பிராமணர்களின் கட்டுப்பாட்டில் கமல் கட்சி: மக்கள் நீதி மய்யம் மாநில துணைச் செயலாளர் சரமாரி குற்றச்சாட்டு!
விலகல் கடிதம் 11-03-2022
பெறுநர்:
டாக்டர்.கமல்ஹாசன்,
தலைவர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி.
அனுப்புநர்:
ம.தொல்காப்பியன்,
மாநில துணைச் செயலாளர்,
செய்தி & ஊடகப் பிரிவு,
காஞ்சி மண்டலப் பொறுப்பாளர்,
மக்கள் நீதி மய்யம் கட்சி.
பொருள்: கட்சியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வது தொடர்பாக.
தலைவர் அவர்களுக்கு,
இனிய வணக்கத்துடன் ம.தொல்காப்பியன்.
மேற்கண்ட நான், மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸின் முன்முயற்சியால் தங்களால் மேற்கண்ட பதவி வழங்கப் பட்டவன்.
கட்சி தொடங்குவதற்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்பே,
‘தலைவா, தலைமை ஏற்க வா’
எனும் இணைய அமைப்பைத் துவங்கி உங்களை அரசியலுக்கு அழைத்தவன் நான் என்கிற வகையில், எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களால் இந்தப் பதவியில் இருந்தும் அதே நேரம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்தும் விலகிக் கொள்ள முடிவு செய்து இருக்கிறேன்.
கசப்பான அனுபவங்கள் சில:
1.சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒன்று, ஒரு வார காலம் தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி. ஓட்டலில் நடந்தது. அதில், நீங்கள், சுரேஷ் ஐயர் என்பவர் குறித்து எங்களிடம் சிலாகித்து பேசி அறிமுகப் படுத்தினீர்கள்.
அந்த சுரேஷ் ஐயர் கட்சியின் உறுப்பினர் கூட கிடையாது. ஆனால், அவர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்களாகிய எங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், அதை எவ்வாறு விரைந்து செய்ய வேண்டும் என்றெல்லாம் பாடம் நடத்தினார்.
சுரேஷ் ஐயர் முத்தாய்ப்பாக சொன்னது இதுதான்: “உங்கள் கையில் இருக்கும் போனில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கி இருக்கிறது. உங்கள் போனில் ஆயிரம்(10,00) காண்டாக்ட்டுகள்(CONTACTS) இருக்கின்றன. அவற்றில் இருந்து குறைந்தபட்சம் முந்நூறு(300) காண்டாக்ட்ஸுகளை நமது கட்சியின் பக்கம் கொண்டு வந்துவிட்டால் போதும். இது போல ஒவ்வொருவரும் 300,300 பேர்களை கட்சிக்குள் கொண்டு வந்து வந்தால், நாம் இந்த சட்டமன்ற தேர்தலில் எளிதாக ஜெயித்து விடலாம்.”
இந்த நபரைத்தான் நீங்கள் எங்கள் முன்னால் புகழ்ந்து, போற்றி பேசினீர்கள். அப்போதுதான் எனது மனதில் முதல் தெறிப்பு ஏற்பட்டது.
2.அடுத்து, பொதுக் குழுவில் நீங்கள் பேசிய ஒரு வசனம் ஆம்! அது வசனம்தான். பேச்சு என்று சொல்ல மாட்டேன். அந்த பொதுக் குழுவின் மேடையில், அதே சுரேஷ் ஐயர், கட்சியின் வெற்றிச் சூத்திரத்தை விவரித்த பிறகு நீங்கள் இவ்வாறு பேசினீர்கள்,
“விருப்பம் உள்ளவர்கள் இங்கே இருக்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் உடனடியாக இப்பொழுதே வெளியெறலாம். இதோ கதவுகள் திறந்தே இருக்கின்றன”
ஓர் அரசியல் தலைவர் பேசும் பேச்சா இது? உண்மையில் நான் குழம்பித்தான் போனேன். ஒன்று சேர்க்கும் தகைமைப் பண்பு உங்களிடம் இல்லை என்பதையும் வெட்டி வீசும் தனிமைப் பண்பு மட்டுமே உங்களிடம் இருப்பதையும் கண்டு வியந்த தருணம் அது.
3.தொடர்ந்து உங்கள் பேச்சு நம்பிக்கையை குலைப்பதாக இருந்து வந்தது. “யாரும் முழு நேரமாக கட்சியில் வேலை செய்ய வேண்டாம். அது அவசியமும் இல்லை. பார்ட்-டைமாக கட்சிப் பணி ஆற்றினாலே போதும்.”
