கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்
கடந்தகாலங்களில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் செல்வம், செல்வாக்கு, பாசம் மிகுந்த குடும்பத் தலைவர்களின் இலட்சியமாகவும் விருப்பமாகவும் இருப்பது ‘கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை’.
ஆலைத்தொழிலும், பெருவணிகமும் கோலோச்சுகிற இன்றைய இயந்திர யுகத்திலும் ஆண்டி முதல் அம்பானி வரை அனைவருக்கும் உணவளித்து உயிர் காப்பது விவசாயம்.
இத்தகைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் உன்னதத்தையும், வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட் கலந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல வந்திருக்கிறது – நடிகர் சூர்யா தயாரிப்பில், அவரது தம்பி கார்த்தி நடிப்பில், பாண்டிராஜ் எழுதி இயக்கியிருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’.
தனியார் தொலைக்காட்சியில் வரும் ‘பிக்பாஸ்’ குடும்பத்தைவிட அதிகமான உறுப்பினர்களையும், பிரச்சனைகளையும் கொண்ட மிகப்பெரிய கூட்டுக்குடும்பம் அது. பெருநாழி ரணசிங்கம் (சத்யராஜ்) அக்கூட்டுக்குடும்பத்தின் தலைவர். வானவன் மாதேவியும் (விஜி சந்திரசேகர்), அவரது தங்கை பஞ்சவன் மாதேவியும் (பானுப்ரியா) பெருநாழி ரணசிங்கத்தின் இரண்டு மனைவிகள்.
முதல் மனைவியின் நான்கு மகள்களான மங்கம்மா ராணி, வேலு நாச்சியாள் ராணி (தீபா), சம்யுக்தா ராணி (யுவராணி), பத்மாவதி ராணி (இந்துமதி மணிகண்டன்), இரண்டாவது மனைவியின் ஒரே மகளான ஜான்சி ராணி (ஜீவிதா கிருஷ்ணன்) ஆகிய ஐந்து பெண்பிள்ளைகளுக்குப் பிறகு கடைக்குட்டி சிங்கமாக – முதல் மனைவியின் மகனாக – பிறந்தவர் நாயகன் பெருநாழி குணசிங்கம் (கார்த்தி).
பள்ளி இறுதி வகுப்பு வரை படித்திருக்கும் நாயகன் குணசிங்கம், வேளாண் தொழிலை நேசித்து, அதில் ஈடுபட்டு, நல்ல வருமானம் ஈட்டும் பணக்கார விவ்சாயியாகத் திகழ்கிறார். தனது ஐந்து அக்காக்கள் மீதும் நிறைய பாசத்தைப் பொழிந்து, அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து, ‘நல்ல தம்பி’யாக வலம் வருகிறார்.
குணசிங்கத்தின் மூன்றாவது அக்காவான சம்யுக்தா ராணி – மாணிக்கம் (இளவரசு) தம்பதியின் மகள் பூம்பொழில் செல்லம்மா (பிரியா பவானி சங்கர்), தாய்மாமன் குணசிங்கத்தை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். அவரது பெற்றோர்களும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளியாகவும், குடிகாரக் கணவன் இறந்துபோனதால் விதவையாகவும் இருக்கும் ஐந்தாவது அக்காவான ஜான்சி ராணியின் ஒரே மகள் ஆண்டாள் பிரியதர்சினியும் (அர்த்தனா பினு) குணசிங்கத்தை கரம்பிடிக்கத் துடிக்கிறார். அவருக்கு ஆதரவாக அவருடைய அம்மாவும், பாட்டியும் இருக்கிறார்கள்.
இந்த இரண்டு முறைப்பெண்களில் யாரை குணசிங்கத்துக்கு மனைவி ஆக்குவது என்கிற போட்டியில் அக்காக்கள், மாமாக்கள், பாட்டிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து வியூகம் அமைத்து செயல்பட்டுக்கொண்டிருக்க, குணசிங்கமோ, இக்கூட்டுக்குடும்பத்தைச் சாராத தில்லைநாயகம் (பொன்வண்ணன்) மகள் கண்ணுக்கினியாளை (சயிஷா சைகல்) காதலிக்கிறார். அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.
வீட்டில் இரண்டு முறைப்பெண்கள் இருக்க, அவர்களை ஒதுக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணக்க எப்படி ஆசைப்படலாம் என பிரச்சனை வெடிக்கிறது. மனத்தாங்கல் ஏற்படுகிறது. கூட்டுக்குடும்பம் பிளவுபடுகிறது.
இதற்கிடையே, ஒரு ஆணவக்கொலையைத் தட்டிக் கேட்டு பகையை சம்பாதிக்கிறார் குணசிங்கம். இந்தப் பகை ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? தன் காதலியை கரம் பிடிக்க குணசிங்கம் எப்படி குடும்பத்தினரிடம் சம்மதம் பெறுகிறார்? அவரை ஒருதலையாய் விரும்பிய இரண்டு முறைப்பெண்களின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது விறுவிறுப்பான மீதிக்கதை.
