கமல் ஆய்வு எதிரொலி: “கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்!” – ஜெயக்குமார்

நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆய்வு செய்துள்ளதை அடுத்து, “கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
‘ட்விட்டரில் அரசியல் செய்ய வேண்டாம் களத்தில் இறங்கட்டும்’ என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் ,அவர் இன்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அவரது களப் பிரவேசம் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளலாம். ஆலோசனைகள் சொல்லலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கூறப்படும் கருத்துகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்” எனக் கூறினார்.
முன்னதாக, சென்னை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில், “எண்ணூர் கழிமுக பகுதியில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.