காப்பான் – விமர்சனம்
பிரதமரையும், விவசாயிகளையும் ஒருசேர காப்பாற்றும் இமாலயப் பணியை நாயகன் எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘காப்பான்’.
இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரி சமுத்திரக்கனி. பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு சதி திட்டம் நடக்கிறது.
நாயகன் சூர்யாவும் சில நாசவேலைகளைச் செய்கிறார். அந்த நாசவேலைகளை எதிரிகளின் சதி திட்டத்தில் இருந்து மோகன்லாலை காப்பாற்றுவதற்காக அவர் செய்கிறார். இதனால் சூர்யாவை மோகன்லால் பாராட்டி, ராணுவ உளவுப் பிரிவிலிருந்து தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார்.
ஒரு கட்டத்தில் மோகன்லால் பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் அரசியல் சூழல் காரணமாக மோகன்லாலின் மகன் ஆர்யா பிரதமராக பதவியேற்கிறார். ஆர்யாவிற்கும் சூர்யா தான் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கிறார். ஆர்யாவையும் கொல்ல சதி வேலை நடக்கிறது.
மோகன்லாலை கொன்றது யார்? ஆர்யாவை கொல்ல துடிப்பது யார்? என்பதை பாதுகாப்பு அதிகாரியான சூர்யா இறுதியில் எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.
பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, விவசாயி என இருவித கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா. பாதுகாப்பு அதிகாரிக்கான தோற்றம், கம்பீர நடை, துறுதுறு பார்வை என நடிப்பில் மிளிர்கிறார். படத்தின் மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வாவ் சொல்ல வைக்கிறார் சூர்யா, குறிப்பாக ரெயில் ஸ்டண்ட் காட்சி வேற லெவல்.
எந்த கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தும் மோகன்லால், இதில் பிரதமராக நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவர் பேசும் தமிழ் வசனங்களில் மலையாள வாசனை கலந்திருந்தாலும், அவரின் வசனங்கள் திரையரங்குகளில் கைத்தட்டல் அள்ளுகிறது.
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணாக வரும் நாயகி சாயிஷா, அழகு பதுமையாகத் தோன்றி, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் ஆர்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொம்மன் இரானி வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒவ்வொரு பட்த்திலும் ஒவ்வொரு துறையில் நடக்கும் அரசியலை தோலுரித்து காட்டும் இயக்குனர் கே.வி.ஆனந்த். இப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத்திற்கு ஏற்படும் சிக்கல்களை திரைக்கதையில் சிறப்பாக கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு காட்சிகளை கச்சிதமாக படமாக்கியுள்ளார். ஆண்டனியின் படத்தொகுப்பு திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவுகிறது.
‘காப்பான்’ – போலி சமூக அக்கறை!