சமீபகாலமாக ‘காஞ்சனா’ ரக பேய்ப்படங்களும், ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ ரக காம-நெடிப் படங்களும் தமிழ்த்திரையை அதிகம் ஆக்கிரமித்துவரும் நிலையில், ‘ஆனந்தம்’, வானத்தைப் போல’, ‘சூரிய வம்சம்’, ‘பாண்டவர் பூமி’, ‘சமுத்திரம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ ரக குடும்பப் படமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைக் கொடுத்ததற்காக இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் சூர்யா, நடிகர்கள் கார்த்தி – சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் ஆளுக்கொரு பூங்கொத்து. பாராட்டுக்கள்.
நாயகன் பெருநாழி குணசிங்கமாக வரும் கார்த்தி, தந்தைக்கேற்ற தமையனாக, அக்காக்களை பாரபட்சம் காட்டாமல் நேசிக்கும் சகோதரனாக, நம்மாழ்வார் சொன்ன இயற்கை விவசாயத்தை முழுமனதுடன் ஆதரிக்கும் பணக்கார விவசாயியாக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், எதிரிகளோடு மோதும் காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். கார்த்தியின் திரைத்துறை வாழ்க்கையில் என்றென்றும் சிலாகித்துச் சொல்லக்கூடிய படமாக இது இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
நடிகரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா ஒரேயொரு காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார். அவரிடம் காளைகளை ‘’என் தம்பிகள்’’ என்று கார்த்தி அறிமுகப்படுத்துவது நெகிழ்ச்சி.
கூட்டுக்குடும்பத்தின் தலைவர் பெருநாழி ரணசிங்கமாக வரும் சத்யராஜ், அனுபவம் வாய்ந்த முதிர்ச்சியான நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். கூட்டுக்குடும்பம் குலைந்துவிடக் கூடாது என்பதில் அவர் காட்டும் அக்கறை, பொறுப்புள்ள தந்தையைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.. அவரது மனைவிகளாக வரும் விஜி சந்திரசேகரும், பானுப்பிரியாவும் ரசிக்கத்தக்க விதமாய் நடித்திருக்கிறார்கள்.
நாயகனின் காதலி கண்ணுக்கினியாளாக வரும் சயீஷா சைகல், அழகான கிராமத்துப் பெண்ணாக வந்து அசத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் பார்வையாளர்களைச் சுண்டியிழுக்கிறார். நாயகனை ஒருதலையாய் விரும்புகிற பூம்பொழில் செல்லம்மா, ஆண்டாள் பிரியதர்சினி ஆகிய முறைப்பெண்கள் பாத்திரத்திரங்களில் வரும் பிரியா பவானி சங்கரும், அர்த்தனா பினுவும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
முதல் அக்கா மங்கம்மா ராணியின் மகன் சிவகாமியின் செல்வனாக வரும் சூரி, காமெடி மன்னனாகவே மாறி வயிறு குலுங்க நிறைய சிரிக்க வைக்கிறார். அவர் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் திரையரங்கில் விசில் பறக்கிறது.
குடும்பப் பாங்கான ஒரு மெல்லிய ஸ்டோரி லைன் மீது, ஒன்றுக்கொன்று வித்தியாசமான 29 முக்கிய கதாபாத்திரங்களைப் படைத்து, அந்த கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் 29 நடிப்புக் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாய் திரைக்கதை அமைத்து, விரசமில்லாமலும் போரடிக்காமலும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். எல்லா கதாபாத்திரங்களுக்கான பெயர்களையும் அவர் வரலாற்றுப் பாட நூல்களிலிருந்தும், தமிழ் இலக்கிய நூல்களிலிருந்தும் எடுத்து சூட்டியிருப்பது புதுமை.
குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மிகவும் பொறுப்புடன் சித்தரித்திருப்பதோடு, பெருமுதலாளிகளும், பெருவணிகர்களும் லாபம் ஈட்டுவதற்காக அழிக்கப்படும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தையும் பிரசார நெடியின்றி முன் வைத்திருக்கிறார் இயக்குனர். ஆணவக்கொலை என்னும் கொடூரம், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயரம்,, தாய்மாமன் என்பதற்காகவே சிறுமி என்றும் பாராமல் கல்யாணம் செய்துகொள்ள நிர்பந்திக்கும் கொடுமை என பல சமூக அவலங்கள் பற்றி இப்படத்தின் மூலம் பேசியிருக்கும் இயக்குனர் பாண்டிராஜ், தானொரு சமூகப் பொறுப்புள்ள கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் அர்த்தமுள்ள வசனங்கள், படத்துக்கு மிகப்பெரிய பலம்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. படத்தொகுப்பாளர் ரூபன், படத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
‘கடைக்குட்டி சிங்கம்’ – குடும்பத்துடன் பார்த்து கொண்டாட வேண்டிய நல்ல படம்!