‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்கு கமல் பாராட்டு: “மகாத்மாவை பாதசாரிகளிடம் தேடுங்கள்!”

சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை  அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . வருகிற (ஜூன்) 22ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குனராக இருந்த விக்கி  இப்படத்தை  இயக்கியுள்ளார். பாலமுரளி பாலா இசையமைத்துள்ளார். குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது,

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் முன்னோட்டம் பார்த்த நடிகர் கமல்ஹாசன்,  இப்படத்தைப் பாராட்டி கூறியதாவது:

அஹிம்சை தான்  சிறந்த வீரம் என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு இந்தியா. மகாவீரர் காலம் தொடங்கி  இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி வளர்ந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள், அவர்களின் வீரத்தால் அசாதாரண வீரர்களாக இருந்திருப்பது புதிதல்ல. காந்தியைப் பார்த்திருக்கிறோம். நேருவைப்   பார்த்திருக்கிறோம் .ராஜாஜி எவ்வளவு தைரியசாலி என்று தெரியும். அம்பேத்கார் பற்றியும் தெரியும். இப்படி சாமான்யர்கள் தங்கள் வீரத்தால் எவ்வளவு உயரம்  சென்றவர்கள் என்பதை ஒவ்வொரு  காலத்திலும் , ஒவ்வொரு படியிலும் பார்த்திருக்கிறோம்.  இவர்களால் தான்  இந்தியச் சக்கரம்  சுழல்வதாக  நம்புகிறேன்.

மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பாராளுமன்ற கிணற்றுக்குள்  தேடினால், கிடைக்க மாட்டார்கள். மகாத்மா மாதிரியானவரை  பாதசாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள். அப்படித் தேடாமல் கிடைத்தவர் தான் டிராஃபிக் ராமசாமி. இவரை ஊடகங்கள் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு. இவரை ஒரு எக்ஸென்ட்ரிக் என்பதைப் போல  சித்தரித்ததுண்டு. ஆனால் டிராஃபிக் ராமசாமி எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு தைரியத்தைச் செயல்படுத்திய  வீரர் இவர்.   அப்படிப்பட்டவரை,  இருக்கும்போதே படமாக்கும் முயற்சி, அதுவும் அவரே பார்த்துப்  பாராட்டி ரசிக்கும்படி படமாக எடுத்திருப்பது  பாராட்டுக்குரியது.  படக் குழுவுக்கு இதுவே முதல் வெற்றி. அடுத்து வணிக வெற்றியும் வந்து சேரும்.

எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில்  படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர். அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல்  படங்கள் எடுத்தவர். அவர் ஆரம்பித்து வைத்த அந்த  மாதிரியான பாணி இன்றும் தொடர்கிறது .

அவரே ஒரு இயக்குனராக இருந்தும்,  விக்கி என்கிற இன்னொரு இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்து   அவருக்கும்  ஒரு தொடக்கம் அமைத்து  இருப்பது பாராட்டுக்குரியது.

நடந்து முடிந்த கதையை படமாக்கும்போது சிலவற்றை வளைக்கலாம்.  ஆனால் நடந்துகொண்டிருக்கும் கதையைப்  படமாக எடுப்பது சிக்கலானது.  நடந்த ஒரு கதையை `ஹேராம்` படமாக நான்  எடுத்தபோது எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்

ஒரு படத்தில் முதலில் பாத்திரப்  பொருத்தம்  அமைவது கடினம். பெரிய நடிகர்களுக்கே சில நேரம் அமையாமல் போனதுண்டு. இந்தப் படத்தில்  பாத்திரப் பொருத்தம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சியும் இந்த  டிராஃபிக் ராமசாமியும் ஒன்றாக நடந்து போகும்போது சகோதர்கள் போல இருக்கிறார்கள். பிற்காலத்தில், அடுத்த தலைமுறை,  ஒரிஜினல் யார் என்று தெரியாமல் இவரையே டிராஃபிக் ராமசாமியாக ஞாபகம் வைத்திருக்கக் கூடும். அதில் தவறில்லை. அந்தப் பெயரும் உணர்வும் தான்  ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியவை.  இப்படிப்பட்ட மனிதர்களின் வெற்றி தான் இந்தியாவின் வெற்றி . டிராஃபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே அறிய வேண்டும். இந்தியாவின்  வெற்றி  இந்த மாதிரி சாமான்ய வீரர்களால் தான்.

படத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போதே  முழுப் படமும் பார்த்த மாதிரி உணர்ந்தேன். முழுப்படத்தையும் பார்க்க வேண்டும்  என ஆவல் வந்தது. `போராளி` என்று ஒரு  பாடல், `கோமாளி `என்று ஒரு  பாடல் பார்த்தோம். இவரை கோமாளியாக்க எத்தனையோ  பேர், குறிப்பாக அரசியல்வாதிகள் முயன்று தோற்றுவிட்டனர் என்பது தான் உண்மை. அந்தத் தோல்வியை மேலும் பிரஸ்தாபிக்கும் வகையிலும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக்  காட்டும் வகையிலும் இந்தப் படம் இருக்கும் .

எஸ்.ஏ.சி. தேர்ச்சி பெற்ற இயக்குனராக இருப்பவர் நடிகராகவும் இருந்து இயக்குனருக்கு உறுதுணையாகவும்  இருந்திருக்கிறார், எல்லாம் நன்றாக அமைந்துள்ளன. இப்படத்தை ஓட்டிக் காட்ட வேண்டிய கடமை ரசிகர்களுக்கு உள்ளது.

மீண்டும் சொல்கிறேன்  வீரத்தின்  உச்சகட்டம் தான்   அஹிம்சை ,அதற்கு உதாரணம் டிராபிக் ராமசாமி.

இவ்வாறு  கமல்ஹாசன் கூறியுள்ளார்.

0a1h