கடைசீல பிரியாணி – விமர்சனம்

நடிப்பு: விஜய் ராம், வசந்த் ரவி, தினேஷ் மணி, ஹக்கீம் ஷாஜகான்

இயக்கம்: நிஷாந்த் வர்மா

ஒளிப்பதிவு: ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப், அசீம் அகமது

இசை: நீல் செபாஸ்டியன்

புதுமையான திரைக்கதை, இயல்பான நடிப்பு, நேர்த்தியான ஒளிப்பதிவு, துல்லியமான ஒலிப்பதிவு ஆகியவற்றை மட்டும் நம்பி மிகச் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்கள் சமீபகாலமாக தமிழ்த் திரையுலகில் வெளியாக ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படம்தான் ‘கடைசீல பிரியாணி’.

அது கணவர், மனைவி, மூன்று மகன்கள் இருக்கும் ஒரு குடும்பம். இவர்களில் மனைவியும், மூத்த மகன்கள் இருவரும் முரட்டுத்தனமாக இருப்பதால், கணவர் தனது மூன்றாவது மகனான சிக்குப்பாண்டியை (விஜய் ராம்) நல்லவனாக வளர்க்க ஆசைப்பட்டு, தனியே அழைத்துச் சென்று வாழ்கிறார்.

நன்றாகப் படித்தால் நல்ல வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கும் சிக்குப்பாண்டியின் வாழ்க்கை நினைத்தபடி அமையாமல் போகிறது. காரணம், அவனது அப்பாவை கேரளாவைச் சேர்ந்த ரப்பர் எஸ்டேட் முதலாளி ஒருவன் கொன்றுவிட, சிக்குப்பாண்டியின் வாழ்க்கை திசை மாறுகிறது.

அம்மாவின் தூண்டுதலால், சிக்குப்பாண்டி உள்ளிட்ட மூன்று சகோதரர்களும், தனது தந்தையைக் கொன்ற ரப்பர் எஸ்டேட் முதலாளியைக் கொலை செய்ய கேரளாவில் உள்ள கோட்டயத்துக்கு கிளம்பிப் போகிறார்கள்.

எஸ்டேட் முதலாளியின் வீட்டிற்குள் நுழையும் மூன்று சகோதரர்களும், அங்கே எஸ்டேட் முதலாளியின் மகன் – கொலைகார சைக்கோ (ஹக்கீம் ஷா)  இருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறார்கள். திட்டமிட்டபடி அவர்கள் கொலை செய்தார்களா? கொலைகார சைக்கோவிடமிருந்து தப்பினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையை விஜய் சேதுபதியின் பின்னணிக் குரல் சொல்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. மேலும், கிளைமாக்சில் முக்கியமான ஒரு திருப்புமுனையில் விஜய் சேதுபதி சில வினாடிகள் திரையில் தோன்றுவது அக்காட்சிக்கு வலு சேர்க்கிறது.

படத்தில் மூன்று சகோதரர்களாக வசந்த் ரவி, தினேஷ் மணி, விஜய் ராம் நடித்துள்ளார்கள். இவர்களின் மூத்த சகோதரனாக நடித்திருக்கும் வசந்த் ரவி இடைவேளை வரை தன்னுடைய பழி வாங்கல் உணர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாவது சகோதரனாக வரும் தினேஷ் மணிக்கு அதிக வேலை இல்லை. படத்தின் இரண்டாம் பாதியில் கடைசி  சகோதரன் விஜய் ராம் நாயகனாக ஸ்கோர் பண்ணுகிறார்..

ரப்பர் எஸ்டேட் முதலாளி மகனாக வரும் ஹக்கீம் ஷாஜகான் தனது நடிப்பால் படத்தின் இரண்டாம் பாதியை ஆக்கிரமித்து வெகுவாக கவருகிறார். கேரள காவல்துறையினரை அவர் டீல் செய்யும் விதம் அருமையாகவும், அதேநேரத்தில் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

அடிப்படையில் ஒரு க்ரைம் த்ரில்லர் ஜானர் கதை போல இருந்தாலும், சாதாரணமான, அமைதியான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பும் பலருக்கும் அம்மாதிரி வாழ்க்கை கிடைப்பது எவ்வளவு கடினமானதாக இருக்கிறது என்பதை சொல்லும் வகையில் இதை நகர்த்தியிருக்கும் இயக்குனர் நிஷாந்த் வர்மாவுக்கு பாராட்டுகள். இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முதல் பாதியில் இல்லாததையும், மலையாள வசனங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதையும் தவிர்த்திருந்தால் படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்க முடியும்.

இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம்.

‘கடைசீல பிரியாணி’ – நல்ல கறிவிருந்து!