கல்கி 2898 கிபி – விமர்சனம்

நடிப்பு: பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி, பிரமானந்தம் மற்றும் பலர்

இயக்கம்: நாக் அஸ்வின்

ஒளிப்பதிவு: ஜோர்ட்ஜே ஸ்டோஜில்ஜ்கோவிக் (DJORDJE STOJILJKOVIC)

படத்தொகுப்பு: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: ‘வைஜெயந்தி பிலிம்ஸ்’ சி.அஸ்வினி தத்

வெளியீடு: ’ஸ்ரீ லட்சுமி மூவிஸ்’ என்.வி.பிரசாத்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

“அறிவியல் புனைவு (Science Fiction) திரைப்படம்” என்று விளம்பரம் செய்யப்பட்ட இப்படத்துக்கு ’கல்கி 2898 கி.பி’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டபோதே, இதன் கண்டெண்ட்டில் அறிவியலெல்லாம் பெரிதாக இருக்காது; இந்துத்துவம் என்ற பெயரில் ’சங்கி’த்துவம் தறிகெட்டு தாண்டவமாடும் இன்றைய நாட்டு நடப்புக்கு ஒத்து ஊதும் வகையில், பிராமணிய கட்டுக்கதையின் நீட்சியாக, ’புராண ஃபேண்டஸி புனைவு’ தான் இருக்கும் என்ற யூகம் எழுந்தது. அந்த யூகம் சரியானது தான் என்பதை தற்போது திரைக்கு வந்திருக்கும் இப்படம் நிரூபித்துள்ளது.

”இந்து கடவுளான விஷ்ணு (திருமால்), இவ்வுலகில் ஏற்கெனவே ஒன்பது முறை பிறந்து, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராமர் அவதாரம், இராமர் அவதாரம், பலராமர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம் என ஒன்பது அவதாரங்கள் எடுத்துவிட்டார். உலகில் அதர்மம் தலை விரித்தாடும்போது, விஷ்ணு தனது பத்தாவது மற்றும் கடைசி அவதாரமான ‘கல்கி’ அவதாரம் எடுப்பார். அப்போது அநீதியும், அட்டூழியமும் நிறைந்த இவ்வுலகை அழித்து, நீதியான புது உலகம் படைப்பார்” என்கிறது பிராமணியம். எனினும், எப்போது கல்கி அவதரிப்பார்? என்பதில் ஒருமித்த கருத்து இல்லாமல் பலவித கோட்பாடுகள் உலவுகின்றன. “ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் மறைந்து, கலியுகம் தொடங்கியது கி.மு. 3102-ல். கலியுகத்தின் 6000-வது ஆண்டில், அதாவது கி.பி. 2898-ல், ’கல்கி’ அவதரிப்பார்” என்கிறது ஒரு கோட்பாடு.  இப்படியாக, இன்னும் 874 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 2898-ல் பிறக்கப்போகும் ‘கல்கி’ என்ற கடவுளைப் பற்றிய அதீத கற்பனைக் கதை தான் இந்த ‘கல்கி 2898 கி.பி’ திரைப்படம்.

விஷ்ணு தனது பத்தாவது அவதாரமான ‘கல்கி’ அவதாரம் எடுப்பதற்காக, ஒரு பெண்ணின் கர்ப்பப் பையில் கருவாக உதித்திருக்கிறார். அவரை கருவிலேயே அழிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்படும் சிலருக்கும், அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில் தாயையும், சேயையும் காப்பாற்றி பாதுகாக்க பெருமுயற்சி எடுக்கும் வேறு சிலருக்கும் இடையே நடக்கும் ‘ஹை-டெக் போராட்டம்’ தான் ‘கல்கி 2898 கி.பி’ திரைப்படத்தினுடைய முதல் பாகத்தின் கதைக்கரு.

இப்படம், இந்து இதிகாசமான ‘மகாபாரதம்’ சித்தரிக்கும் குருஷேத்திரப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆரம்பமாகிறது. இப்போரில், கௌரவர்கள் சார்பாக பாண்டவர்களை எதிர்த்து யுத்தம் செய்கிறார் துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்). பாண்டவர்களின் கடைசி வாரிசாக, அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பப் பையில் கருவாக இருக்கும் ஆண் சிசுவை, அஸ்வத்தாமா, மிகவும் சக்தி வாய்ந்த கொடிய தனது ‘பிரம்ம சிரஸ்’ அஸ்திரத்தை ஏவி, தாயின் வயிற்றிலேயே கொல்லுகிறார். இதனால் கோபமடைந்த கிருஷ்ண பரமாத்மா, அஸ்வத்தாமாவைப் பார்த்து, “நீ காலமெல்லாம் சாகவே சாகாமல், நோய்வாய்ப்பட்டு, நொம்பலப்பட்டு அலைந்து திரிவாயாக” என்று சபிக்கிறார். இது கொடிய தண்டனை என்பதை உணர்ந்து அஸ்வத்தாமா சாபவிமோசனம் கோரி கெஞ்ச, “கலியுகத்தில் நான் கல்கியாக அவதரிக்கும்போது என்னை காப்பாற்றினால் இந்த சாபத்திலிருந்து நீ விடுதலை பெறுவாய்” என்கிறார் கிருஷ்ணர்.

