“பதவியை கிரீடமாக பார்க்கக் கூடாது:” தலைவர்களுக்கு கமல் அறிவுரை!
உலக புத்தக நாள் விழாவையொட்டி, கோவை சப்னா புக் ஹவுஸ் சார்பில் பொதிகை தொலைக்காட்சி நிலையத் தலைவர் மற்றும் எழுத்தாளரான ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘மகாத்மா காந்தியின் சத்தியசோதனை’ தமிழ் புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி, கோவை சுகுணா அரங்கில் நடைபெற்றது.
புத்தகத்தை வெளியிட்டு நடிகர் கமலஹாசன் பேசியதாவது:
ஹே ராம் படம் எடுத்தபோதுதான் காந்தி மீதான மதிப்பும், மரியாதையும் அதிகமானது. தலைவர்களாக இருப்பவர்கள் அந்தப் பதவியை கிரீடமாக பார்க்கக் கூடாது. பதவியை எப்போதும் செருப்பாகப் பார்க்க வேண்டும். காந்தி, ஒரு தொண்டனாக இருந்ததாலேயே ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அடையாளமாகவும், உலக குடிமகனாகவும் திகழ முடிந்தது.
அஹிம்சை கொள்கையை அவ்வளவு சீக்கிரம் யாரும் எளிதில் கையில் எடுத்துவிட முடியாது. அஹிம்சை குறித்து முழுமையாகப் புரிந்து கொண்டதால்தான் காந்தியால் எடுக்க முடிந்தது. அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டு பேசுபவர்கள் மிகவும் குறைவு. வாக்குக்காகவும், பதவிக்காகவும் பேசி வருபவர்கள்தான் அதிகம். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், இங்கு அவரது பெயரை மட்டுமே வைத்து அரசியல் நடத்தப்படுகிறது.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.