”ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தர் வரவே முடியாது!” – இளையராஜா
இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் ‘காதல் செய்’ என்ற திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை கோடம்பாக்கத்தில் இளையராஜாவுக்குச் சொந்தமாக உள்ள ’இளையராஜா ஸ்டூடியோ’வில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு, புகழேந்தி ஆகியோர் பங்கேற்ற இவ்விழாவில் இளையராஜா பேசுகையில், ”ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தர் வரவே முடியாது. ஒரேயொரு பி.வாசுதான்… ஒரேயொரு பாரதிராஜாதான்… ஒரேயொரு இளையராஜாதான்.
திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு என்பது திருக்குறள். அதாவது, எவ்வளவு செல்வத்தோடு வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் தெளிவான அறிவோடு இருக்கணும்ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. இது எல்லாருக்கும் பொருந்தும்.
இந்தப் படத்தைக் கஷ்டப்பட்டு தயாரிச்சிருக்காங்கன்னு சொன்னாங்க. கஷ்டப்படாமல் எதையும் செய்ய முடியாது. படத்தை கஷ்டப்பட்டுத் தயாரிக்கலாம். ஆனால் படத்தை கஷ்டப்பட்டு பார்க்கக் கூடாது. அப்படியொரு சூழலை உருவாக்கக் கூடாது.
இந்தப் படத்துல காதல் செய்யச் சொல்லியிருக்காங்க. நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு காதலை செய்யச் வைச்சிருக்கேன்.
‘16 வயதினிலே’ படத்தோட பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தனை கேமிராக்கள் இல்லை. ரிப்போர்ட்டர்கள் இல்லை. ஆனால் இன்றைக்கு இத்தனை கேமிராக்களோடு நிறைய செய்தியாளர்கள் வந்திருக்கீங்க.. இங்கே வந்ததுக்கு அனைவருக்கும் நன்றி” என்றார்.
பாரதிராஜா பேசுகையில், “காதல் செய் என்ற தலைப்பே மிக இனிமையாக இருக்கிறது. காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை. இளையராஜாவுக்கு காதல் இருக்கும். ஆனால், அவர் எதை காதலிக்கிறார் என்பது தான் முக்கியம். இளையராஜாவுக்கு பல முகங்கள் இருக்கிறது. ஓவியம் வரைவார், பாடல்கள் எழுவார், பாடுவார். இப்படி பல திறமைகள் அவரிடம் இருக்கிறது. மொத்தத்தில், இளையராஜா தமிழ்நாட்டின் மிகப்பெரிய சொத்து” என்றார்.
‘காதல் செய்’ திரைப்படத்தில் சுபாஷ் சந்திர போஸ், நேகா, மனோபாலா, லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கே.கணேஷன். தயாரிப்பு – கானா வினோதன், குப்பன் கணேஷன்.