படக்கதை இப்போது கலியுகத்தின் 6000-வது ஆண்டான கி.பி.2898-க்கு தாவுகிறது. உலகத்தின் முதல் நகரமான காசி மட்டும் தான் இப்போது உலகத்தின் கடைசி நகரமாக மிஞ்சியிருக்கிறது. மனிதர்களில் பெரும்பாலோர் இந்நகரத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.  பூமியின் இயற்கை வளங்களும், செல்வ வளங்களும் மொத்தமாகத் திரட்டி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘காம்ப்ளக்ஸ்’ என்ற பிரம்மாண்ட முக்கோண பிரதேசத்தைத் தவிர மற்ற இடங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிட்டன. கங்கை நதியே வற்றிவிட, மக்கள் பஞ்சத்திலும், பசியிலும் தவிக்கிறார்கள்.

வளமான ’காம்ப்ளக்ஸ்’ பிரதேசத்தை உருவாக்கி 200 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் சுப்ரீம் யஸ்கின் (கமல்ஹாசன்) என்ற கொடுகோலன். அதிகாரமும், செல்வமும் படைத்த உயர் வர்க்கத்தினர் மட்டும் செல்வச் செழிப்பான அந்த ‘காம்ப்ளக்ஸ்’ பிரதேசத்தில் வாழ்கிறார்கள். ஏழை எளிய மக்களை ‘காம்ப்ளக்ஸ்’ பிரதேசத்துக்கு வெளியே வறுமையில் வைத்திருக்கிறார் கொடுங்கோல் ஆட்சியாளரான சுப்ரீம் யாஸ்கின்.

எப்படியாவது இந்த காம்ப்ளக்ஸிற்குள் செல்லத் தேவையான பணம் சேர்த்து, தானும் இக்காம்ப்ளக்ஸிற்குள் சென்று, சொகுசாக வாழ வேண்டும் என்பதே நாயகன் பைரவாவின் (பிரபாஸ்) ஒரே கனவு.

சுப்ரீம் யாஸ்கினின் கொடுங்கோல் ஆட்சியை அழித்து, உலகில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, ‘கல்கி’யாக பிறக்க இருக்கும் தெய்வக் குழந்தை தான். இந்த குழந்தையை கருவாக வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார் சுமதி (தீபிகா படுகோன்).

தனது ‘பிராஜக்ட் கே’ என்ற பயங்கர ஆராய்ச்சித் திட்டத்துக்காக, பெண்களின் வயிற்றில் வளரும் கருவிலிருந்து ஒரு ரகசிய திரவத்தை எடுக்க முயன்று கொண்டிருக்கிறார் கொடுங்கோலன் சுப்ரீம் யாஸ்கின். இந்த ஆபத்தான திட்டத்துக்காக சுமதியின் வயிற்றில் கருவாக இருக்கும் தெய்வக் குழந்தையான கல்கியை குறி வைக்கிறார்.

அதே தெய்வக் குழந்தையைக் காப்பாற்றி, சாபத்திலிருந்து விடுதலை பெற பன்னெடுங்காலமாகக் காத்திருக்கிறார் அஸ்வத்தாமா.

சாபத்திலிருந்து அஸ்வத்தாமா விடுதலை பெற்றாரா? சுப்ரீம் யாஸ்கினின் ‘பிராஜக்ட் கே’ திட்டம் என்பது தான் என்ன? அது நிறைவேறியதா? வளமான காம்ப்ளக்ஸ் பிரதேசத்துக்குள் சென்று சொகுசாக வாழ வேண்டும் என்ற நாயகன் பைரவாவின் கனவு கைகூடியதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பதே ‘கல்கி 2898 கி.பி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் பைரவாவாக பிரபாஸ் நடித்திருக்கிறார். வழக்கமாக முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, தேமே என்று விழித்துக் கொண்டிருப்பதைப் போல் இல்லாமல், இந்த படத்தில் குழைவான முகபாவங்களுடன் கலகலப்பாக நடிக்க முயன்றிருக்கிறார். அவரது கதாபாத்திரம் நாயக கதாபாத்திரம் போல் இல்லை என்றாலும், அந்த பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது ’இண்ட்ரோ’ காட்சியையும், அதையொட்டி வரும் சண்டை காட்சியையும் மட்டுமாவது கொஞ்சம் மெனக்கெட்டு சிந்தித்து, வேறு மாதிரி சுவாரஸ்யமாக வைத்திருக்கலாம்.

