கபாலியும், களவாணி பயலுவளும்…!

“இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க…?”

இப்படி அம்மாஞ்சித்தனமாக கேள்வி கேட்கும் அபிஷ்டுகளாக நீங்கள் இருந்தால், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்று, உங்களை நீங்களே மாறிமாறி இரு கன்னத்திலும் அறைந்துகொள்ளுங்கள். அதற்கான பேராண்மை உங்களுக்கு இல்லாவிட்டால், கடந்த பத்து நாட்களாக மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கபாலி திரைப்படம் குறித்து நடக்கும் சண்டபிரசண்டங்களை கவனியுங்கள். இங்கு சாதி எவ்வளவு நுட்பமாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே புலனாகிவிடும். யப்பா…மனித மனங்களுக்குள் இவ்வளவு வன்மமா…? இவ்வளவு வக்கிரமா…? சாதியெனும் பேயின் கோரப்பற்கள் இவ்வளவு கூர்மையானதா..?

கபாலி கடந்த ஒரு மாதமாகவே தமிழர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மந்திரச் சொல்லாகிவிட்டது. டீக்கடை தொடங்கி பறக்கும் விமானம் வரைக்கும் இதுவே ஹாட் டாப்பிக். கபாலியை நோக்கியே சகலமும் கட்டமைக்கப்பட்டது. இந்த வியாபாரக் கட்டமைப்பு வித்தை, ரஜினியின் முந்தைய படங்களின்போதும் நிகழ்த்தப்பட்டதுதான். ஆனால் இந்த முறை அது எல்லா எல்லைகளையும் மீறி கார்ப்பரேட் நிறுவனங்கள் கபாலியை தரிசிக்க தனது ஊழியர்களுக்கு டிக்கெட்டுடன் கூடிய விடுமுறையும் அளிக்கும் இடத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.

டிக்கெட்டு விலையோ கொள்ளையின் உச்சத்திற்கே போனபோது, நீதிமான்களும் அதற்கு வக்காலத்து வாங்கினர். “ரசிகர்கள் தாமாக விரும்பித்தான் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்கள். அதில் ஒன்றும் தப்பில்லை” என அவர்கள் அளித்த தீர்ப்பைக் கண்டு கபாலியே ரகசியமாய் சிரித்திருப்பான். ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியிட்டு ரசிக மனங்களை சுரண்டும் இந்த “கலைப்புலி”களின் கலைச்சேவையை, அந்த கபாலியே கூட கண்டிக்கவில்லை என்பதுதான் இந்த திரைவிளையாடலின் உச்சம். ஆனால், படத்தின் இயக்குனர் ரஞ்சித், இந்த கட்டணக் கொள்ளையைக் கண்டிப்பதாக வெளிப்படையாக சொன்னது பாராட்டத்தக்கது.

இந்தத் திரை விளையாடல்களை தாண்டி இப்போது படம் திரைக்கு வந்துவிட்டது. இதுவரையிலான எல்லா வசூல் சாதனைகளையும் அது முறியடித்துவிட்டது. ரசிகர்களுக்கு வழக்கமான ரஜினியை பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், வஞ்சனையின்றி கபாலியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முள்ளும் மலரும் கால ரஜினி ரசிகர்களோ மீண்டும் பழைய ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இது ரஜினி படமா? அல்லது ரஞ்சித் படமா? என்கிற விமர்சன விற்பன்னர்களின் விவாதமும் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை விமர்சிப்பவர்களை “தலித் விரோதி”களாக முத்திரை குத்தும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இதுவரை இல்லாத வகையில் இப்படத்தின் மீது நுட்பமான சாதியத் தாக்குதல்கள் நடத்துவது பெரும் அதிர்ச்சியையும் அயர்வையும் ஏற்படுத்துகிறது. ரஜினியை இதுவரை பாலச்சந்தரில் தொடங்கி ஷங்கர் வரை எத்தனையோ இயக்குனர்கள் இயக்கியபோதெல்லாம் எழாத ஒரு வன்மக்குரல், இப்போது கபாலிக்கு மட்டும் கிளம்பியிருப்பது, ” இது ஒரு சாதியச் சமூகம்” என அம்பேத்கர் அறிவித்தத்தை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்துகிறது.

