கபாலி – விமர்சனம்

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ வெற்றிப்படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம்; ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ தோல்விப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம்…

“வந்துட்டேன்னு சொல்லு… நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று ரஜினி கம்பீர குரலில் வசனம் பேசிய டீசர் வெளியான அடுத்த நொடியே தமிழ் திரைப்பட ரசிகர்களின் ஆவலைத் தூண்டி ‘கபாலி’ காய்ச்சலை எகிற வைத்த படம்…

எப்படி இருக்கிறது…? பார்க்கலாம்…

படத்தின் ஆரம்பத்திலேயே ரஜினி, 25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு,  சிறையிலிருந்து வெளியே வருகிறார். வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. (கிட்டத்தட்ட நெல்சன் மண்டேலா ஸ்டைல்.) சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை விளக்கிக்கொண்டு வருகிறார்.

அப்போது, ‘43வது கேங்’ என்ற கேங்ஸ்டர் கும்பல், மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதாகவும், அது மட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளைச் செய்து வருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார் ஜான் விஜய்.

உடனே 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார் ரஜினி. அவனது கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார். இந்த சண்டைக் காட்சியில் தான், டீசரில் வரும் “கபாலிடா…” வசனம் வருகிறது. தான் வெளியில் வந்துவிட்டதாக லிங்கேஷின் பாஸிடம் போய் தெரியப்படுத்துமாறு ரஜினி சொல்லிவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்.

அங்கு போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு ‘கபாலி’ பெயரில் மறுவாழ்வுக்கூடம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூடத்துக்கு ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் ரஜினி, தனது பெயரில் நல்லது நடப்பதை நினைத்து பூரித்துப் போகிறார். அப்போது மாணவர்களுடன் அவர் உரையாடும் நிகழ்ச்சியில், “நான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன்?” என்பதை எடுத்துக் கூறுகிறார். பிளாஷ்பேக் ஆரம்பமாகிறது.

பிளாஸ்பேக் காட்சியில், ரஜினி ஜெயிலுக்கு போகும்போது, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, குண்டு காயத்துடன் கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். இதனால், தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன், தனது மனைவி உயிருடன் இருக்கிறாரா? தனது குழந்தை என்னவாயிற்று? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார்.

இந்நிலையில், போதை மருந்து சப்ளை செய்யும் மைம் கோபியை ரஜினி கொன்றுவிடுகிறார்.  மைம் கோபி, கிஷோர் கும்பலைச் சேர்ந்தவர். இதனால் இனி ரஜினியால் தனது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்கும் என்று நினைக்கும் கிஷோர், அவரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்.

இதன்பின்னர், ரஜினி தனது மனைவியையும், குழந்தையையும் கண்டுபிடித்தாரா? கிஷோரின் அராஜகத்தை ஒழித்துக்கட்டினாரா? என்பது மீதிக்கதை.

படத்தின் முழு பலமே ரஜினி தான். வழக்கமான மாஸ் காட்சிகளில் மட்டுமல்லாது, ரஜினியின் இன்னொரு பக்கமான செண்டிமெண்ட் காட்சிகளிலும் பின்னி எடுத்துள்ளார். படத்தில் அவர் பேசும் முதல் வசனமே “மகிழ்ச்சி” என்பது தான். அவர் அதை சொல்லும்போது நமக்கும் மகிழ்ச்சி வருகிறது. பழைய கெட்டப்பில் பார்க்கையில் ‘பில்லா’ பட ரஜினியை நினைவுபடுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் தன்னுடைய அதே ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். “வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல” என்ற ‘படையப்பா’ வசனம் தான் நினைவுக்கு வருகிறது. பள்ளி நிகழ்ச்சியில், “நான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன்?” என்பதை விளக்கும் காட்சியிலும், தனது மகளிடம் பேசும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.

ஜான் விஜய், ரஜினியின் நண்பராக வருகிறார். இவருக்கான வசனங்கள் எல்லாம் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. அதை யதார்த்தமாக செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார்.

ரஜினியின் பாடிகார்டாக வருகிறார் அட்டகத்தி தினேஷ். ரஜினி இடும் கட்டளைகளை எந்திர மனிதன் போல் செய்து முடிக்கிறார். இறுதிக்காட்சிகளில் தனது சென்டிமென்டான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.

ராதிகா ஆப்தே தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணாகவும், ரஜினியின் மனைவியாகவும் வருகிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வயதான கெட்டப்பிலும் ரஜினியுடனான அவரது காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. 25 வருடங்களுக்குப் பிறகு தனது கணவரைப் பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சியில் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

தன்ஷிகாவுக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். ‘பில்லா-2’ நயன்தாரா மாதிரியான ஸ்டைலான, அழகான பெண்ணாக வருகிறார். சண்டைக் காட்சியிலும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.

போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர் ரஜினியை எதிர்த்து பேசும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.

வில்லனாக கிஷோர், லிங்கேஷ் ஆகியோர் வந்தாலும், முக்கிய வில்லனான மலேசிய நடிகர் வின்ஸ்டன் சா மிரட்டியிருக்கிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

‘மெட்ராஸ்’ படத்தில் பார்த்த கலையரசன், இப்படத்தில் அப்படியே நேர் எதிராக வந்து நிற்கிறார். குழந்தைதனமான முகத்தில் எதார்த்தம் கலந்து நடித்திருக்கிறார்.

பிளாஷ் பேக் காட்சியில் வரும் நாசரின் நடிப்பும் அற்புதம்.

ரஜினியை இயக்குனர் ரஞ்சித் தன்னுடைய கதைக்கேற்ப முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார். படத்தில் தன்னுடைய வழக்கமான பல சிம்பாலிக் காட்சிகளை வைத்துள்ளார். வசனங்களில் அசத்தியுள்ளார். ரஜினியின் படமாக மட்டுமல்லாமல், ரஞ்சித் படமாகவும் மாற்றியிருக்கிறார். பாராட்டுக்கள் ரஞ்சித்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் தான். பின்னணி இசையிலும் பின்னி பெடலெடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன்.

படத்தின் பல காட்சிகள் செட் ஒர்க் தான் என்றாலும், அது தெரியாத அளவுக்கு மலேசிய, தாய்லாந்து தெருக்களை கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் ராமலிங்கம்.

எதார்த்தமான ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தியுள்ளனர் இரட்டையர்களான அன்பறிவ். இரண்டரை மணி நேரத்துக்கேற்றபடி விறுவிறுப்பாக கதையை கட் செய்துள்ளார் பிரவீண்.கே.எல்

ஒரு கேங்ஸ்டர் படம் என்று எதிர்பார்த்து செல்பவர்களுக்கு சண்டை குறைவு தான். எனினும், முந்தைய படங்களின் தோல்வியை ‘கபாலி’ உடைத்தெறிந்து ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

‘கபாலி’ – “மகிழ்ச்சி” (ரசிகர்கள்)!