காதல் என்பது பொது உடைமை – விமர்சனம்
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2025/02/kadhal-enbadhu1.jpg)
நடிப்பு: லிஜோமோல், அனுஷா, ரோகிணி, வினீத், காலேஷ், தீபா சங்கர் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
ஒளிப்பதிவு: ஸ்ரீசரவணன்
படத்தொகுப்பு: டேனி சார்லஸ்
இசை: கண்ணன் நாராயணன்
தயாரிப்பு: ஜியோ பேபி, மேன்கைன்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்சன்
வெளியிடுபவர்: ’கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ ஜி.தனஞ்ஜெயன்
பத்திரிகை தொடர்பு: குணா
மணிவண்ணன் இயக்கத்தில், கலைஞர் மு.கருணாநிதி வசனத்தில் உருவாகி 1986ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பாலைவன ரோஜாக்கள்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள “காதல் என்பது பொது உடைமை; கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை…” என துவங்கும் பாடலை கங்கை அமரன் எழுத, இளையராஜா இசையமைத்துப் பாடியிருப்பார். இப்பாடலின் முதல் வரியான “காதல் என்பது பொது உடைமை” என்பதை எடுத்து, தற்போது திரைக்கு வந்திருக்கும் புதுப்படத்துக்கு தலைப்பாக சூட்டியிருக்கிறார்கள்.
’காதல் என்பது குறிப்பிட்ட சாதியினருக்கோ, மதத்தினருக்கோ, மொழியினருக்கோ, எதிரெதிர் பாலினருக்கோ மட்டும் சொந்தமானதல்ல; தன்பால் சேர்க்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சொந்தமானது; யாரும் யாரையும் காதலிக்கலாம்’ என்பது இப்படம் கூறவரும் கருத்து என்பதால், அதற்கு பொருத்தமாகவே இத்தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
யூ-டியூப் பிரபலம் லட்சுமி (ரோகிணி). பெண்ணியவாதி. பெண்ணுரிமை, பெண் விடுதலை உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் முற்போக்கான கருத்துகள் கொண்டிருப்பவர். இவரது கணவர் தேவராஜ் (வினீத்). இவர்களுக்கு சாம் (லிஜோமோல்) என்ற மகள் உண்டு.
கணவர் தேவராஜ் ஒரு டான்ஸ் டீச்சருடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் குடும்பம் நடத்தத் தொடங்கியதை அடுத்து, தேவராஜைப் பிரிந்து வந்து தன் ஒரே மகள் சாமுடன் தனியே வசித்து வருகிறார் யூ-டியூபர் லட்சுமி. மகள் சாமுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்க்கிறார்.
இந்நிலையில், தான் ஒருவரை காதலிப்பதாக அம்மா லட்சுமியிடம் தயங்கித் தயங்கிக் கூறுகிறார் சாம். முற்போக்கு எண்ணம் கொண்ட லட்சுமி இதைக் கேட்டு மகிழ்கிறார். குதூகலிக்கிறார். சம்மதம் தெரிவிக்கிறார். “உன் லவ்வரை நம் வீட்டுக்கு அழைத்து வா. அவர் பெயர் உட்பட எதையும் நீ கூற வேண்டாம். எல்லாம் சர்ப்பிரைஸாக இருக்கட்டும். பிறகு தெரிந்துகொள்கிறேன்” என்கிறார்.
அம்மாவின் விருப்பப்படி சாம் தன் லவ்வரை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அந்த லவ்வரைப் பார்த்ததும் லட்சுமி அதிர்ச்சியில் உறைந்துபோகிறார். காரணம், மகள் காதலிப்பது ஒரு ஆணை அல்ல; நந்தினி (அனுஷா) என்ற பெண்ணை.
லட்சுமி என்ன தான் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்மணியாக இருந்தாலும், தன் மகள் ஒரு பெண்ணைக் காதலிப்பதையும், அவரோடு சேர்ந்து வாழ விரும்புவதையும் ஏற்க மறுத்து பதறுகிறார். கதறுகிறார். ’இது வேண்டவே வேண்டாம்’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் சாம் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
லட்சுமி வேறு வழியின்றி தன் கணவர் தேவராஜுக்கு போன் பண்ணி, நேரில் வந்து மகளுக்கு புத்திமதி சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். தேவராஜ் கிளம்பி வருகிறார்.