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கிளம்பிவந்த ஒருவர், ரஜினி போன்ற மாஸ் `ஹீரோவை வைத்து படம் இயக்குவதா? என்ற வயிற்றெரிச்சலிலிருந்து இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தனது முந்தைய படங்களான அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் வழியே தான் நம்பும் ஒரு அரசியல் கருத்தியலை இயக்குநர் பா.ரஞ்சித் முன்வைத்தபோதே இத்தகைய தாக்குதல்களை அவர் மீது நடத்துகிற சாதியத் துவேஷம் துவங்கிவிட்டது. இப்போது மூன்றாவது படத்திலேயே தமிழின் உச்ச நட்சத்திரத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தபோது, இந்த துவேஷம் உச்சத்திற்கு போயிருக்கிறது.

பாரம்பரியமிக்க பத்திரிகை என்று தன்னை பறைசாற்றிக்கொள்ளும் தினமணி நாளிதழ், ஒருநாளும் இல்லாத திருநாளாக அரைப்பக்கத்துக்கு ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறது. அதற்கு “கபாலி ஒரு கெட்ட கனவு” என்றும் தலைப்பிட்டு தன் பூணூல் அரசியலை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டது. படத்தின் கதை பற்றியெல்லாம் அதற்கு பெரிய கவலையில்லை. அதை படமாக்கியவர் யார் என்பதுதான் அதற்கு பிரச்சனையாம். “அடிமட்ட சிந்தனை கொண்டவர்” அவரிடம் ரஜினியை இயக்கும் வாய்ப்பை கொடுக்கலாமா? என கேட்கிறது தினமணி. அவர் “லோ பட்ஜெட் படங்களை இயக்கியவர்”, அந்த குருவி தலையில் பனங்காயை வைக்கலாமா? என்றும் ஜீவகாருண்யம் பேசுகிறது அது..

இதுநாளும் “ஹை பட்ஜெட்”டில் ரஜினியை இயக்கிய “உயர்மட்ட சிந்தனை” கொண்ட திரையுலக சிற்பிகளெல்லாம் ரஜினியை பற்றி ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பத்தை ரஞ்சித் உடைத்துவிட்டாரே என்கிற கடுப்பில் வந்த வக்கிரம்தான் இது. “டச்சி, டச்சி, டச்சி, டச்சி என்ன டச்சி மீ, ஏ கிச்சி, கிச்சி, கிச்சி, கிச்சி என்ன கிச்சி மீ ஏழு மணிக்குமேல நானும் இன்பலட்சுமி” என்று நக்மாவுடன் ரஜினி குத்தாட்டம் போட்டபோதெல்லாம், ஆஹா.. ஓகோ.. பேஷ்.. பேஷ்.. என்று சப்புக்கொட்டி ரசித்த இவர்கள்தான், நீண்ட நாட்களுக்குப்பிறகு தன்னுடைய படத்தில் பெண்ணை மலினப்படுத்தாமல், ”என் குமுதவல்லிதான் என்னை மோட்டிவேட் செய்தவள்” என பெண்ணின் ஆளுமையை மதிக்கிறவராக ரஜினியை பேசவைத்த சிந்தனையை “அடிமட்ட சிந்தனை” என தூற்றுகிறார்கள்.

ரஜினியின் மெகா பட்ஜெட் படங்களான எந்திரன், லிங்கா, பாபா, படையப்பா, அருணாசலம், சந்திரமுகி போன்ற படங்களெல்லாம் பேசாத எளிய மக்களின் வாழ்க்கையை, புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை, கடல் கடந்துபோய் அவர்கள் படும்பாட்டை, பேசுகிற இந்தப் படத்தைத்தான் “அடிமட்ட சிந்தனை” என்கிறார்கள். “ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்றான்” என பேசியபோது, படித்த இஞ்சினியர் பேயை விரட்டும் சாகசத்தை செய்தபோது, அறிவியலுக்கு முரணாக ஒரு ரோபோவுக்கும் காதல் வருமென்று நடித்தபோது, மந்திரம் சொன்னால் பட்டம் மடியில் வந்துவிழும் என நம்ப வைத்தபோது, பத்து பதினைந்து அடியாள் சூழ பாட்சா… பாட்சா… என்று வலம்வந்து டப்பு டப்பு என்று சுட்டுத் தள்ளியபோதெல்லாம் இந்த விமர்சனக்காரர்களுக்கு வராத கோபம், “நம்பியார் படத்துல வர்ற அடியாள் கபாலியல்ல, நான் ஆளப்பிறந்தவண்டா” என அடித்தட்டு மக்களின் குரலாய் எழுந்து நிற்கும்போது வருவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? வர்க்க, சாதிய பாசத்தைத் தவிர.

