”சினிமாவின் ஜனநாயக குரலை ஒற்றை சட்டம் மூலம் ஒழித்துவிட நினைக்கிறது மத்திய அரசு!” – கமல்ஹாசன்
இன்றைய நாளிதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் எழுதியிருப்பதாவது:-
ஒரு சமூகத்தின் படைப்புச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது அமைதி காக்க முடியுமா? சினிமாவால் சமூக மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை. அப்படிப்பட்ட சினிமாக்களை உருவாக்கியும் இருக்கிறேன். தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக ஒரு படைப்பு வெளியாவதைத் தடுக்க என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நேரடியாக எதிர்கொண்டவன் நான். இப்போது படைப்புச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் தங்களுக்கேற்ப இன்னும் சுலபமாக வளைத்து ஒடித்துக்கொள்ள மத்திய அரசு முயல்கிறது. ‘ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021’ பற்றித்தான் குறிப்பிடுகிறேன். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும் முன் பொதுமக்களின் கருத்தைக் கேட்டிருக்கிறது அமைச்சகம்.
என்னுடைய முன்னோடியும் ஆசிரியருமான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, சினிமா எனும் கலைச்சாதனத்தின் முழு ஆற்றலையும் அறிந்திருக்கவில்லை. தந்தை பெரியாரும் சினிமாவின் வலிமையை உணர்ந்திருக்கவில்லை. மக்களை மேம்படுத்தப் போராடிய இந்த நேர்மையாளர்கள் சினிமாவின் சக்தியை உணர்ந்திருந்தால் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும் எனக் கற்பனை செய்து பார்க்கிறேன். ஒரு கலைஞனாகவும் படைப்பாளியாகவும் சினிமாவின் வலிமையை முழுவதுமாக உணர்ந்திருக்கிறேன். என் ஆளுமையில் வளர்சிதை மாற்றங்களை உருவாக்கியதே சினிமாதான்.
ஆபத்தான மசோதா
சினிமா, இயக்குநரின் ஊடகம்தான். ஆனாலும்கூட அது மக்களைத்தான் பிரதிபலிக்கிறது, பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சினிமா, ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்கிறது. இந்தக் குரலைத்தான் ஒற்றைச் சட்டத்தின் மூலம் ஒழித்துவிடலாமென நினைக்கிறது மத்திய அரசு. பொதுமக்கள் பார்வைக்குத் தகுந்தது எனத் தணிக்கைச் சான்றிதழ் பெற்று வெளியாகும் திரைப்படங்களை மறுபரிசீலித்து, தணிக்கை செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு இந்த மசோதா அளிக்கிறது. இது மிக ஆபத்தானது. ஆள்வோர்க்குக் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் வலிமையை உருவாக்கி அளிக்கிறது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதாவின் ஆபத்தான அம்சங்களைப் புரிந்துகொள்ள நாம் இப்போதிருக்கும் நடைமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். தற்போதைய தணிக்கை விதிகளே அரதப் பழசானவை. பல விதிகள் தேவையற்றவை. காலத்துக்கேற்ப புதுப்பித்துக்கொள்ளாதவை. கலைஞர்கள் தங்களை சுயதணிக்கைக்குள் உட்படுத்திக்கொள்வதே சரியான நடைமுறையாக இருக்க முடியும். இப்போது அரசியலர்களும் அதிகாரிகளும் திரைப்படத் தணிக்கையை ஆக்கிரமித்து வைத்திருக்கும் பரிதாப நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பதே நெடும் காலமாக இங்கிருக்கும் கோரிக்கை. மத்திய அரசுக்கு இந்த அதிகாரத்தை அளிப்பது நிலைமையை இன்னமும் மோசமாக்கிவிடும்.
திரைப்படத் தணிக்கை திருத்த மேல்முறையீட்டு ஆணையத்தைக் கடந்த ஏப்ரலில் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு இருந்த ஒரே வாய்ப்பையும் இல்லாமல் ஆக்கும் முயற்சியில் வென்றுவிட்டார்கள். இன்று இருக்கும் ஒரே வழி உயர் நீதிமன்றத்தை நாடுவதுதான். ஆனால், நீதிக்காகப் போராடும் வாய்ப்பும் வசதியும் பலருக்கும் வாய்ப்பதில்லை என்பது கூடுதல் சோகம். உச்ச நீதிமன்றத்தால் ‘அரசமைப்புக்கு முரணானது’ எனக் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை இந்த மசோதா மூலம் மத்திய அரசு கைப்பற்ற நினைக்கிறது. முதன்மைச் சட்டத்தின் பிரிவு 6 (1) அரசமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.சங்கரப்பா குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பின் அடிநாதமான ‘சட்டத்தின் ஆட்சி’ எனும் கருத்தாக்கத்துக்கு ஊறுவிளைவிக்கிறது இந்தச் சட்டப்பிரிவு.
