காளி – விமர்சனம்
அநாதை ஆசிரமத்திலிருந்து தத்தெடுத்து வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன், வளர்ந்து இளைஞனான பிறகு, தனது உயிரியல் அம்மா – அப்பா யார் என தெரிந்துகொள்வதற்காக, ஏக்கத்துடன் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்கிறான் என்பது தான் ’காளி’ படத்தின் ஸ்டோரி லைன். முழுமையான ஒரு ஃபேமிலி எண்டர்டெய்னருக்கான ஸ்டோரி லைன்.
இதயநோய் சிறப்பு மருத்துவ நிபுணர் விஜய் ஆண்டனி. அமெரிக்காவில் மிகப் பெரிய மருத்துவமனையை சொந்தமாய் நடத்தி வருகிறார். அவருக்கு அடிக்கடி இனம்புரியாத விசித்திரக் கனவு ஒன்று வருகிறது. அக்கனவில், தமிழ்நாட்டு வயல்வெளியில், ஒரு கொடிய பாம்பு சீறிக்கொண்டும், முரட்டுக்காளை ஒன்று கோபாவேசமாக பாய்ந்தோடியும் வருகின்றன. இதை பார்த்து அச்சத்தில் கதறி அழுகிறான் ஒரு சிறுவன். அவனைக் காப்பாற்ற ஓடிவரும் ஒரு முகம் தெரியாத தாயை காளைமாடு முட்டி தூக்கி வீசுகிறது…
இந்த கனவு ஏன் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கிறது என்ற குழப்பத்தில் விஜய் ஆண்டனி இருக்கையில், அவருடைய அம்மா இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வரும் விஜய் ஆண்டனியைத் தடுக்கும் அப்பா, “உன் சிறுநீரகம் அம்மாவுக்கு பொருந்தாது. ஏனென்றால் நீ நாங்கள் பெற்றெடுத்த மகன் அல்ல; அநாதை ஆசிரமத்திலிருந்து தத்தெடுத்து வளர்த்த மகன்” என்ற உண்மையைச் சொல்லி அதிர்ச்சி தருகிறார்.
எனில், தன்னுடைய உண்மையான உயிரியல் அம்மா – அப்பா யார்? தனக்கு வரும் விசித்திர கனவுக்கும், தனது கடந்த கால வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விகளுக்கு விடை தேடி தமிழ்நாட்டுக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. இங்கு அவருக்கு ஏற்படும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தான் ‘காளி’ படத்தின் கதை.
உயிரியல் பெற்றோரைத் தேடும் இதயநோய் சிறப்பு மருத்துவ நிபுணர், ஜாலியான கல்லூரி மாணவர், காட்டில் மறைந்து வாழும் முரட்டுக் கொள்ளையன், சாந்தமான கிறிஸ்துவ பாதிரியார் ஆகிய வித்தியாசமான நான்கு கதாபாத்திரங்களில், ஒன்றுக்கொன்று வித்தியாசமான நான்கு தோற்றங்களில் வருகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. அந்தந்த கதாபாத்திரங்களுக்குத் தேவையான அழுத்தமான நடிப்பை, ஆர்ப்பாட்டமில்லாமல் சிறப்பாக வெளிப்படுத்தி மனம் கவருகிறார்.
நாட்டு வைத்தியராக அஞ்சலி, இளமை பொங்கும் கல்லூரி மாணவியாக அம்ரிதா, கிழட்டு பெரிய மனிதனால் கடத்தப்பட்டு கட்டாய மனைவி ஆக்கப்பட்ட அழகு தேவதையாக ஷில்பா மஞ்சுநாத், உள்ளத்தை நெகிழ வைக்கும் கனமான கதாபாத்திரத்தில் சுனைனா என படத்தில் வரும் நான்கு நாயகிகளும் போட்டி போட்டு நடித்து, காதல் ரசத்தைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காதல் ட்ராக்கும் ஒவ்வொரு விதமாய் தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது இளைஞர்களுக்கு விருந்து.
அமெரிக்காவில் இருந்து வந்திறங்கும் விஜய் ஆண்டனிக்கு தோழமையுடன் உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். படம் முழுக்க வரும் அவர், யாரும் எதிர்பார்க்காத காமெடி கமெண்டுகளை வாரி இறைத்து, பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறார்.
மதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் எல்லாப் படங்களிலும் வருவது போல் தான் இதிலும் வருவார்கள் என்று அசால்டாக இருக்க முடியாது. காரணம், அவர்களுடைய பிளாஷ்பேக்குகளில் தான் இருக்கிறது திரைக்கதையின் உண்மையான சர்ப்ரைஸ்!
ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் தங்களுக்கான பாத்திரங்களை உணர்ந்து நடித்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. பேய்களும், பிசாசுகளும் தமிழ் திரைப்படக் கதைகளை ஆக்கிரமித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், அதிலிருந்து விலகி நின்று, ஒரு குடும்பப் பாங்கான கமர்ஷியல் படமாக இதை கொடுத்ததற்காக கிருத்திகா உதயநிதியை பாராட்டலாம். விஜய் ஆண்டனியின் படங்களுக்கே உரித்தான தாய் செண்டிமெண்ட் உள்ளிட்ட ஃபீல்குட் அம்சங்க்ளோடு, விஜய் ஆண்டனியின் படங்களில் பார்த்திராத புதுமைகளையும் புகுத்தி திரைக்கதை அமைத்திருப்பது வரவேற்புக்கு உரியது.
விஜய் ஆண்டனியின் பாடலிசையும், பின்னணி இசையும் அருமை. “அரும்பே..” டூயட் பாடலும், அதை படமாக்கிய விதமும் பார்வையாளர்களை மயக்கி கிறங்கடிக்கும் சக்தி கொண்டவை. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு, லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு படத்துக்கு பலம்.
‘காளி’ – கோடை விடுமுறையில் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!