அவர் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்த தமிழகத்தின் மீசை வைத்த குழந்தையென ரஜினியை வர்ணித்தெழுதி கல்லா கட்டிக்கொண்ட கவிஞர் வைரமுத்துவுக்கு இந்த படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பு தரப்படவில்லை. அதனால் வந்த கோபமோ அல்லது நான் தேவண்டா என மீசை முறுக்கும் வேஷமோ தெரியவில்லை, அவர் இப்படம் வெளியான மறுநாளே இது தோல்விப்படம் என நாட்டாமை மாதிரி ஒரு தடாலடி தீர்ப்பை சொன்னார். போதாததற்கு லையன்ஸ் கிளப்காரங்க கிட்டயிருந்து கோட்டு சூட்டை ரஞ்சித் காப்பியடித்து ரஜினிக்கு போட்டுவிட்டுட்டார் என பஞ்ச் டயலாக்கையும் விட்டுட்டு அம்பலப்பட்டுவிட்டார். ரஜினி எத்தனையோ படங்களில் கோட்ஷூட் போட்டிருக்கிறார். அதெல்லாம் பாத்திரத்திற்கான உடை அவ்வளவுதான். ஆனால் கபாலியில் அந்த கோட்டு ஒரு அரசியலின் குறியீடாகி இருக்கிறது. “நான் கோட்டு போடுவேண்டா, ஸ்டைலா, கெத்தா” என ரஞ்சித் வைத்திருக்கும் வசனமும், “காந்தி துண்டுக்கு மாறியதற்கும், அம்பேத்கர் கோட்டு போட்டதற்கும் ஒரு அரசியல் இருக்கு” என ரஜினியை பேச வைத்திருக்கும் சாதுரியத்தை கண்டு, அதையும் ஒரு தலித் வச்சிட்டானே என்கிற ஆத்திரமும்தான் வைரமுத்துவை இப்படி பேச வைத்திருக்கக் கூடும். சாதி மத பேதமெல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம் என எழுதிய கவியிடமிருந்து இப்படியொரு வன்மச் சொல்லாடல் வருமென யார் நினைத்திருக்கக்கூடும்? என்ன பண்றது… இப்பல்லாம் எல்லாருமே சாதி பாக்குறாங்க போலிருக்கு.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் சாதிய சமூகமாகி விட்டதோ எனுமளவுக்கு கபாலியை முன்வைத்து இணைய உலகிலும் சண்டை நடந்துகொண்டிருக்கிறது. “இந்தப் படம் வசூலில் அவுட்டு”ன்னு ஒருவர் தீர்ப்பெழுதுகிறார். “எங்க `ஹீரோவை இப்பிடி ஜீரோ ஆக்கிட்டியே, இது உன் சாதி புத்தி”ன்னு ஒருத்தர் வாரித் தூற்றுகிறார். “இது காப்பியடித்த காட்சிகள் நிறைந்தது”ன்னு ஒரு மேதாவி தன் மேதாவிலாசத்தை நிறுவப் பார்க்கிறார். “இதில் பெரியார் படம் இல்லையே”ன்னு ஒருவர் உரிமையோடு ஆதங்கப்படுகிறார். ஒருவர் ரஞ்சித்தின் நதிமூலத்தை தோண்டியெடுத்து போடுகிறார். “ரோஹித் வெமூலா, கன்னையாகுமார் வரிசையில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் ரஞ்சித்” என ஒருவர் உச்சிமோந்து வியந்தோதுகிறார். ஆனால் இந்த வசவுகளை “ஜாலியா இருக்கு” என ரஞ்சித் ரசிக்கிறார் என்பது ஆரோக்கியமானது.

படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு வசனம் வருகிறது. “பறப்பதுதான் பறவையின் இயல்பு. அதை கூண்டில் அடைக்காதீங்க, திறந்து விடுங்க. வாழ்வா சாவா என்பதை அது தீர்மானிக்கட்டும். உங்கள் கருணை சாவைவிட கொடூரமானது” என பேசியபடியே ஒரு பறவையை கூண்டிலிருந்து திறந்துவிடுவார் கபாலி. இதுதான் படம் சொல்லும் மொத்த அரசியலின் குறியீட்டு காட்சி. ரஞ்சித் ஒரு பறவை போல. அவரை பறக்க விடுங்கள். உங்களின் தங்கக்கூண்டில் அவரை அடைக்கப் பார்க்காதீர்கள். அடக்குனா அடங்குற ஆளாகவும் அவர் இருக்க மாட்டார். இருக்கவும் கூடாது. இருக்கவும் முடியாது.

– எஸ்.கருணா

நன்றி: இளைஞர் முழக்கம்