“நாம் எப்போதுமே அரசியலில் இருக்கிறோம்”: ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கமல் விளக்கம்!

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது கருத்துகளை ட்விட்டர் தளத்திலும், செய்தி சேனல்களிலும் தெரிவித்து வருகிறார். குறிப்பாக, ஜல்லிக்கட்டு உரிமை போராட்டம், அரியலூர் நந்தினி கொலைக்கு நீதி கேட்கும் போராட்டம், சசிகலா முதல்வர் ஆக எதிர்ப்பு, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் ஆகிய விவகாரங்களில் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கள் தமிழக மக்கள் மத்தியில் பரவலாக வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் கமல்ஹாசனை சந்தித்துப் பேச கமல் நற்பணி இயக்க நிர்வாகிகள் நேரம் கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளையும் வழக்கறிஞர்களையும் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து கமல் நற்பணி இயக்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “கமல்ஹாசனை சந்தித்து நீண்ட நாட்கள் ஆனதால், அவரை சந்தித்தோம். அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம்.

இந்த சந்திப்பின்போது, ‘நாம் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பினோம்.

அதற்கு கமல்ஹாசன், ‘நாம் எப்போதுமே அரசியலில் இருக்கிறோம். வாக்களிப்பதோடு நிறுத்திக் கொள்வோம். ஓட்டுக் கேட்டு போவதெல்லாம் நமக்கு தேவையில்லை. நமது வேலைகளை கவனிப்போம்’ என்றார். அதே நேரத்தில் முன்பை விட அதிக முனைப்புடன் இயக்கப் பணிகளைக் கவனிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்” என்றார்.