KAGITHA KAPPAL – Tamil Review

‘அழகர்சாமியின் குதிரை’ என்ற அட்டகாசமான காமெடி படத்தில் நாயகனாக அற்புதமாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி என்ற சிவபாலன், மீண்டும் நாயகனாக, ஆனால் படுசீரியஸாக நடித்திருக்கும் படம் ‘காகித கப்பல்’.

சிறுவயதிலிருந்தே, “நேர்மையாக பிழைக்க வேண்டும்” என்பது நாயகன் அப்புக்குட்டியின் லட்சியம். சிறுவயதில் தெருத்தெருவாக குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்திவந்த அவர், உழைப்பாலும், ஏ.ஆர்.மாரிமுத்து என்ற காங்கிரஸ் பிரமுகரின் உறுதுணையாலும் முன்னேறி, பலருக்கு வேலை கொடுக்குமளவுக்கு, குப்பைகளை ஹோல்சேலில் வாங்கி விற்கும் கோடீஸ்வரராக உயர்ந்துவிடுகிறார்.

முதியோர் இல்லத்தில் பார்வையற்றவராக இருக்கும் தன் அம்மா வசிப்பதற்கென்று ஒரு வீட்டை வாங்க நினைத்து, ரூ.20 லட்சத்தை கொடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்கிறார் அப்புக்குட்டி. அப்போது சினேகமாகும் படித்த பெண்ணான நாயகி தில்லிஜா, அப்புக்குட்டியின் நற்குணங்கள் தெரிந்து, அவரை மணந்து, ஹோல்சேல் குப்பை வியாபாரம் ஓகோவென நடக்க உறுதுணையாக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், திரைப்பட இயக்குனர் எம்.எஸ்.பாஸ்கர், தான் எடுக்க இருக்கும் திரைப்படத்துக்கு பைனான்ஸ் கேட்டு அப்புக்குட்டியை அணுகுகிறார். அப்புக்குட்டியோ, “சினிமா ஹீரோயின் ஆக வேண்டும் என்பது என் மனைவியின் சிறுவயது ஆசை. அவளை ஹீரோயினாக போட்டால், இந்த படத்தை நானே பணம் போட்டு தயாரிக்கிறேன்” என்று கூறுகிறார்.

அப்புக்குட்டியின் மனைவி தில்லிஜாவோ, “சினிமாவுக்காக கூட நான் வேறொருவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன். என் கணவரையே ஹீரோவாக போட்டால் நடிக்கிறேன்” என்று நிபந்தனை விதிக்கிறார்.

பிழைப்பு நடப்பதற்காக எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் இயக்குனர் எம்.எஸ்.பாஸ்கர், அப்புக்குட்டியை ஹீரோவாகவும், அவரது மனைவி தில்லிஜாவை ஹீரோயினாகவும் போட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார். அவர் படத்தை எடுத்து முடித்தாரா? தம்பதியரின் நடிப்பு எப்படி? என்பது மீதிக்கதை.

அப்புக்குட்டி, தில்லிஜா, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பரோட்டா முருகேசன், எலிராஜன், ரமேஷ்மாணிக்கம், சுஜாதா, சூப் பாபு ஆகியோரின் நடிப்பு பரவாயில்லை. வெங்கட்டின் ஒளிப்பதிவும், பிரசன்னாவின் இசையும் சுமார் ரகம்.

வித்தியாசமான படம் கொடுக்க வேண்டும் என்று நினைத்ததற்காக இயக்குனர் சிவராமன்.எஸ்.- ஐ பாராட்டலாம். ஆனால், எதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்திச் செல்ல அவர் தவறிவிட்டார். நம்ப முடியாத கதை, நம்பிக்கை ஏற்படுத்த இயலாத கதைக்களம், செயற்கையான செண்டிமெண்ட் காட்சிகள் என இஷ்டத்துக்கு வறுத்து எடுத்திருக்கிறார்.

‘காகித கப்பல்’ – “வித்தியாசமான படங்கள்” என்பதற்காக ரொம்ப பொறுமையுடன் பார்க்கப் பழகியவர்களுக்கு பிடிக்கும்!