கடாரம் கொண்டான் – விமர்சனம்
கமல்ஹாசன் தயாரித்துள்ளார், விக்ரம் நடித்துள்ளார் என்பதால் மட்டும் அல்ல, பல நாடுகளின் பல மொழிகளில் பல படங்களாக எடுக்கப்பட்ட கதை என்பதாலும் ‘கடாரம் கொண்டான்’ பட்த்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு…
2010ஆம் ஆண்டு ‘எ பவுட் போர்டண்ட்’ என்ற ஃபிரெஞ்சுத் திரைப்படம் வெளியானது. அது 2014-ல் ‘தி டார்கெட்’ என்ற பெயரில் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. பின்னர் ‘பாய்ண்ட் பிளாங்க்’ என்ற பெயரில் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதுதான் இப்போது ‘கடாரம் கொண்டான்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
மலேசியாவை முன்னர் ‘கடாரம்’ என்றும் அழைப்பார்கள். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பேரரசன் ராஜேந்திர சோழன் படையெடுத்துப்போய் கடாரத்தை வெற்றிகொண்டான் என்பதால் அவனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயரும் உண்டு. இந்த திரைப்படக் கதை மலேசியாவில் நடைபெறுகிறது என்பதாலும், இது அதிரடி ஆக்சன் படம் என்பதாலும், இப்பட்த்துக்கு ’கடாரம் கொண்டான்’ என்ற பெயர் மிகவும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது.
படக்கதை என்னவென்றால், மலேசியாவில் மிகப் பெரிய, மிகப் பிரமாண்டமான மருத்துவமனை ஒன்று இருக்கிறது. இதில் வாசு (அபிஹசன்) ஜூனியர் டாக்டராக பணியாற்றுகிறான். அவனது மனைவி ஆதிரா (அக்ஷராஹாசன்) நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.
பட்த்தின் ஆரம்பத்தில் ரத்தக்காயத்துடன் ஹீரோ (விக்ரம்) ஓடி வருகிறார். கைத்துப்பாக்கி வைத்திருக்கும் சிலர் அவரை துரத்திக்கொண்டு வருகிறார்கள். எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகும் ஹீரோ, ஜூனியர் டாக்டராக வாசு பணியாற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ஆதிராவை கடத்தும் சில மர்ம ஆசாமிகள், அவளை விடுவிக்க வேண்டும் என்றால் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் ஹீரோவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆதிராவின் கணவனான ஜுனியர் டாக்டர் வாசுவுக்கு நிபந்தனை விதிக்கிறார்கள்.
இந்நிபந்தனையை ஏற்று வாசு செயல்பட முயலும்போது, இடையில் சிலர் குறுக்கிட்டு கட்டையைப் போட, எல்லாம் குளறுபடியாகி விடுகிறது.
இறுதியில், வாசுவின் மனைவி ஆதிரா உயிருடன் மீட்கப்பட்டாளா? அவள் வயிற்றிலிருந்த சிசுவின் கதி என்ன? மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹீரோவின் பின்னணி என்ன? அவரை கைத்துப்பாக்கிகளுடன் துரத்தியது யார் என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக்கதை.
தேர்ந்த நடிப்புக் கலைஞரான விக்ரமுக்கு அவருடைய வயதுக்கேற்ற கதாபாத்திரம். காதல், காமெடி என்று நொண்டியடிக்காமல், அடிதடி ஆக்சனில் பெண்டை நிமிர்த்தும் நாயக பாத்திரம். அசால்டாக நடித்து தூள் கிளப்பியிருக்கிறார். மிக மிக்க் குறைவாக வசனம் பேசி, நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார்.
நடிகர் நாசரின் மகன் அபிஹசன் இதில் ஜூனியர் டாக்டர் வாசு பாத்திரமேற்று திரையுலகுக்கு அறிமுகமாகியிருக்கிறார். கட்த்தப்பட்ட நிறைமாத கர்ப்பிணி மனைவியைத் தேடி தவிக்கும் பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
நிறைமாத கர்ப்பிணி மனைவியாக வரும் அக்ஷராஹாசன், தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவு அளவாக நடித்திருக்கிறார். எனினும், நிறைமாத கர்ப்பிணி என்று காட்டுவதற்காக செயற்கையாக அமைக்கப்பட்ட பெரிய வயிறை அடிக்கடி தூக்கித் தூக்கி காட்டுவது ஓவர்.
முழு நீள ஆக்ஷன் – த்ரில்லர் திரைப்படமாக விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாக இதை கொடுத்திருக்கிறார் ‘தூங்காவனம்’ பட்த்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா. ஹாலிவுட்டிலும் வெளியான பட்த்தின் ரீமேக் என்பதாலோ என்னவோ இந்த தமிழ்ப்பட்த்தின் சண்டைக்காட்சிகளையும் விஷுவல்களையும் ஹாலிவுட் தரத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஜிப்ரானின் பாடலிசை, பின்னணியிசை, ஸ்ரீனிவாஸ் குதாவின் ஒளிப்பதிவு, பிரவீணின் பட்த்தொகுப்பு ஆகியவை பட்த்தின் தரத்தை உயர்த்த உறுதுணையாக இருந்திருக்கின்றன.
லாஜிக் மீறல்களை, அவை தொடர்பான தொடர் கேள்விகளை எல்லாம் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் –
‘கங்கை கொண்டான்’ – ரசிகர்களின் உள்ளம் வென்றான்…!