கட்சிப் பணி செய்வது என்பது, ஒருவர் தனது பணத்தையும், நேரத்தையும், நற்பெயரையும் செலவிடுவது ஆகும். கட்சிக்காக வேலை செய்யும்போது எத்தனை எதிர்ப்புகள், இன்னல்கள். சவால்கள், கண்டனங்கள், தகராறுகள். சண்டை சச்சரவுகள், அடிதடிகள், கெட்ட பெயர்கள், போலீஸ் புகார்கள், கோர்ட் வழக்குகள் ஏற்படும் என்பது களத்தில் வேலை செய்பவனுக்குத்தான் தெரியும். சொந்த ரத்த உறவுகளையே பகைத்துக் கொள்ள வேண்டிய சூழலைக் உருவாக்கும் ஆபத்தான பணி இது.
அப்படி வேலை செய்யும் ஒருவனைப் பார்த்து ‘பார்ட்-டைமாக வேலை பாருங்கள்’ என்று சொல்வது எத்தகைய மன நிலையில் இருந்து உருவாகி வருவது?
“உங்கள் பொருளுக்கோ, நேரத்துக்கோ, பெயருக்கோ, வாழ்வாதாரத்துக்கோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதற்கு கட்சி பொறுப்பு ஆகாது. என்னிடம் வந்து எதுவும் கேட்கக் கூடாது. விருப்பம் இருந்தால் வேலை செய்யுங்கள். இல்லை என்றால் செல்லுங்கள். அனைத்துகும் நீங்களே பொறுப்பு. நான் எந்த வகையிலும் பொறுப்பாளி அல்ல!” என்பதைத்தானே உங்கள் ‘பார்டைம் அரசியல் பணி’ எனும் பேச்சு வெளிப்படுத்துகிறது.
‘நாட்டின் வளர்ச்சிக்கு நான் பொறுப்பு’ என்று சொல்வதால்தானே ஒருவன் ‘தலைவன்’ என்கிற தகுதியைப் பெறுகிறான்.
நாடு என்பது மக்கள் அல்லவா. நாட்டின் வளர்ச்சி என்பது மக்கள் வளர்ச்சி அல்லவா. நாட்டின் வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது என்பது மக்கள் வளர்ச்சிக்கான பொறுப்பை ஏற்பதுதானே?
கட்சித் தொண்டர்களின் அரசியல் வாழ்வுக்கே கிஞ்சித்தும் பொறுப்பு ஏற்க விரும்பாத உங்களால் இந்த நாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்கு எவ்வாறு செவி சாய்க்க முடியும்? மக்களின் முனேற்றத்திற்கு உழைக்கும் பொறுப்பான தலைவராக உங்களால் எப்படி செயல்பட முடியும்… தலைமைப் பண்பை குழிதோண்டி புதைத்த பின்னால்?
4.நாடு முழுக்க ‘சங்கி’ என்று மதவாத அரசியல் செய்பவர்களை மக்கள் ஏசிக்கொண்டு இருக்கும்போது நீங்கள் ‘சங்கி’யா சொலூஷன்ஸ்’ எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை அமைக்கிறீர்கள்.
அந்த நிறுவனத்துக்கு சுரேஷ் ‘ஐயர்’ என, தனது பெயரிலேயே சாதியை பெருமிதமாகக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஒரு நபருக்கு தலைமை பொறுப்பை கொடுக்கிறீர்கள். கட்சியின் லகானைக் நான்கே நான்கு பிராமணர்களிடம் கொடுத்து இருக்கிறீர்கள். அந்த பிராமணச் சாதி பெருமைப் பேசும் நபர்களால் உங்களைச் சுற்றி ஒரு வளையத்தை அமைத்து இருக்கிறீர்கள்.
‘இவன் படிப்பான்
இவன் பலசாலி
இவன் காசு பண்ணுவான்
இவன் பாடுபடுவான்’
எனும் ஆரியக் கோட்பாட்டில் நீங்கள் இத்தனை பிடிப்புக் காட்டுவீர்கள் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது. உங்களுடைய இந்த மன நிலையை அறிந்தபோது நாங்கள் மனதுக்குள் அவமானப் பட்டுப் போனோம்!
5.சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே ‘தேர்தல் அறிக்கை வரைவுக் குழு’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், அதில் என்னை ஓர் உறுப்பினராக நியமிக்க வேண்டும் எனவும் திரு.முரளி அப்பாஸிடமும், திரு. மௌரியா அவர்களிடமும் கோரிக்கை வைத்து வந்தேன். திரு. சினேகன், திரு.தட்சிணாமூர்த்தி, திரு.சத்தியமூர்த்தி போன்றவர்களிடமும் இது குறித்து பேசி வந்தேன்.
