கலைஞர் ஈழத்தமிழ் மக்களை வஞ்சித்தாரா?
“கலைஞர் ஈழத்தமிழ் மக்களை வஞ்சித்தாரா?”
இந்த கேள்வி, பிரச்சினைக்குரிய கேள்வி என தெரிந்தே பதிலளிக்கிறேன்.
Indian state-க்கு என ஒரு கொள்கை இருக்கிறது. அது தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரானது. இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் Indian State-க்கு உட்பட்டுத்தான் இயங்க முடியும்.
கருணாநிதி ஒரு இந்திய அரசியல்வாதி. Indian State-க்கு உட்பட்டு பிரமாணம் எடுப்பவர். அவரால் வஞ்சிக்க மட்டுமல்ல, ஈழத்தை ஆதரிக்கக்கூட முடியாது. ஆனாலும் ஆதரித்தார். தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்குமான தொடர்பு அது.
இலங்கை பிரச்சினை, பிராந்திய வல்லமை சார்ந்த பிரச்சினை. அதில் உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனாவும் மட்டும்தான் காய் நகர்த்த முடியும். கருணாநிதியால் அருகில் கூட அங்கு நிற்க முடியாது.
பிரபாகரனே, இந்திய மாநிலங்களை ஒத்த 13ஆம் சட்டத்திருத்தத்தை ஏற்க ஒப்புக்கொள்ளவில்லை. அந்த சட்டத்திருத்தத்தை ஏற்றால், இந்தியாவுக்குள் பல்லில்லா பாம்புகளாக நெளியும் அதிகாரமில்லா மாநிலங்களை போல்தான் ஈழமும் அமையும் என்பது அவருக்கு தெரியும். தனித்தமிழ் ஈழமே தீர்வு என அவர் அறிவித்தது வெற்று கோஷம் அல்ல.
கருணாநிதியும் அண்ணாவுடன் சேர்ந்து பெரியார் வழியில் தனி தமிழ்நாடு கேட்டவர் என்பதால் பிரபாகரனின் தயக்கத்தை புரிந்து கொண்டிருந்தார். ஆனாலும் Indian state-க்கு உட்பட்டவர் என்பதால் ஒன்றும் செய்ய முடியாது. அதிகபட்சம் போனால் ஆதரவை விலக்கி இருக்கலாம். ஆட்சி கலைக்கப்பட்டிருக்கலாம்.
பிறகு?
ஈழப்போர் நிச்சயமாக நடந்திருக்கும்!
நாமெல்லாம் நினைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டுக்கு ஈழ உருவாக்கத்தில் பெரும்பங்கெல்லாம் ஆற்ற முடியாது. அப்படி ஆற்ற வேண்டுமானால் நாம் முதலில் தனியாக வேண்டும். அதுவும் சீனா அல்லது அமெரிக்கா போன்ற வல்லரசுகளில் ஒன்றின் துணையோடு. இல்லையெனில் மிக சுலபமாக அழிக்கப்படுவோம்.
மீண்டும் சொல்கிறேன். இலங்கையில் நடப்பவை நம் கைகளை மிஞ்சியவை. பூகோள அரசியல்! நாடு மற்றும் சந்தை பிடிக்கும் வேலைதான் அங்கு நடக்கிறது. அதில் கருணாநிதியை மட்டும் குற்றம் சாட்டுவதெல்லாம் யார் மீதாவது பழி போட்டு தான் தப்பித்து கொள்ள விரும்பும் Indian State-ன் வேலையே என அறிக!
கருணாநிதியை குற்றமே சாட்டக்கூடாதா என கேட்டால், சாட்டலாம். ஒன்றுமே சாத்தியப்படாது என தெரிந்தும் பொய்யாக நம்பிக்கை வளர்த்து அரசியல் செய்தார் என வேண்டுமானால் குற்றம் சாட்டலாம். அதற்கும் சொல்லிவிட்டேன், அவர் அரசியல்வாதி என.
ஈழத்தை பெறுவதற்கான உலக அரசியல் வாய்ப்பு ஒன்று ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. ஹிலாரி வந்தார். ஆனால் ஜெயலலிதாவோ புலிகள், ஈழம், திராவிடம், தனி தமிழ்நாடு என எதை பற்றிய புரிதலும் இல்லாதவராக இருந்ததால் சட்டப்பேரவை தீர்மானம் இயற்றும் பாசாங்கு அரசியலோடு நிறுத்திக் கொண்டார். ஜெயலலிதா இருந்த இடத்தில் அண்ணா இருந்திருந்தால் இந்தியாவும் இலங்கையும் வேறு வரலாற்றை கொண்டிருக்கும்.
மற்றபடி ஈழத்தில் நடந்தததும், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதும், ஹிலாரி மாடிப்படி ஏறி ஜெயலலிதாவை சந்தித்ததும், இன்று சீனா இலங்கையில் கால் பதித்திருப்பதும், பிரபாகரன் கொல்லப்பட்டதும், ஈழ மக்கள் கொல்லப்பட்டதுமென எல்லாமுமே நாம் எவருமே சம்பந்தப்பட முடியாத விஷயங்கள். பிரபாகரனே இவற்றில் எதிலும் சம்பந்தப்பட முடியாதவர் என்பதுதான் சோகம்.
ஈழமக்களை வஞ்சித்தவர் என யாரையேனும் உண்மையிலேயே குறிப்பிட விரும்பினால் ராஜீவ்காந்தியில் தொடங்குங்கள். ஒரே ஒரு முறை 1987ஆம் ஆண்டு சுதுமலையில் பிரபாகரன் பேசியதை கேளுங்கள். எத்தனை பெரிய வஞ்சத்தை ராஜீவ்காந்தி செய்தார் என தெரியும். பிரபாகரனின் அந்த பேச்சை கேட்டு கலங்காமல் உங்களால் இருக்கவே முடியாது. ஒரு மாபெரும் லட்சியத்தை தன் கயமையால் கொய்த ராஜீவ்காந்தியின் உண்மை ரூபம் தெரியும்.
ஒரு இனத்தையே அழித்த இலங்கையிலிருந்துதான் மூன்றாம் உலகப்போர் தொடங்க போகிறது. அந்த மண் எந்நாளும் சமாதானம் கொள்ளப் போவதில்லை!
RAJASANGEETHAN JOHN