அதன்பின் என்ன நடந்தது? தன் அப்பாவும் அம்மாவும் கூறும் அறிவுரைகளை ஏற்று, நந்தினி மீதான காதலை சாம் கைவிட்டாரா? அல்லது சாம் முன்வைக்கும் வாதங்களை பெற்றோர்கள் ஏற்று, மனம் மாறி, சாம் – நந்தினி காதலை அங்கீகரித்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘காதல் என்பது பொது உடைமை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2025/02/kadhal-enbadhu2.jpg)
கதையின் நாயகி சாம் கதாபாத்திரத்தில் லிஜோமோல் நடித்திருக்கிறார். சவாலான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். ஒரு பெண்ணுக்கு ஆண் மீது வரும் காதலைப் போல, ஒரு பெண் மீது தனக்கு வந்துள்ள காதலும் இயல்பானது, இயற்கையானது என்று தன் பெற்றோரிடம் ஆணித்தரமாக வாதாடுவது சிறப்பு. மேலும், அந்த கொந்தளிப்பான சூழ்நிலையிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன் லவ்வரை அரவணைத்து அன்பு செலுத்துவதன் மூலம் தன் காதலுக்கும், கதாபாத்திரத்துக்கும் நியாயம் சேர்த்திருக்கிறார்.
நாயகியின் அம்மா லட்சுமியாக ரோகிணி நடித்திருக்கிறார். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான காதலை எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்கும் முற்போக்கு சிந்தனாவாதியாக இருந்தபோதிலும், தன் மகளின் தன்பால் சேர்க்கை உணர்வைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறி தவிக்கும் தாயாக அருமையாக நடித்து அசத்தியிருக்கிறார்.
நாயகியின் அப்பா தேவராஜாக வரும் வினீத், நாயகியின் லவ்வர் நந்தினியாக வரும் அனுஷா, லவ்வர்களின் ‘காமன் ஃபிரண்டாக’ வரும் காலேஷ், வீட்டு பணிப்பெண் மேரியாக வரும் தீபா சங்கர் ஆகியோர் தங்களுக்கென சிறப்பாக செதுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்குள் தங்களை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் ஏற்கெனவே விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற ‘லென்ஸ்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘தலைக்கூத்தல்’ ஆகிய படங்களை இயக்கியவர். அந்த வரிசையில் இடம் பெறும் தரத்தில், விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெறுகிற விதத்தில் இந்த ‘காதல் என்பது பொது உடைமை’ திரைப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். சுற்றி வளைக்காமல் படத்தின் முதல் காட்சியிலேயே கதையை தொடங்கிவிடுகிறார் இயக்குநர். சர்ச்சைக்குரிய கதைக்கருவாக இருந்தபோதிலும், அதை சமூகப் பொறுப்புடன் அமைதியாகவும் பொறுமையாகவும் நகர்த்திச் செல்லும் வண்ணம் கதையாக வளர்த்தெடுத்திருக்கிறார். லிஜோமோல், அனுஷா, வினீத், ரோகிணி, காலேஷ், தீபா சங்கர் ஆகிய ஆறு பேரின் முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை வைத்து கைக்கு அடக்கமான, நிறைவான திரைக்கதை அமைத்திருக்கிறார். தன்பால் சேர்க்கைக் காதலுக்கு ஆதரவாக வாதாடும் மகளை ‘ப்ரோட்டாகனிஸ்ட்டாகவும்’, ‘அது கூடவே கூடாது’ என்று பிடிவாதமாக மறுக்கும் பெற்றோர்களை ‘ஆன்டாகனிஸ்ட்டாகவும்’ படைத்து, இவர்களுக்கு இடையிலான வலிமையான விவாதங்களினூடே படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்வதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். பல வசனங்கள் கைதட்டலுக்கு உரிய ரகம். இயக்குநருக்கு பாராட்டுகள்.
கண்ணன் நாராயணின் இசை, ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, டேனி சார்லஸின் படத்தொகுப்பு, ஆறுசாமியின் கலை, உமாதேவியின் பாடல் வரிகள் ஆகிய அனைத்தும் கதைக்களத்தில் இருந்து சிறிதும் விலகாமல் பயணித்து, படத்தின் நேர்த்திக்கும், உயர்ந்த தரத்துக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
2023ஆம் ஆண்டு நவம்பர் இறுதி வாரத்தில் கோவாவில் நடைபெற்ற 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைக் குவித்த பெருமைக்குரிய இந்த படத்தை அவசியம் பாருங்கள். நீங்களும் பாராட்டுவீர்கள்!
ரேட்டிங்: 3.5/5