ஆனால் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று அறிந்துகொண்ட போது, நானே தன்னிச்சையாக ஓர் ‘அரசியல் வரைவை’ உருவாக்கி அதை திரு.மௌரியா அவர்களிடம் சமர்ப்பித்தேன். அதன் மீது என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
ஒரு நாள், திடீரென்று திரு.சந்தோஸ் பாபு ஐஏஎஸ். அவர்களை தேர்தல் அறிக்கை தயாரிக்க நீங்கள் பணித்த செய்தி கேட்டு அதிர்ந்தேன். அவரைச் சந்தித்த போது நான் தயாரித்துக் கொடுத்த ‘தேர்தல் வரைவு’ அவரது டேபிளில் இருப்பதை எனக்குக் காட்டினார். ஆனாலும் அது குறித்து அவர் எதுவும் என்னிடம் பேசத் தயார் இல்லை.
கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க, இவரைப்போல தகுதியற்ற ஒருவரை நியமிக்க உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது.
ஒரு மலையாளியை, தமிழக மக்களின் அரசியல் உணர்வுகளை அறிந்திருக்க சிறிதும் வாய்ப்பே இல்லாத ஒரு வேற்றுமொழிக்காரரை, சமூக மனதின் சலனங்களை அறிந்திருக்காத ஓர் அதி உயர்த்தட்டு எலைட் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தி, தமிழக மக்களுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்கச் சொல்லுகிறீர்கள் என்றால் நீங்கள் யார்? நீங்கள் எத்தகையவர்? நீங்கள் விரும்புவதுதான் என்ன? நீங்கள் யாருக்காக வேலை செய்துகொண்டு இருக்கிறீர்கள்… என நான் குழம்பிப் போனேன்!
6.திமுக ஆட்சி அமைந்ததும் தமிழக அரசின் நிதி அமைச்சர் ஒரு அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். முந்தைய ஆட்சியாளர்களின் நிதி. நீதி. நிர்வாக முறைகேடுகள் குறித்த வெள்ளை அறிக்கை அது. அந்த அறிக்கை மீது நீங்கள் ஒரு விமர்சனத்தை வைத்தீர்கள். அதை விமர்சனம் என்று கூட சொல்ல முடியாது. கேலி செய்தீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
“திமுக மஞ்சள் நோட்டீஸ் விட்டிருக்கிறது”
என்று சொல்லி சிரித்தீர்கள். அந்த நொடி முதல் நான் உங்களிடம் இருந்து அறவே விலகி விட்டேன்.
இதற்கு முன் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத ஒரு அரியச் செயலை திமுக செய்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் நடந்த அரசியல் அவலங்களை, நிதி மோசடிகளை, பொருளாதார குற்றங்களை ஆதாரப் பூர்வமாக கோடிட்டுக் காட்டியதன் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறது. அந்த அறிக்கையை ஆதாரமாக வைத்துக் கொண்டு விசாரணையை முடுக்கி விட வேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தபோது நீங்கள் ஒருவர்தான் இப்படி கேலி செய்த ஒரே அரசியல் தலைவர். நான் அப்போதே கட்சியில் இருந்து மனதளவில் வெளியேறி விட்டேன்.
7.இரண்டு நாட்களுக்கு முன்னால், திரு. முரளி அப்பாஸ் என்னிடம் பேசினார்,
“நண்பரே! கட்சியில் உங்கள் செயல்பாடு எதுவுமே இல்லை என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். அதனால் உங்கள் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்கலாம் என்று என்னிடம் சொல்கிறார்கள். எனவே நான் உங்களை இந்தப் பதவியில் இருந்து விடுவித்து வேறு ஒரு பதவிக்கு உங்களை பரிந்துரை செய்கிறேன்”
இத்தகைய தருணம் ஒன்றை எதிர் பார்த்து இருந்த நான் அவருடைய நோக்கத்தை வரவேற்றேன். இருப்பினும் அதைவிடவும் மேலானதாக இருக்கும் என நான் நினைத்தது என்னவென்றால் ‘கட்சியில் இருந்து முற்றிலும் விலகி விடுவது’ என்பதுதான்,
எனவே,
சொல்லப்பட்ட சில காரணங்களுக்காகவும், இங்கே சொல்லப்படாத வேறுபல காரணங்களுககாவும் நான் கட்சியில் இருந்து முற்றிலுமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்பதை அன்புடன் அறிவிக்கிறேன்!
நன்றி வணக்கம்!
ம.தொல்காப்பியன்
@9840800917