“தளபதியும் நாயகனும் சேர்ந்தது தான் கபாலி! ரஞ்சித் கிரேட்!!” – ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி, கடந்த 22ஆம் தேதி வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தின் ‘சக்சஸ் மீட்’ எனப்படும் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது,
தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி, கலை இயக்குனர் ராமலிங்கம், பாடகி ஸ்வேதா மோகன், நடிகர்கள் ஜான் விஜய், கலையரசன், மைம் கோபி, டைகர் ஹரி, தினேஷ், நடிகை ரித்விகா மற்றும் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி கேக் வெட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “படத்தின் ஒவ்வொரு காட்சியையும் முழுமையாக ரஜினி சாருக்கு சொன்ன பிறகுதான் படமாக்கினோம். நாங்களே சில காட்சிகள் வேண்டாம் என்று சொல்லும்போதுகூட, அவர், ‘இருக்கட்டும், இதை அப்படியே பண்ணாதான் சரியா இருக்கும்’ என்று சொன்னார்.
“குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் டைகர், ரஜினியை சுடுவது மாதிரி சீன் வைக்க வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தோம். ஆனால் ரஜினி சார், அமெரிக்காவிலிருந்து போன் பண்ணி, ‘அந்த கிளைமாக்ஸ் காட்சியே இருக்கட்டும்’ என்று உத்தரவே போட்டார்.
“ரஜினி சாரை போலவே, எங்கள் படக்குழு முழு சுதந்திரத்துடன் வேலை செய்ய அனுமதித்தவர் தயாரிப்பாளர் தாணு சார்” என்று கூறினார் ரஞ்சித்.
தயாரிப்பாளர் தாணு பேசும்போது, “இன்று காலை நான் ரஜினி சாரை சந்தித்தேன். அப்போது அவரிடம் நான் பழைய சம்பவங்களை எல்லாம் நினைவு கூர்ந்து கூறிக்கொண்டிருந்தேன்.
“நான் தயாரித்த ‘தெருப்பாடகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினி சார் கலந்துகொண்டு பேசும்போது, “நானும் தாணுவும் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போகிறோம்” என்று சொன்னார்.
“அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது, விரைவில் குணம் அடைய வேண்டும் என்று ராகவேந்திரா சாமிக்கு விரதம் இருந்தேன். ரஜினி சார் குணமாகி திரும்பி வந்தார்.
“திடீரென்று ஒருநாள் அவர் என்னை அழைத்து “நாம் ஒரு படம் பண்ணலாம்” என்றார். அவரும் நானும் ஒன்றாக அமர்ந்து இயக்குனர் ரஞ்சித்திடம் கதை கேட்டோம். ரஞ்சித் கதை சொல்லி முடித்ததும் நான் எழுந்து நின்று கை தட்டினேன். ரஜினி சார் ரஞ்சித்தை அணைத்துக்கொண்டார். அவர், ‘இந்தக் கதையை அப்படியே படமாக்கலாம்’ என்று நம்பிக்கை கொடுத்தார். அதன்பிறகு நான் தயாரிப்பு சார்ந்து எதிலும் தலையிடவில்லை. அவர்களுக்கான சுதந்திரமே எங்களுக்கான வெற்றியாக அமைந்தது.
“கபாலி’ படப்பிடிப்பின்போது ரஜினி சார் 24 மணி நேரமும் உழைத்தார். அவர் காலை 7 மணிக்கு வந்து மறுநாள் காலை 7 மணிக்கு செல்வார். அப்போது அவரிடம், ‘இப்படி உழைத்தால் உடல்நலம் என்ன ஆவது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘எல்லோரும் ஆர்வமாக உழைக்கிறார்கள். இப்படியே போகலாம்’ என்று கூறினார்.
“உடல் நலம் சரியில்லாதபோது கூட அவர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். குறிப்பாக, டீசரில் ஹிட்டடித்த, தலையைக் கோதியபடி நடக்கும் காட்சியை படமாக்கியபோது, அவருக்கு பயங்கர காய்ச்சல். ஆனால் அந்த நிலையிலும் அவர் சில காட்சிகள் நடித்தார். அந்த காட்சிகள் தான் இன்று பெரிய வெற்றியை பெற்றுத் தந்திருக்கின்றன.
”ரஜினி என்னிடம் பேசும்போது, ‘உனக்கும் எனக்கும் உள்ள நட்பிற்கு ‘கபாலி’ ஒரு கிரீடம். இந்தப் படத்தை ‘பாட்ஷா’னு எல்லோரும் சொல்லுறாங்க. ஆனா, இந்தப் படம் தளபதியும், நாயகனும் சேர்ந்த ஒரு படம். ரஞ்சித் கிரேட்’ என்று சொன்னது அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது.
“எந்திரன்’, ‘சிவாஜி’ படங்களை பார்க்க அழைக்கும்போது ‘நேரமில்லை’ என்று கூறிய சோ, இப்போது அவரே அழைத்து ‘கபாலி பார்க்க வேண்டும்’ என்று கூறியது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கென தனி காட்சியே திரையிட்டோம். படம் பார்த்த பிறகு இரவு முழுவதும் ரஜினியை அவ்வளவு புகழ்ந்து பேசியிருக்கிறார்.
“கபாலி’ படத்தின் வசூல் ஒரு பிரமாண்டம். 6 நாட்களில் மொத்தம் 320 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. சென்னை நகரில் மட்டும் இந்த 6 நாட்களில் 6 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. நாளை அது 7கோடி ரூபாய் ஆகிவிடும். இது ஒரு மிகப் பெரிய சாதனை.
“எஸ்.பி.முத்துராமன் சாருக்குப் பிறகு அதிகமாக நான் ரஞ்சித்தை தான் மதிக்கிறேன். அதனால் தான் ‘எனக்கு இன்னொரு படம் பண்ணிக் கொடு’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார் தயாரிப்பாளர் தாணு.