நந்தினிக்கு நீதி கேட்கும் தர்ம யுத்தத்தில் இணைந்தார் கமல்: பாராட்டு குவிகிறது!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினியை (வயது 16), இந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து கிணற்றில் வீசினார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தினியின் கொலையை கண்டித்தும், நந்தினிக்கு நீதி கோரியும், இன்னும் கைது செய்யப்படாதவர்களை கைது செய்ய வற்புறுத்தியும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே நந்தினிக்கு நீதி கோரி #Justice4Nandhini என்ற ஹேஷ்டேகுடன் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் சமூகவலைதளப் பதிவர்களால் ஆயிரக்கணக்கான பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
இதே ஹேஷ்டேகில் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் கமல்ஹாசன்,”நந்தினிக்கு நீதி கிடைத்தாக வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கறுப்போ எதுவுமே விஷயம் இல்லை. குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு கடவுள் காரணம் இல்லை. நான் முதலில் மனிதன்; இரண்டாவதாக இந்தியன். இந்த விவகாரத்தில் சற்று தாமதமாக என் கவலைக் குரலை எழுப்பியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். என் கோரிக்கை என்பது நீதி கிடைக்க வேண்டும் என்பதற்குத் தானே தவிர பழிவாங்கலுக்கு அல்ல” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை வரவேற்று பாராட்டும் விதமாக பலரும் கமல்ஹாசனின் ட்விட்டர் பக்கத்தில் ஆயிரக்கணகான பதில் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில:
* Balamurugan @ibalamurugan72: நிதியாளும் உலகில் நீதி கிடைக்குமா தலைவா? சாதிக்குத் தலைவணங்கும் பேய்கள் இருக்கும்வரை இது குறையாது. சாட்டையை நீங்களாவது எடுத்தீர்களே!
* ஆம்லெட் @teakkadai: உங்களின் குரல் மிக அவசியமான ஒன்று. உங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்று நீதி கிடைக்கட்டும்.
* thayaprabhu @thayaprabhu: சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் கலைஞன் தன் கருத்தை வெளிபடுத்துவதே கலைக்கு செய்யும் நேர்மையாகும்.
* Govindan @sgsgovi: அரியலூரில் அலறுகிற சத்தம் அரசுக்கு கேட்க வேண்டும்.
* Md’yasin @md_mdyasin: இதுவே நான் கூறினால் வசைபாடுவார்கள், என் குரலாக நீ ஒலித்ததால் நன்றி.
* Duraipandi @Duraipa67402474: வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போன்ற வார்த்தைகள்!
இரா.மகாராஜா @Karisalrajaa: மிக்க நன்றி. நீங்கள் காணொளியிலும் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் உங்களது குரலின் வலிமை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்க்கும்.
Amarnath Pitchaimani @Amarnat35704474: வலிமையற்றவர்களுக்காக வலிமையானவர்களின் குரல் தேவை.
நடிகர் கமல்ஹாசனின் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து சினிமா ஆர்வலர் ‘தமிழ் ஸ்டூடியோ’ அருண் குறிப்பிடும்போது, “கமல் நேர்த்தியாக பேசுகிறார். கருத்துகளை தெரிவிக்கிறார். சமூகத்தை உற்றுப் பார்க்கிறார். கமல் செய்வது அசாதாரண விஷயமல்ல. அது சமூகத்தில் உள்ள கலைஞர்களின் கடமை. சமூகத்தில் பங்காக இருப்பவர்களின் கடமையும் கூட” என்று கூறியுள்ளார்.
சினிமா ஆர்வலர் கருந்தேள் ராஜேஷ் குறிப்பிடும்போது, “கமல்ஹாசனை மனதாரப் பாராட்டுகிறேன். அவரது சோஷியல் மீடியா பிரசன்ஸ் சமீபகாலமாக பிரமாதம். அவரது ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்துமே பாராட்டத்தக்கவை. ஒரு சமூகப் பொறுப்புள்ள பிரபலம் என்பதற்கு கமலின் இத்தகைய நிலைத்தகவல்களே உதாரணம்” என்று கூறியுள்ளார்.