“ஹீரோயின் பேரு டேமேஜ் ஆகுற மாதிரி பாட்டு எழுதக் கூடாது”: பாக்யராஜ் அறிவுரை!
ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்க, ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இசையமைத்து, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘கபடி வீரன்’.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது, ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா, தொழிலதிபர் தமிழ்செல்வன், நடிகர் பானுச்சந்தர், அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் திரையுலக வி.ஐ.பிகள் கே.பாக்யராஜ், ராதாரவி, ஜாகுவார் தங்கம், நமீதா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், விஜயமுரளி , பெருதுளசி பழனிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ்,. “படத்தோட தயாரிப்பாளர் ஏலகிரி அம்மாவுக்கும், படத்துல, இது அதுன்னு இல்லாம எல்லா பொறுப்புகளையும் எடுத்து தன் தோளில் போட்டுட்டு இருக்கிற நாயகர் அரசு, அதிரடி அரசு, அவர்கூட ஒர்க் பண்ணிய எல்லோருக்கும் என் வணக்கம், ,வாழ்த்துகள். அப்புறம் இந்தப் படத்தோட பைட் மாஸ்டரையும் பாராட்டணும். இங்க போட்டு காட்டின சீன்களை வச்சி பார்க்கிறப்போ., படம் முழுக்க ஒரே ஆக்ஷனா தான் மெயினா இருந்தது…. நடிகர் அதிரடி அரசு அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
அதே மாதிரி டான்ஸ் மாஸ்டரையும் பாராட்டி சொல்லணும். அவரு ஒரு வேலை பண்ணியிருந்தார். .என்னன்னா, எனக்கு வாரிசா ஆகிட்டாரு… எப்படின்னா, பொதுவா நான் டான்ஸ் ஆடினா , எக்சர்சைஸ் மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க … அவரு எக்சர்சைஸையே டான்ஸ் ஆக்கிட்டாரு… ரொம்பவே கிரியேட்டீவிட்டியா, ஹீரோ கை காலை அப்படி இப்படி அசைக்கச் சொல்லி, அதற்கு ஏற்ற மாதிரி பீஜியத்தையும் , மியூசிக்கையும் சிங்க் பண்ணி பாடல் காட்சிகளை அழகா அமைச்சிருக்கிறார் பாராட்டுகள்.
ஆனா, பாட்டு எழுதியிருக்கிற இந்தப் படத்தின் எல்லாமுமான அதிரடி அரசு பாட்டு எழுதும்போது கொஞ்சம் யோசிச்சு எழுதனுங்க. என்னன்னா, நாயகி காயத்ரி பாடும்போது “நான் பார்த்த ஆண்களிலேயே நீ வித்தியாசமானவன் … ” அப்படின்னு இருந்துச்சு. பொம்பளை பாடும்போது அப்படி எழுதக் கூடாது அது கேட்டதும் எனக்கு ‘கருக்’குன்னு இருந்துச்சு.
“ஆண்களில் நீ வித்தியாசமானவன்”னு இருக்கலாம்.. அதுவரைக்கும் ஓ.கே. ஹீரோயின் பேரு டேமேஜ் ஆகுற மாதிரி எழுதக் கூடாது. புதுசா பாட்டு எழுத வந்திருக்கீங்க … இனி பார்த்து எழுதுங்க” என்றார் பாக்யராஜ்..
நடிகர் டத்தோ ராதாரவி பேசுகையில் “நான் நிறைய அட்வைஸ் பண்ணுவேன். ஆனா யாரும் கேட்கறதில்லே. இங்க வந்து இருக்கிற பவர் ஸ்டார் சீனிவாசன், ஹீரோவா நடிக்கப்போறேன், படம் தயாரிக்கப் போறேன்னப்போ வேண்டாம், காமெடியனா நடிங்க நல்லா இருக்கும்னு எவ்ளவோ சொன்னேன். கேட்கலை … எப்பவுமே நல்லது சொன்னா கேட்க மாட்டாங்க .அதுல சீனிவாசன் ஒரு முக்கியமான ஆளு. தேவை இல்லாத பிரச்சினையில எல்லாம் சிக்கி மீண்டு வந்து இப்போ காமெடியனா வலம் வந்துட்டு இருக்கார். காமெடி நடிகரா வளர்ந்துட்டு இருக்கார். இதைத் தான் நான் அப்பவே சொன்னேன் அவரு கேட்கலை. அதனால சில இடங்கள்ல என்னை பார்க்காம கூட போயிடுவார். ஆனா நான் விடமாட்டேன். நமக்கு எல்லாமே பேஸ் டூ பேஸ் தான். சீனிவாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இதை பேசுறேன். அவரு ரொம்ப நல்ல மனசு உடையவர். அவரு ஏமாத்திட்டாருன்னு பல பேரு புகார் சொல்றாங்க .ஏன் ஏமாந்திங்கன்னு யாராவது திருப்பி கேட்கறீங்களா ? அதே மாதிரி ,நம் சினிமா குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது என்றாலும் நான் தான் முதல் ஆளாக நிற்பேன். நடிகர் விஷாலிடம் கூட போனில் ஏதாவது முக்கிய பிரச்சினை என்றால் அவ்வப்போது பேசுகிறேன். சிலர் தூண்டி விட்டு ஓடி விடுவார்கள் நான் அப்படி கிடையாது. ஓடி ஒளிவது எனக்குப்பிடிக்காது.
பாருங்க ., சீனிவாசனை பத்திப் பேசினா இவ்ளோ பெரிய டாபிக்ல வந்து நிக்குது.
அது போகட்டும். இந்தப் படத்தின் தயாரிப்புக்கு உறுதுணையா இருந்து, இந்தப்படம் சிறப்பா வர காரணமாயிருந்து இங்க, ஏலகிரி சக்தி அம்மா வந்திருக்காங்க .அந்த அம்மாவை வணங்குங்க ., எல்லா அம்மாவையும் வணங்குங்க .குறிப்பா உங்க அப்பா அம்மாவை வணங்க மறந்துடாதீங்க … அவங்களை கைவிட்டுடாமல் கடைசி வரை கூட வச்சுக்குங்க ., நடிகர் திலகம் வீட்டு பெயர் அன்னை இல்லம். நடிகவேள், கலைஞர், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி … அவ்வளவு ஏன்… என் வீடு வரை எல்லோரது வீடுகளுக்கும் எங்களது அம்மாக்களின் பெயரை தான் வைத்திருக்கிறோம் என்றால் பாருங்கள். எனவே நீங்களும் உங்களது பெற்றோரை கைவிட்டு விடக் கூடாது எனக் கேட்டு கொள்கிறேன்”. என்றார் ராதாரவி.
இவ்விழாவில் ,ஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா , தொழிலதிபர்தமிழ்செல்வன் , நடிகர் பானுச்சந்தர், இப்பட இயக்குனர் – நாயகர் அதிரடி அரசு , அறிமுக நாயகி காயத்ரி ..ஜாகுவார் தங்கம் , நமீதா , வீரா , ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் , விஜயமுரளி , பெரு துளசி பழனிவேல் … உள்ளிட்டோரும் பேசினர்.
முன்னதாக ,டத்தோ ராதாரவி ” கபடி வீரன்” படத்தின் பாடல்கள் ஆடியோவை வெளியிட திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியை தொகுப்பாளர் அர்ச்சனா அழகான தமிழில் தொகுத்து வழங்க ., பி.ஆர்.ஓ ப்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் வரவேற்றனர்.