உண்மையில், அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் வரும் அமிதாப் பச்சன் தான் இதில் ஹீரோ என்று சொன்னால், அது மிகையானதாக இருக்காது. அந்த அளவுக்கு பின்னிப் பெடலெடுத்து பிரமாதமாக நடித்திருக்கிறார். நீண்ட தாடி, எட்டடி உயர ஆஜானுபாகுவான உடம்பு, நெற்றிக்கண் போல நாமம் சைஸில் ஒளிரும் விளக்கு, வித்தியாசமான காஸ்ட்யூம் ஆகியவற்றுடன் அவர் தீபிகா படுகோனையும், அவரது வயிற்றில் வளரும் ‘கல்கி’ குழந்தையையும் காப்பாற்ற போராடும் ஆக்‌ஷன் காட்சிகள் அட்டகாசம்.

படத்தின் பிரதான வில்லனாக, கொடுங்கோலன் சுப்ரீம் யாஸ்கினாக கமல்ஹாசன் நடித்திருக்கிறார். இந்த முதல் பாகத்தில் அவர் இரண்டே இரண்டு காட்சிகளில் தான் வருகிறார். என்றாலும் அவரது ஆளுமையால் திரையும், திரையரங்கமும் அதிர்கிறது. வயோதிகத் தோற்றத்திலிருந்து இளமையான தோற்றத்துக்கு அவர் மாறும் வினாடிகளில் பார்வையாளர்களை ‘மெஸ்மரைஸ்’ செய்துவிடுகிறார். இரண்டாம் பாகத்தில் அவரது ’பிரசன்ஸ்’ அதிரடியாக இருக்கும் என்ற உத்திரவாதத்தை இதில் அளித்திருக்கிறார்.

குழந்தை கல்கியை வயிற்றில் சுமக்கும் சுமதியாக வரும் தீபிகா படுகோன், எளிய மக்கள் வாழும் ஷம்பாலா பகுதியின் தலைவி மரியமாக வரும் ஷோபனா, வீரனாக வரும் பசுபதி, ரக்சியாக வரும் திஷா பதானி, ராஜனாக வரும் பிரமானந்தம் மற்றும் அன்னா பென், சஸ்வதா சாட்டர்ஜி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை குறையின்றி கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா,  துல்கர் சல்மான் ஆகியோர் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார்கள். இது படத்துக்கு பெரிய பிளஸ் இல்லை என்றாலும், நொண்டியடிக்கும் திரைக்கதையை சில நொடிகள் மறக்க பார்வையாளர்களுக்கு பயன்பட்டிருக்கிறது.

படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாக் அஸ்வின். இந்துமத புராணங்களில் ‘கல்கி’ அவதாரம் பற்றி இங்கொன்றும் அங்கொன்றுமாக சொல்லப்பட்டிருக்கும் கற்பனைத் தகவல்களைத் திரட்டி, ‘ஸ்டார் வார்ஸ்’, ‘ட்யூன்’, ‘மேட்ரிக்ஸ்’, ‘ப்ளேட் ரன்னர்’, சில மார்வெல் படங்கள் மற்றும் சில ஹாலிவுட் சீரிஸ் ஆகியவற்றை கலந்துகட்டி ஒரு முழுநீள கதம்பப் படமாக கொடுத்துள்ளார் நாக் அஸ்வின். தொழில்நுட்ப ரீதியாகவும், கிராபிக்ஸ் காட்சிகள் மூலமும் படத்தை பிரமாண்ட படைப்பாக ஆக்கி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், அதே அளவுக்கு திரைக்கதையில் அக்கறையும், கவனமும் செலுத்தத் தவறியதால், அவை எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிப் போனது. படத்தின் முதல் பாதி திக்குத் தெரியாமல் சுவாரஸ்யமின்றி பயணித்து சோர்வை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளபோதிலும் அவற்றை நீள நீளமாக எடுத்து வைத்து பொறுமையைச் சோதித்திருக்கிறார். ஒரு படத்தை எத்தனை கோடி செலவழித்து எடுத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல, அதை எத்தனை நேர்த்தியாக, சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதை யாராவது இயக்குநர் நாக் அஸ்வினுக்கு எடுத்துச் சொன்னால் தேவலை.

இயக்குநருக்கு உறுதுணையாக இருந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி அயராது உழைத்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. அவர்களுக்கு நமது பாராட்டுகள்.

‘கல்கி 2898 கி.பி’ – கோளாறான கதை, பலவீனமான திரைக்கதை; என்ற போதிலும், பிரமாண்டமான மேக்கிங்! அதற்காகவாவது கண்டு களிக்கலாம்!