திமுக கூட்டணியில் கமல் கட்சி இணைந்தது: அதிகாரபூர்வ அறிவிப்பு

திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று இணைந்தது. வருகிற மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடாமல், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வார். அவருக்கு 2025-ல் நடக்கும் மாநிலங்களைத் தேர்தலில் திமுக ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் ஒதுக்கும்.

இதற்கான ஒப்பந்தம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் இன்று சந்தித்துப் பேசியபோது கையெழுத்தானது.

ஒரு மாநிலங்களவை சீட்டுக்குள் கமல்ஹாசனை திமுக அடைத்தது எப்படி என்பது குறித்து கூறப்படுவதாவது:

திமுக கூட்டணியில் இணைந்து 2 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியும் தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்குப்  பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்தினார் நடிகர் கமல்ஹாசன். ஆனால், ”ஒரு மக்களவைத் தொகுதி தருகிறோம்; உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள்” என கமலிடம் திமுக தலைமை சொல்லியது. அதை கமல் ஏற்கவில்லை. ”தனிச் சின்னத்தில் தான் நிற்போம்” என கூறிவிட்டார்.

இதில் திமுக தலைமைக்கு உடன்பாடில்லை. இதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “அப்படி என்றால் எந்த தொகுதியை எதிர்பார்க்கிறீர்கள்” என கமலிடமே கேட்கப்பட்டது. அவரோ, “தென்சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குங்கள்” என கேட்டார். இதில் தென்சென்னை மட்டும் திமுகவிடமும், மற்றதெல்லாம் திமுக கூட்டணி கட்சிகளிடமும் தற்போது உள்ளன..

சென்னையைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யக் கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடு.அதனால், தென்சென்னை கிடையாது என கமலிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. மற்ற தொகுதிகளை வைத்திருக்கும் கூட்டணிக் கட்சிகளிடம் திமுக பேசியது. யாரும் கமலுக்காக தொகுதியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. இதனை கமலிடம் தலைமை தெரிவித்ததுடன், “கூட்டணி கட்சிகளிடம் நீங்கள் பேசிப்பாருங்கள்; தொகுதி கிடைத்தால் எங்களுக்கு சந்தோசமே” என்றும் சொல்லியிருக்கிறது.

கமலோ, கூட்டணிக் கட்சிகளிடம் எப்படி பேசுவது என தயங்கி அந்த முயற்சியை எடுக்கவில்லை. இந்த நிலையில், இதனை திமுகவிடம் தெரிவிக்க, திமுகவோ, ‘மக்களவைத் தொகுதி தான் முக்கியம் என்றால் எங்கள் சின்னத்தில் நில்லுங்கள்; தேனி தொகுதியை ( காங்கிரஸ் தோற்ற தொகுதி ) ஒதுக்குகிறோம். ஓ.கே.வா? ‘ என கேட்க, கமல் அதை மறுத்துவிட்டார்.

இப்படி இருந்த நிலையில்தான், ”மக்களவைத் தொகுதி ஒதுக்க வாய்ப்பில்லை என்பதால் மாநிலங்களவை சீட் ஓ.கே. வா? அது உங்களின் தனித்தன்மையை பாதிக்காது” என சென்டிமெண்ட்டாக தி.மு.க தலைமை பேசியது.

வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் கமல்.