பாராட்டுகள். எதிர்காலத்தில் இதுபோல் இன்னும் பல நல்ல படங்களை அவரிடம் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

ஜேக்ஸ் பிஜோய் இசை, சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, ஶ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் படத்துக்கு பலம்.

’கணம்’ – காலத்தை வென்ற பாசப் பயணம்!