காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் – விமர்சனம்
நடிப்பு: ஆர்யா, சித்தி இதானி, பிரபு, பாக்யராஜ், மதுசூதனராவ், தமிழ், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, விஜி சந்திரசேகர் மற்றும் பலர்
இயக்கம்: முத்தையா
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இசை: ஜி.வி.பிரகாஷ்
தயாரிப்பு: வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சதீஷ்குமார் – சிவா (டீம் எய்ம்)
கிராமத்தில் வசிப்பவர் நாயகி சித்தி இதானி. அப்பா – அம்மா இல்லாதவர். பெரும் சொத்துக்கு சொந்தக்காரர். தன் அண்ணனின் மகள்கள் மீது அளப்பரிய பாசத்தைக் கொட்டி அன்புடன் வளர்த்து வருபவர்.
சித்தி இதானியின் சொத்தை அடைய அவரது உறவினர்கள் திட்டமிடுகிறார்கள். அதற்காக அவரை தங்கள் வீட்டு மருமகளாக ஆக்கிக்கொள்ள முயலுகிறார்கள். அவரை யார் பெண் கேட்டு வந்தாலும் அவர்களை வெட்டி விரட்டியடிக்கிறார்கள்.
இவர்கள் வீட்டு மருமகள் ஆவதில் துளியும் விருப்பம் இல்லாத சித்தி இதானி, சிறையில் இருக்கும் நாயகன் ஆர்யாவை (இவர் பெயர் தான் படத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்) வலியச் சென்று சந்திக்கிறார்.
இதன்பிறகு ஜாமீனில் வெளியே வரும் ஆர்யா, சித்தி இதானிக்கு துணையாக நிற்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. இந்த காதலை எதிர்க்கும் சித்தி இதானியின் உறவினர்கள் ஆர்யாவை கொலை செய்ய முயற்சிக்க, வேறு ஒரு கும்பலும் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. அந்த கும்பல் யார்? அவர்களுக்கும் ஆர்யாவுக்கும் இடையே என்ன பகை? ஆர்யா ஏன் சிறை சென்றார்? அவரை சந்திக்க சித்தி இதானி ஏன் சிறைசாலைக்குப் போனார்? ஆர்யாவுக்கும் இஸ்லாமியருக்கும் இருக்கும் தொடர்பு என்ன? இறுதியில் பகை வென்று காதலர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்களா? என்பது ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
படம் முழுக்க கருப்பு சட்டை, கருப்பு வேட்டி, கருப்பு பனியன், கருப்பு அரைக்கால் சட்டை, கருப்பு தாடி, கருப்பு தலைமுடி என கருப்பாய் வலம் வரும் ஆர்யாவுக்கு, இந்த கருப்பு ஒரு கிராமிய முரட்டு நாயகனுக்கான தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக இத்தனை சண்டைக் காட்சிகளா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை இந்த படக்குழுவுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை. இத்தனை சண்டைகளுக்கு இடையில் நடிக்கக் கிடைத்த கொஞ்ச வாய்ப்புகளில் முடிந்தவரை நடித்திருக்கிறார் ஆர்யா.
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இதானிக்கு வலுவான கதாபாத்திரம். வில்லன்களிடம் ஆவேசமாகப் பேசுவது, கன்னக் குழிகளாலும் மயக்கும் கண்களாலும் நாயகனை காதலில் ஈர்ப்பது, அண்ணன் மகள்கள் மீது அன்பைப் பொழிவது, இறுதியில் எதிர்பாராத முடிவை சந்திப்பது என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.
இஸ்லாமிய பெரியவராக வரும் பிரபு அமைதியான நடிப்பால் முத்திரை பதித்துள்ளார். கே.பாக்யராஜ், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், ம்துசூதனராவ், ரேணுகா, சிங்கம்புலி, தமிழ் உள்ளிட்ட ஏனைய நடிப்பு கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இந்த படத்தில் சண்டை பயிற்சியாளர் அனல் அரசின் உழைப்புத் தான் தெரிகிறதே தவிர இயக்குனர் முத்தையா மெனக்கெட்டதாகத் தெரியவில்லை. இதனால் பார்வையாளர்களுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம். அதிலும், கதாபாத்திரங்களையும், அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு முறைகளையும் புரிந்துக்கொள்ள முடியாமல் பார்வையாளர்கள் குழம்பித் தவிப்பதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. இயக்குனர் முத்தையா அவர்களே, உங்கள் கற்பனைக்கப்பல் தரை தட்டிவிட்டது. மாத்தி யோசிங்க.
வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி இசைக்கப்பட்டிருக்கிறது.
‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ – அடிதடியை ரசிக்கும் ரசிகர்களுக்குப் பிடிக்கும்!