“எமது இயக்கத்தினர் கைது செய்யப் பட்டிருப்பது அரசியல் வன்மத்தை காட்டுகிறது”: கமல் காட்டம்!
இயக்க பொறுப்பாளர் உட்பட கமல் நற்பணி இயக்கத்தினர் சிலர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என்று கமல்ஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் தொடர்பான தனது கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் வழியாகவும், தொலைக்காட்சி பேட்டிகள் மூலமாகவும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய மாபெரும் போராட்டத்தை கமல் ஆதரித்தும் ஊக்குவித்தும் கருத்துகள் வெளியிட்டார். கொடூரமாக கொலை செய்யப்பட்ட அரியலூர் நந்தினிக்கு நீதி கோரும் போராட்டத்தில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார்.
வி.கே.சசிகலா முதல்வராக முயன்றபோது, அதை கமல் பகிரங்கமாக எதிர்த்தும், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் கருத்துக்கள் தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தபோது, அதை கமல் வரவேற்றார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சசிகலாவின் பினாமி ஆட்சி பதவி ஏற்றதை அவர் எதிர்த்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சாடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதை காரணம் காட்டி, கமல் நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர் சுதாகர் உள்ளிட்ட கமல் நற்பணி இயக்கத்தினர் சிலரை தற்போது கைது செய்துள்ளது. இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “இனி மக்கள்நீதி நாடு காக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேச வைக்கிறது.
தமிழக ஜல்லிகட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இது எமது பெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது.
நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறி மாறி வரினும் நம் கட்சியற்ற கொள்கை மாறாது. எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி பொதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்ள வரை செய்வோம். அவர் பல முறை வருவார் போவர். நிரந்தரம் நம்நாடு” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.