களரி – விமர்சனம்

முதலில் கோழையாக இருக்கும் நாயகன் பின்னர் வீரனாகி ஆக்ரோஷம் காட்டும் கதை.

கேரளாவில் தமிழர் வாழும் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் கிருஷ்ணா. அவர் குடிகார தந்தை எம்.எஸ்.பாஸ்கர் கொடுமையால் சிறு வயதில் இருந்தே பய நோய்க்கு ஆனவர். இதனால் சண்டை நடக்கும் இடங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பார். தன்னை அடிக்க வருபவர்களை பார்த்து நடுங்கும் சுபாவம் கொண்டவர்.

ஆனால் அவரது தங்கை சம்யுக்தாவோ தன் அண்ணணுக்கு நேர் எதிராக பிரச்சனைகளை கண்டு கலங்காமல் அதை எதிர்க்கக் கூடியவர். அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் சிக்கிக்கொண்டு சண்டை போட்டுவிடுவார். கிருஷ்ணா சென்று பேசி அதனை தீர்த்து வைத்துவிட்டு வருவார்.

கிருஷ்ணாவுக்கு தன் தங்கை சம்யுக்தாவை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது லட்சியம். ஆனால் குடிகார தந்தை எம்.எஸ்.பாஸ்கரால், வரும் வரன் எல்லாம் விலகிப்போய் விடுகிறது. இந்த நிலையில் விஷ்ணுவை காதலிக்கிறார் சம்யுக்தா. பெண் கேட்டு வரும் அவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

உள்ளூர் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷிடம் வேலை பார்ப்பவருக்கு சம்யுக்தா மீது காதல் ஏற்படுகிறது. அவர் எம்.எஸ்.பாஸ்கருக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து, சம்யுக்தாவை திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கிறார். இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சம்யுக்தா, அவரது காதலன் விஷ்ணுவுடன் சேர்ந்து சுற்றுவதை கிருஷ்ணா பார்த்து விடுகிறார். மேலும் தனது தங்கை கர்ப்பமாக இருப்பதும் தெரிய வருகிறது.

இறுதியில், சம்யுக்தாவின் வாழ்க்கை என்ன ஆனது? கிருஷ்ணா தனது கோழைத்தனத்தில் இருந்து விடுபட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கிருஷ்ணாவுக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள வேடம். தங்கை மீது பாசம், அப்பா மீது வெறுப்பு, பழி வாங்கும்போது ஆக்ரோ‌ஷம் என்று நிறைவாகவே செய்திருக்கிறார். அவரது காதலி வித்யா பிரதீப்புக்கு அதிகம் வேலை இல்லை. அவர் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். விஷ்ணு தனது நடிப்பின் மூலம் அனைரையும் கவர்கிறார்.

தங்கையாக வரும் சம்யுக்தா பாசத்தை பொழிகிறார். ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், பாண்டி, சென்ட்ராயன் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

படத்தை இயக்கியிருக்கிறார் கிரண் சந்த். திரைக்கதை எந்த வித திருப்பமும் இல்லாமல் செல்கிறது. கிருஷ்ணாவின் கோழைத்தனம் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பார்த்து சலித்துப்போன கதை என்பதால் அடுத்தடுத்த காட்சியை எளிதில் யூகிக்க முடிகிறது.

வி.வி.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். குருதேவின் ஒளிப்பதிவில் கேரளாவின் தமிழர் வாழும் பகுதி அழகாக காட்டப்பட்டிருக்கிறது.

‘களரி’ – சுமார்.