“கடுகு’ நல்ல படம்; கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்”: நடிகர் சூர்யா பேச்சு!
விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கடுகு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நடிகர் சூர்யா பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் மற்றும் கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதியர் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
பாடல்கள் குறுந்தகட்டை பெற்றுக்கொண்ட இவர்கள் அனைவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள்.
சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, தனது ஆட்டோவில் வைபை உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தவர்.
சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார், பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர்.
கருணைவேல் – சொர்ணலட்சுமி தம்பதியர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வீட்டில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்களிடம் பணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். சாப்பிடுபவர்கள் விரும்பும் தொகையை கொடுத்துவிட்டுச் செல்லலாம். இவர்கள் நடத்தும் இந்த ஓட்டலில் 26 வகையான உணவு வகைகள் பரிமாறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது இந்த தனி பண்புகளைப் பாராட்டும் வகையில், கடுகு படத்தின் பாடல்கள் இவர்கள் மூலமாக வெளியிடப்பட்டது.
விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:
“கடுகு ஆடியோ ரிலீஸ் வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். இது வந்து, 2டி எண்டர்டெயின்மெண்ட் ஆரம்பித்தது என அனைத்தும் புது அனுபவம் தான் கொடுத்திருக்கு. இப்ப தான் வீடு கட்டியிருக்கோம். எல்லோரும் ஒண்ணா இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான், அப்பா, அம்மா, கார்த்தி அனைவரும் ஒரே இடத்தில இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இது அனைத்தும் சினிமா கொடுத்தது.
இங்க இருக்கிற அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் சினிமாவுல வாழ்க்கை கிடைச்சிருக்கு. சினிமாவுக்கு நாங்க திருப்பி என்ன செய்தோம் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போலதான் 2டி எண்டர்டெயின்மெண்ட்-ஐ நான் பார்க்குறன். நான் அல்லாத படங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும், நல்ல படங்களையும் ஆடியன்ஸ்க்கு ரீச் பண்ண வைக்கணும்.
ட்ரீம் வாரியர், பொட்டென்சியல், ஸ்டுடியோ க்ரீன் என்று இருந்தாலும் நான் நேரடியாக பண்ணணும் என்று தோணுச்சு. அதனால தான் 2டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
முதலில் படம் தயாரிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன். பசங்க 2, 36 வயதினிலே என்று படம் தயாரித்தோம். எப்பவுமே சின்ன பட்ஜெட் படத்துல நல்ல விஷயம் நடக்கும். என்ன தடங்கல்கள் வந்தாலும், என்ன பிரச்சினை வந்தாலும் நடத்திக் காட்டணும் என்ற எண்ணம் சின்ன பட்ஜெட் படங்களில் தான் வரும்.
எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால் பிறகு மறுபடியும் அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள் இல்லையா? ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போகணும் என்று எனக்கு ஆசை வந்தது. அதனால் அது போன்ற எண்ணத்தோடு, வெறியோடு இருப்பவர்களுடன் நான் இணைந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர்களோடு இணைந்தேன்.
விஜய் மில்டன் இயக்குனர், கேமிராமேன் என்பதை தாண்டி நல்ல நண்பர். எனக்கும் என்னோட நட்பு வட்டாரத்த புதுப்பிச்சுக்கணும். நல்ல நண்பர்களாக இருந்தோம். இன்னும் நெருங்க கடுகு ஒரு வாய்ப்பாக இருந்தது. படம் பார்த்தோம். நல்ல படம். ரிலீஸ் பண்ண முடிவு செய்தோம். இது ஒரு புது முயற்சி. இதற்கு நான் ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கேன்.
அழகான கெமிஸ்ட்ரி நடத்திருக்கு. ஒரு இயக்குநர், தயாரிப்பாளர், இங்கு உள்ள நடிகர்கள் அனைவரும் படத்தில் வேறு ஒரு பரிமாணத்தில் தான் தெரிவாங்க. கதாபாத்திரத்தை முன்வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும். அப்படிச் சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் ‘நந்தா’ போன்ற படங்களில் நடித்தேன். சில படங்கள் மனசார பண்ணணும் என்று தோன்றும். அந்த வரிசையில் ‘கடுகு’ ஒரு படமாக தெரிந்தது.
எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போனால் படம் பிடிக்கும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்திற்குள் போய்விடுவோம். யுனிக் படத்தை யார் எடுத்தாலும் ஆடியன்ஸ் சப்போர்ட் பண்ணுவாங்க. சின்னது பெருசு என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பார்கள்.
நாங்க மட்டும் சொல்வது இல்லாம, மீடியாவாகிய நீங்கள் சொல்வதையும் நம்பி வரவேற்பார்கள். அந்த வகையில் ‘கடுகு ‘படத்தையும் நிச்சயம் கைதட்டி வரவேற்பார்கள். பாடல்கள், பைட், காமெடி என்று அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கும். பரத் இதில் நடிக்க எப்படி ஒத்துக்கிட்டார் என்று எனக்கு சர்பிரைசாக இருந்தது. அந்த அளவுக்கு இதில் ஒரு கதாபாத்திரமாக அவர் உழைத்திருக்கார்.இந்த படத்துக்கு நாங்க ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கோம். மற்றபடி படத்துல பங்குபெற்றவர்கள் தான் காரணம்.
இந்த நிகழ்ச்சி வித்தியாசமான முறையில் நடக்கிறது. இதில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டுக்கள், அவர்களது சேவைகளுக்கு பாராட்டுக்கள். ‘கடுகு’ நல்ல படம். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும். நன்றி.
இவ்வாறு சூர்யா பேசினார்.