காடுவெட்டி – விமர்சனம்

நடிப்பு: ஆர்.கே.சுரேஷ், விஷ்மியா, அகிலன், சங்கீர்த்தனா, ஆதிரா பாண்டிலட்சுமி, ஆடுகளம் முருகதாஸ், சாந்தி மாறன், சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணியம், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சோலை ஆறுமுகம்

ஒளிப்பதிவு: எம்.புகழேந்தி

படத்தொகுப்பு: ஜான் ஆபிரகாம்

பாடலிசை: வணக்கம் தமிழா சாதிக்

பின்னணி இசை: ஸ்ரீகாந்த் தேவா

தயாரிப்பு: மஞ்சள் ஸ்கிரீன்ஸ்

தயாரிப்பாளர்கள்: த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம், ஜி.ராமு,  சோலை ஆறுமுகம்

பத்திரிகை தொடர்பு: மணவை புவன்

படத்தின் ஆரம்பத்தில், நகரத்துப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் காதலை எப்படி அணுகுகிறார்கள் என்பதற்கு சாம்பிளாக ஒரு காதல் ஜோடி காட்டப்படுகிறது…

சுப்பிரமணிய சிவாவின் மூத்த மகள் நாயகி சங்கீர்த்தனாவும், ஆடுகளம் முருகதாஸின் மகன் நாயகன் அகிலனும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். இருவரும் சாதி கடந்து உயிருக்குயிராக காதலிக்கிறார்கள். அவர்கள் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும்போது, சங்கீர்த்தனாவுக்கு அவரது அப்பா சுப்பிரமணிய சிவாவிடமிருந்து போன் வருகிறது. “நீங்க ரெண்டு பேரும் என்ன செஞ்சிக்கிட்டிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா? ரெண்டு பேரும் புறப்பட்டு உடனே வீட்டுக்கு வாங்க” என கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறார் சுப்பிரமணிய சிவா. காதலர்கள் பயந்துகொண்டே வீட்டுக்கு வந்தால், அங்கே சங்கீர்த்தனாவின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அகிலனின் குடும்பத்தினரும் கூட்டமாக கோபத்துடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். சில நிமிட பொய்க்கோப நாடகத்துக்குப்பின் எல்லோரும் பெரிதாக சிரிக்கிறார்கள். பிள்ளைகளின் காதலை ஏற்றுக்கொண்டதை தெரிவிக்கும் இருவரது பெற்றோர்களும், திருமணம் குறித்து சுமுகமாக பேசி முடிக்கிறார்கள்…

நகரத்து மக்களிடம் போதுமான கல்வி அறிவு, பொருளாதார வளம், பெருந்தன்மை போன்றவை தாராளமாக இருப்பதால், காதல் விவகாரம் பற்றி வெளியாரின் தலையீடு இன்றி காதலர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மட்டும் பேசி முடித்துக்கொள்கிறார்கள். “ஆனால், இதே பெற்றோர்களும், காதலர்களும் கிராமத்தில் இருந்தால்…?” என்று வாய்ஸ் ஓவரில் ஒரு குரல் ஒலிக்க, இந்த கதாபாத்திரங்கள் கிராமத்துக்கு இடம் மாறுகின்றன…

0a1c

கிராமத்தில், நடுத்தட்டு ஆதிக்க சாதியைச் சேர்ந்த சுப்பிரமணிய சிவா நாட்டுப்புற நடனக் கலைஞராக இருக்கிறார். அவரது மகள் சங்கீர்த்தனாவும், அடித்தட்டு சாதியைச் சேர்ந்த ஆடுகளம் முருகதாஸின் மகன் அகிலனும் சாதி கடந்து காதலிக்கிறார்கள். இருவரும் டூவீலரில் ஒன்றாக வருவதை நடுத்தட்டு ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பார்த்துவிடுகிறார்கள். காதலிப்பது அந்த ஆண் – பெண்ணின் தனிப்பட்ட விவகாரம் என்ற அறிவில்லாத இந்த இளைஞர்கள், கம்பெடுத்து காதலர்களை அடித்து நொறுக்கி ரத்தக் காயப்படுத்துகிறார்கள். அது மட்டுமல்ல.  நடுத்தட்டு ஆதிக்க சாதிப் பெரியவர்கள் ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்கள். ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளராத அந்த பெரியவர்கள், சங்கீர்த்தனாவின் அப்பாவான சுப்பிரமணிய சிவாவை பஞ்சாயத்துக்கு அழைத்து, “நம்ம சாதியோட மானம் மரியாதையைக் கெடுக்கிற மாதிரி கீழ்ச்சாதி பையனைக் காதலிக்கிற உன் மகள் உனக்கு வேண்டாம். நம்ம சாதி வழக்கப்படி அவளை நீயே கொன்றுவிடு” என்று ஆணையிட்டு அனுப்புகிறார்கள்…

கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டுக்கு வருகிறார் சுப்பிரமணிய சிவா. அவருடைய குடும்பத்தினர், காயத்துடன் இருக்கும் சங்கீர்த்தனாவிடம், “உனக்கு அவன் வேணாம். மறந்துரு” என்று கெஞ்சுகிறார்கள். அதை ஏற்கப் பிடிவாதமாக மறுக்கும் சங்கீர்த்தனா, “அது முடியாது. அதுக்குப் பதிலா கோழிக்கறி குழம்புல விஷத்தை ஊத்தி குடுங்க. சாப்பிட்டுட்டு செத்துப் போறேன்” என்று கத்தி கதறுகிறார். இதை காதில் வாங்கிய சுப்பிரமணிய சிவா, அமைதியாக எழுந்துபோய் ஒரு கோழியைப் பிடித்து அடித்து குழம்பு வைக்கிறார். அத்துடன் விஷ பாட்டிலை அவர் கையிலெடுக்க… ’இடைவேளை’…!

… இப்படியாக நகரத்தைப் போல் இல்லாமல், கிராமத்தில், காதல் விவகாரம், காதலர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மட்டும் பேசி முடிக்கிற விஷயமாக இல்லாமல், சாதியின் பெயராலும், ஊரின் பெயராலும், கண்ட கண்ட மூடர்களெல்லாம் மூக்கை நுழைத்து, காதலர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இம்சையைக் கூட்டுகிறார்கள் என்பதை இயக்குநர் சோலை ஆறுமுகம் அருமையாக சித்தரித்திருக்கிறார் என்ற எண்ணத்துடன் ‘இடைவேளை’யில் வெளியே வந்து மூத்திரம் பெய்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தால், இயக்குநருக்குள் வன்மத்தோடுகூடிய வேறொரு உள்நோக்கம் ஒளிந்திருப்பது படத்தின் இரண்டாம் பாதியில் வெளிப்படுகிறது…

நிஜ வாழ்க்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் களமாடும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரை, படத்தில் இழிவாக சதி செய்யும் சூழ்ச்சிக்கார வில்லனாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். அந்த தலைவர் தன் சாதியைச் சேர்ந்த இளைஞர்களைத் தூண்டிவிட்டு, பொய்யாய் காதல்வலை வீசச் செய்து, அதில் நடுத்தட்டு ஆதிக்க சாதிப் பெண்களை சிக்க வைத்து, அப்பெண்களின் வாழ்க்கை நாசமாவதைக் கண்டு மகிழ்கிறாராம். மேலும், காதலித்த அந்த இளைஞர்களை அவரே கொன்று, ‘சாதியாணவக் கொலை’ என காட்டி, பழியை நடுத்தட்டு ஆதிக்க சாதி மீது போடுகிறாராம். இத்யாதி… இத்யாதி…

இப்படியாக படம் தரமிழந்து ‘பப்படமாக’ பரிதாப நிலையை அடைந்து, படுபாதாளத்தில் வீழ்ந்துவிடுகிறது. இயக்குநரின் அருவருப்பான சாதிவெறி அம்பலமானது தான் மிச்சம்.

‘நடுநாட்டான்’ என்ற முரட்டு கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கிறார்.  தனது நடுத்தட்டு ஆதிக்க சாதிப் பெண்களுக்கு ஒன்று என்றால் உடனே ஆபத்பாந்தவனாக களத்தில் குதிப்பது, வில்லனாக சித்தரிக்கப்படும் அரசியல் தலைவரை கொன்றுவிட்டு சிறை செல்வது என்ற தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான விறைப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா நடித்திருக்கிறார். வலிமையான கதாபாத்திரத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்து, பார்வையாளர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துவிட்டார். பாராட்டுகள்.

நாயகனாக வரும் அகிலன், நாயகியாக வரும் சங்கீர்த்தனா, நாயகனின் அப்பாவாக வரும் ஆடுகளம் முருகதாஸ், நடு நாட்டானின் மனைவியாக வரும் விஷ்மியா மற்றும் ஆதிரா பாண்டிலட்சுமி, சாந்தி மாறன், சுப்பிரமணியம், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வணக்கம் தமிழா சாதிக்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. கிராமப்புறத்தை காட்சிப்படுத்துவதில் ஒளிப்பதிவாளர் எம்.புகழேந்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.

‘காடுவெட்டி’ – ஆர்.கே.சுரேஷின் ரசிகர்களுக்கும், காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களுக்கும் பிடிக்கும்!