எப்போதும் இரட்டை தன்மை தொனிக்கும் பேச்சும் நிலைப்பாடும் கொண்டவர் கமல்!
ஊழலுக்கு எதிரானவர் என சொல்பவரின் கட்சி பொருளாளரிடம் கணக்கு காட்டப்படாத 80 கோடி ரூபாய் சிக்குகிறது. இலவசங்களை எதிர்ப்பவரின் முகம் பொறித்த பனியன்கள் சிக்குகின்றன. டிபன் பாக்ஸ்கள் சிக்குகின்றன. இட ஒதுக்கீட்டு column எடுத்துவிட்டால் சாதியை மறந்துவிடுவார்கள் என பேசி மீண்டும் ஒரு பேட்டியில் அக்கேள்வி கேட்கப்படும்போது பதிலளிக்க மறுக்கும் வேட்பாளர். கழகங்களின் ஆட்சியே வீண் என சொல்லிவிட்டு மக்கள் கேண்டீன்களை அறிமுகப்படுத்தும் தேர்தல் அறிக்கை. தேர்தலை பணம் ஆட்டுவிக்கிறது என பேசிவிட்டு கூட்டணிக்கு வரும் கட்சிகளிடம் பணம் கேட்கிறார்கள்.
பேச்சு மட்டுமின்றி கமல்ஹாசனுக்கு கட்சியும் முரண்பாடுகளின் தொகுப்பாக இருக்கிறது.
கையகப்படுத்தப்பட்ட பணத்தை பற்றி கேள்வி எழுப்பும்போது முதலில் ‘அது தனி நபர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு’ என்கிறார். பிறகு ‘பாஜகவை தவிர்த்து பிற கட்சிகள் எல்லாமும் குறி வைக்கப்படுகின்றன’ என்கிறார். இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை என்கிறார். ஆனால் விருப்ப மனுவில் சாதிக்கான column இல்லை என்கிறார்.
பொதுவாக கமல்ஹாசனை ரசிகனாக இருந்து அனுமானித்தவன் என்கிற வகையில் எனக்கு சில பார்வைகள் உண்டு.
சத்யா தொடங்கி விருமாண்டி வரை அவரின் பெரும்பாலான படங்களின் நாயகன் இருவேறு புள்ளிகளுக்கு இடையே உழலுபவனாகத்தான் சித்தரிக்கப்பட்டிருப்பான். விருமாண்டியில் கொத்தாலத் தேவனுக்கும் நல்லம நாயக்கனுக்கும் இடையில். ஹேராம் படத்தில் காந்திக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையிலென. படங்களை சில மணி நேரங்களுக்கு மேல் ஓட்ட முடியாதென்பதால் இரண்டில் ஒன்றை நன்மையாக்கி அதன் பக்கம் சேர்ந்து தீமையை வென்று படத்தை முடித்துவிடுவார்.
யதார்த்த வாழ்வில் ஷோ கணக்குகள் கிடையாது. எனவே எப்போதும் ஒரு இரட்டை தன்மை தொனிக்கும் பேச்சும் நிலைப்பாடும் கொண்டவராக கமல் தன்னை காண்பித்துக் கொள்வார். அதாவது இரு தரப்புமே ‘இவன் நம்மவன்’ என நினைப்பதற்கான வழிகளை உருவாக்கியபடி இருப்பார். அது கொடுக்கும் பலன்களையும் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவும் செய்வார். அதிலிருந்துதான் அவர் எழுதிய கதையின் தலைப்பை கொண்டு ‘மய்யம்’ என ஓர் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார்.
வலதும் இடதும் அல்ல, மையம்!
இடதுசாரிகளை பொறுத்தவரை இடதில் இல்லாத எதுவுமே வலதுதான். வலதை பொறுத்தவரை வலதல்லாத எதுவுமே கூட வலதாக இருக்கலாம். இந்த சூழலில் கமல் மையமாக இருப்பதில் எங்கிருந்து அவருக்கு உதவிக்கரம் இயல்பாக நீளும் என யோசித்து பாருங்கள்.
உதவுபவர்களாக இருந்தால் ஏன் ரெய்டு நடத்துகிறார்கள் என கேட்கலாம்.
அதிமுக கூட்டத்தை ரெய்டு செய்யத் தொடங்கிய பிறகுதான் அவர்களுக்கு உதவும் கட்டத்தை பாஜக அடைந்தது என்பதை நினைவில் கொள்ளவும். பாஜகவின் அகராதியில் ‘உதவி’ என்ற வார்த்தைக்கு ‘கைப்பாவை ஆக்குதல்’ என அர்த்தம்.
நடிப்பு திறன் கொண்ட ஒருவர் வடக்கே என்ன ஏமாற்று வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என பாருங்கள். ஒரு சிறந்த நடிகரே அரசியலுக்கு வந்து முரண்பாடுகளுடனும் விஷம சாதுர்யத்துடனும் செயல்படத் தொடங்கினால் தமிழகம் என்னவாகும் என்றும் யோசித்துக் கொள்ளுங்கள்.
ராஜசங்கீதன்