“கபாலி’ எனும் சிறு நெருப்பு” – ஒரு ரசிகனின் முதல் பார்வையில்!

மிக நீண்ட காலத்துப்பிறகு ரஜினிகாந்த் (வந்துபோகாமல்) நடித்திருக்கும் படம்.

மலேசியாவில் மூன்று நான்கு தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கும் தழிழர்களின் வாழ்வும், போராட்டமுமே கதை களம். தொழிலாளர் தலைவர் நாசர். அவரது பேச்சில் கவரப்பட்டு, தொழிலாளர் பிரச்சனைக்காக களம் காணுகிறார் ரஜினி. அவருக்கு துணையாக அவரது மனைவி இருக்கிறார். இன்னொரு பக்கம்,  போதை பொருட்களை விற்பனை செய்யும்  கூட்டம்.  லீ என்ற ஒரு மலேசியன் தலைவனாகவும் அவனை சுற்றி ஒரு தமிழ் கூட்டமும் இருக்கிறது. தொழிலாளர்களின் ஒற்றுமையை விரும்பாத லீ கூட்டம், தொழிலாளர் தலைவர் நாசரை  கொலை செய்கிறது. ரஜினி தலைவராகிறார். 43 என்கிற அந்த லீ கூட்டம், தலைவரின் மகன்தான் அடுத்த தலைவராக வேண்டும்  என்று கூறி நாசரின் மகனை ரஜினிக்கு எதிராக திருப்புவதற்கு பெரும் கலவரம். ரஜினியின் நிறைமாத மனைவி சுடப்படுகிறார்.  ரஜினி சிறைக்கு செல்கிறார். மனைவி உயிரோடு  இருக்கிறாரா, இல்லையா? குழந்தை பிறந்ததா, இல்லையா?  என்ற பெருங்கேள்வியோடு சிறையில் இருந்து இருபத்தைந்து ஆண்டு கழித்து ரஜினி வெளியே வந்து நடப்பதுதான் மீதி கதை.

ரஜினி அறிமுக காட்சியில், அவர் கையில் வைத்திருக்கும் புத்தகமே (my father baliah)  அவர் யார் என்பதை காட்டிவிடுகிறது. அடுத்த காட்சி இன்னும் மிரள வைக்கிறது. உழைப்பவனின் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்காவே வயதான ரஜினி இரண்டு Pull up எடுக்கிறார்.

நடிகர்களின் தேர்வு மிக கச்சிதம். படத்தில் ஏராளமான நடிகர்கள் இருந்தாலும், எல்லோருமே தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

“காந்தி சட்டையை கழட்டியதற்கும், அம்பேத்கர் கோட் போட்டதற்கும் பல அரசியல் இருக்கு” என்று ரஜினி அரசியல் பேசும் இடம் அதிர்கிறது.

இன்னொரு இடத்தில், “சோற்றுக்கே வழி இல்லாமல்தாண்டா இருந்தோம். ஆனால் இப்ப நாங்க முன்னேறி வருவது, நல்லா படிக்கிறது, உங்க கண்ணை உறுத்துதுன்னா, ஆமாண்டா அப்படித்தான் போடுவோம், படிப்போம், முன்னேறுவோம்” என்ற வசனம் எகிறுகிறது.

தான் மனைவியை பார்க்கப்போகும் காலை வேளைக்காக இரவெல்லாம் விழித்திருக்கும் ரஜினியின் காதல், உழைப்பாளியின் வேர்வை போல புனிதமானது.

இது ஒரு வழக்கமான Gangster  படம் அல்ல. முழுக்க முழுக்க தொழிலாளர் நலன், சமூக அக்கறை, போதையில் சமூகம், ஒடுக்கப்பட்ட மக்களின் வலி என அடித்தட்டு மக்களின் வாழ்வியலை  சினிமாவில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

தான் சொல்ல வந்த படைப்பை சமரசமில்லாமல் சொன்ன இயக்குனர், நம் வணக்கத்துக்குரியவர். இந்த படத்தை பார்த்தபிறகு ரஜினி என்ற பிம்பம் ஒருபடி மேலே நின்றது, நிற்கிறது.

சாதிவெறியையும், மதவன்முறைகளையும் தூண்டியும், குடும்ப உறவுகளை கேவலமாக சித்தரித்தும், இளைஞர்களை சீரழித்து வரும் தமிழ் சினிமாக்கள் மத்தியில்  கபாலி ஒரு நெருப்புடா…

மகிழ்ச்சி….

ரோஹித் அப்துல்லா

Courtesy: maattru.com