மத்திய அரசின் முயற்சி
ஒரு படைப்பின் மீது எழும் புகார்களின் மீது தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்க மத்திய அரசு முயல்கிறது. தமிழக அரசு ஒரு கற்பனையான புகாரையும் இல்லாத சூழலையும் காரணம் காட்டி என் திரைப்படத்தை முடக்க முயன்றது. தணிக்கைச் சான்றிதழைப் பெற்ற பிறகும், என் சகோதரர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டிய பிறகும் தமிழக அரசு இதைச் செய்தது. அரசியல் சூழ்ச்சிகளால் சொந்த மாநிலத்தின் திரையரங்கக் கதவுகள் எனக்கு மூடப்பட்டன. இதேபோல எந்த அரசாங்கமும் எந்தப் படைப்பையும் எப்படி வேண்டுமானாலும் முடக்கிப்போடும் அதிகாரத்தை இந்த மசோதா அளிக்கிறது.
திரைப்படத்தின் மீது பெறப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் ஆற்றலும் அதிகாரமும் அரசுக்கு இருக்கையில் தணிக்கைச் சான்றிதழ் பெற்று வெளியாகும் திரைப்படத்தைத் தடை செய்வது ஏற்புடையதல்ல என்று என் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் சமீபத்திய தடுமாற்றங்களை மத்திய அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டு அதன் அதிகாரங்களைக் கைப்பற்றத் துடிக்கிறது. இந்தப் புதிய மசோதா படைப்புச் சுதந்திரம், பேச்சுரிமை, விமர்சிக்கும் உரிமை ஆகியவற்றைத் தடைசெய்யும் அதிகாரத்தை இயல்பிலேயே கொண்டிருக்கிறது. அடிப்படைவாதிகள் அளிக்கும் அற்பமான புகார் மனுக்களைக் கொண்டு எந்தப் படைப்பையும் எளிதாகத் தடைசெய்துவிட முடியும்.
சாமானியர்களின் குரலும் வலுப்பெற்றுவரும் இணையப் புரட்சி யுகத்தில் வாழ்கிறோம். அரசோ மனிதர்களின் குரலை அடக்கப் பார்க்கிறது. சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் குரல் ஒலித்துவிடக் கூடாது என நினைக்கிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஜனநாயக சக்திகள் இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தங்கள் குரலை வலுவாக வெளிப்படுத்த வேண்டும். இதைச் செய்வதில் ஊடகங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஏதேனும் தயக்கம் இருக்குமானால், இதை முன்னெடுத்துச் செல்லும் முன்னத்தி ஏராக ‘மக்கள் நீதி மய்யம்’ திகழும்.
இது மய்யவாதத்தின் யுகம்
நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் மக்களின் கருத்தைக் கேட்கிறது மத்திய அரசு. இதற்கென ஜூலை
2 வரை அவகாசம் குறித்திருக்கிறது. இது போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட நாம் அனுமதித்தால், அது எதிர்வரும் நம் சந்ததிகளையும் நிச்சயம் பாதிக்கும். இது வலதா இடதா என வாதிக்கக் கூடிய காலம் இல்லை. இது மய்யவாதத்தின் யுகம். இங்கு நடந்துகொண்டிருப்பது போர். ஆனால், ரத்தம் சிந்தாமலே போராடி வென்றாக வேண்டிய போர் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
‘ஓ… அடடா… மீண்டும் அந்த அகிம்சாவாதம் தலைதூக்கிவிட்டதே’ என சர்வாதிகாரிகள் கதறும் ஓசை கேட்கிறது. நான் அவர்களுக்கு உறுதியான குரலில் அமைதியாகச் சொல்கிறேன்: வன்முறை எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் அகிம்சை மீண்டும் மீண்டும் தோன்றும். சர்வாதிகாரத்தை வெல்லும்! சம்பவாமி யுகே யுகே…
இவ்வாறு கமல்ஹாசன் எழுதியுள்ளாஎ,