தமிழ், மலையாள படங்களை தொடர்ந்து தெலுங்குக்கு போகும் இளம் இசையமைப்பாளர்!
தமிழ், மலையாளப் படங்களுக்கு இசையமைத்து, குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்துள்ள இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், தெலுங்கு படவுலகிலும் அறிமுகமாக இருக்கிறார்.
“நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாவது என் பாக்கியம்.
இந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ‘மரோ பிரபஞ்சம்’ என்ற குறும்படத்தில் பணியாற்றினோம். இப்போது அந்த திரைப்படத்துக்கான இசை கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும்.
தமிழில் சசிகுமார் நடிக்கும் ‘நாடோடிகள் 2’, அதர்வா நடிக்கும் ‘ஒத்தைக்க்கு ஒத்த’, எஸ்.ஜே.சூர்யாவின் பெயரிடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகி விட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்குப் பெருமை.
இசைக்கு எப்படி மொழி, பிராந்தியம் அநாவசியமோ, இசைக் கலைஞனுக்கும் அப்படியே. காற்றின் தேசம் எங்கும் செல்லும் கானமே ஒரு இசை கலைஞனின் உயிர் மூச்சு” என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.