கே 13 – விமர்சனம்
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ’கே’ பிளாட்டில் உள்ள 13ஆம் எண் வீட்டில் நடக்கும் திகிலூட்டும் சஸ்பென்ஸ் விஷயங்களை மையமாக்க் கொண்டிருப்பதால், எந்த மெனக்கெடலும் இல்லாமல், மேல் நோகாமல் இப்படத்துக்கு ‘கே 13’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும் நாயகன் அருள்நிதி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். கிடைத்த வாய்ப்பும் பறி போகிறது. சொன்ன கதை பிடிக்காமல், இரண்டு நாட்களில் வேறு கதை ரெடி பண்ணச் சொல்லி தயாரிப்பாளர் கேட்கிறார்.
இந்நிலையில், நண்பர்களுடன் கிளப்புக்குச் செல்கிறார் அருள்நிதி. அங்கு நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை பார்த்து பழக ஆரம்பிக்கிறார். இந்த பழக்கம் ‘கே 13’ வீடு வரைக்கும் செல்கிறது.
மறுநாள் காலை அந்த வீட்டில் ஒரு நாற்காலியில் கட்டிப் போடப்பட்டிருக்கும் அருள்நிதி, கண் விழித்து பார்க்கும் போது, நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கை அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அருள்நிதி, அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.
இறுதியில் அருள்நிதி எப்படி தப்பித்தார்? ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கொலை செய்த்து யார்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி முழுக்கதையைப் தாங்கி பிடித்திருக்கிறார். தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
நாயகி ஷ்ரத்தா அழகாக வந்து, கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
நண்பர்களாக வரும் ரமேஷ் திலக், யோகி பாபு ஆகியோர் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்கள்.
காயத்ரி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.
\இயக்குனர் பரத் நீலகண்டன், பார்வையாளர்களை முட்டாளாக்கும் வகையிலான கிளைமாக்ஸ் காட்சியுடன் படத்தை முடித்திருப்பது கொடுமை.
சாம்.சி.எஸ். இசையும், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
‘கே-13’ – சீட்டிங்!