“ஜிஎஸ்டி வரியை மோடி அரசு குறைக்கா விட்டால் சினிமாவுக்கு முழுக்கு”: கமல் அறிவிப்பு!
மத்திய அரசின் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்படும் என்றும், வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, திரைத்துறைக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க இருப்பது குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், “சினிமா என்பது கலை. அது சூதாட்டம் அல்ல. புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி முறைப்படி, திரைப்பட தயாரிப்புக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம்.
ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இணையாக மாநில மொழிப் படங்களுக்கு வரி விதிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகாத ஒன்று.
இந்தி மொழி திரைப்படங்களுக்கு சந்தை வேறு, மாநில மொழி படங்களுக்கான சந்தை வேறு. மேலும், சூதாட்ட விடுதிகளுக்கும் 28 % வரி, திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்பது?.
இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட நாடு. இங்கு ஒற்றை கலாச்சாரம், ஒற்றை பழக்க வழக்கம் ஆகியவற்றை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண். இது போன்ற நடவடிக்கைகள் அங்கு தான் இட்டுச் செல்லும்
மாநில மொழி படங்களுக்கு இந்த அளவுக்கு வரி விதித்தால் அது மூழ்கும் நிலையே உருவாகும். இந்தி திரையுலகம் ஜிஎஸ்டி வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்
திரைப்படத் துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சினிமா டிக்கெட்டிற்கு 28 சதவிகிதம் வரி விதிக்கும் முடிவை கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும்.
28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால், நான் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் எல்.சுரேஷ் பேசுகையில், இதுபோல் வரிவிதிப்பதால் பல நாடுகளில் திரைத்துறை நலிவடைந்துள்ளது. ஜிஎஸ்டி வரியால் திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்படும். ஜிஎஸ்டி வரியை 12 முதல் 18 சதவிகிதத்துக்குள் நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.