ஜாலியோ ஜிம்கானா – விமர்சனம்

நடிப்பு: பிரபு தேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, பூஜிதா பொன்னடா, அபிராமி பார்கவன், மரியா, யாஷிகா ஆனந்த்,

யோகி பாபு, மதுசூதன் ராவ், ஒய்.ஜி.மகேந்திரா, ரெடின் கிங்ஸ்லி, சாய் தீனா, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், சுரேஷ் சக்கரவர்த்தி, சிவா, ரோபோ சங்கர், ‘ஆதித்யா’ கதிர், நாஞ்சில் சம்பத், ஆடுகளம் நரேன், ஆதவன், ஷக்தி சிதம்பரம், ஜெகன் கவிராஜ் மற்றும் பலர்

இயக்கம்: ஷக்தி சிதம்பரம்

இசை: அஸ்வின் வினாயகமூர்த்தி

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

படத்தொகுப்பு: ஆர்.ராமர் & நிரஞ்சன் ஆண்டனி

தயாரிப்பு: ‘ட்ரான்ஸ் இந்தியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட்’ எம்.ராஜேந்திர ராஜன் & லீலா

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

”பணச் சிக்கலில் சிக்கியுள்ள நாயகியின் குடும்பம், வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி வைத்திருக்கும் பணக்கார பிணத்துடன் மேற்கொள்ளும் டார்க் ஹியூமர் பயணம்” என்பது தான் இத்திரைப்படத்தின் ஒன்லைன்.  

கதையின் நாயகி பவானி (மடோனா செபஸ்டியன்),  தென்காசி அருகே உள்ள மெய்ஞானபுரத்தில் தனது தாய் செல்லம்மா (அபிராமி), தங்கைகள் ஷிவானி (மரியா), யாழினி (அபிராமி பார்கவன்), தாய்மாமா முருகேசன் (சிவா) மற்றும் தாத்தா தங்கசாமி (ஒய்.ஜி.மகேந்திரா) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

தாத்தா தங்கசாமியின் சொந்த ஓட்டல் கனவை நிறைவேற்ற, வட்டிக்கு கடன் தரும் ‘ராக்கெட்’ ரவியிடம் (சுரேஷ் சக்ரவர்த்தி) கடன் வாங்குகிறார்கள். ஒரு நல்ல நாளில் அவர்கள் மகிழ்ச்சியுடன் ‘வெள்ளைக்காரன் பிரியாணி’ என்ற ஹோட்டலைத் தொடங்குகிறார்கள்.

ஆனால் அந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை, திறப்பு விழா நடந்த அதே நாளில் அதன் மூடுவிழாவைப் பார்க்க நேரிடுகிறது. காரணம் தென்காசி எம்எல்ஏ அடைக்கலராஜ் (மதுசூதன் ராவ்)…

அடைக்கலராஜ் எம்.எல்.ஏ.விடம் இருந்து பெரிய ஆர்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், அதற்கான பணத்தை எம்.எல்.ஏ.வின் ஆட்கள் கொடுக்காமல், தகராறு செய்து, தங்கசாமி தாத்தாவைத் தாக்க, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ஹோட்டலை நடத்த முடியாமல் தவிக்கும் பவானி குடும்பத்திற்கு, தாத்தாவின் உயிரைக் காப்பாற்றவும் கடனை அடைக்கவும் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

தாத்தாவின் யோசனைப்படி அடைக்கலராஜ் எம்.எல்.ஏ மீது வழக்குத் தொடர பூங்குன்றன் (பிரபு தேவா) என்ற பிரபல வழக்கறிஞரை சந்திக்க பவானி மற்றும் அவரது குடும்பத்தினர் செல்கிறார்கள். ஆனால், எந்த பூங்குன்றனிடம் அவர்கள் உதவி கேட்கச் சென்றார்களோ, அந்த பூங்குன்றனை யாரோ ஏற்கெனவே கொலை செய்திருக்க, அவர் அங்கு பிணமாகக் கிடக்கிறார்.

அதிர்ச்சி அடையும் பவானி மற்றும் அவரது குடும்பத்தினர், கொலைப்பழி தங்கள் மேல் விழுந்து விடுமோ என பயந்து, அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த முடிவு செய்கிறார்கள்.

அப்போது பூங்குன்றனின் வங்கிக் கணக்கில் 10 கோடி ரூபாய் இருப்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. தங்களது பண நெருக்கடியைச் சமாளிக்க பவானி குடும்பத்தினர் அவரது பணத்தை அபகரிக்க திட்டமிடுகிறார்கள்.

பூங்குன்றன் உண்மையில் இறந்துவிட்டாரா? அல்லது அடைக்கலராஜ் எம்.எல்.ஏ.வை ஏமாற்றுவதற்காக கொலையுண்டது போல் நடிக்கிறாரா? பவானி குடும்பம் பூங்குன்றனின் வங்கிப் பணத்தை அபகரிக்க முடிந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு தொடர் காமெடி கலாட்டாவாக விடை அளிக்கிறது ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

வழக்கறிஞர் பூங்குன்றனாக பிரபு தேவா நடித்திருக்கிறார். படம் முழுக்க பிணமாக நடித்து அசத்தியிருக்கிறார். எனினும், பாடல் காட்சிகளில் அட்டகாசமாக டான்ஸ் ஆடத் தவறவில்லை. கிளைமாக்சில் அவர் போடும் சண்டை நம்ப முடியாதது, என்றாலும் ரசிக்கத் தக்கது.

கதையின் நாயகி பவானியாக மடோனா செபஸ்டியன் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய அம்மா செல்லம்மாவாக வரும் அபிராமி, நாயகிகளின் தங்கைகள் ஷிவானி மற்றும் யாழினியாக வரும் மரியா மற்றும் அபிராமி பார்கவன், தாய்மாமா முருகேசனாக வரும் சிவா, தாத்தா தங்கசாமியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரா, எம்.எல்.ஏ. அடைக்கலராஜாக வரும் மதுசூதன் ராவ், ‘ராக்கெட்’ ரவியாக வரும் சுரேஷ் சக்ரவர்த்தி, கன்னிகாவாக வரும் பூஜிதா பொன்னடா ஆகியோர் குறை சொல்ல ஏதுமின்றி நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

யோகி பாபு, ஜான் விஜய், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், சாய் தீனா, வினோத், ரெடின் கிங்ஸ்லி, சாம்ஸ், ’ஆதித்யா’ கதிர், நாஞ்சில் சம்பத், ஆடுகளம் நரேன், ஆதவன், ஷக்தி சிதம்பரம், ஜெகன் கவிராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி, காமெடியை சரவெடியாகத் தொடர்ந்து கொளுத்திப் போட்டு கலக்கியிருக்கிறது.

யாஷிகா ஆனந்த் வழக்கம் போல் கவர்ச்சியாக வந்து, ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி சூடேற்றிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகளும், நம்ப முடியாத அம்சங்களும் இருக்கின்றன. ஆனால், படத்தின் ஆரம்பத்திலேயே, லாஜிக் பார்க்காமல், ஜாலியாக படம் பார்க்குமாறு இயக்குநர் வாய்ஸ் ஓவரில் வேண்டுகோள் விடுத்திருப்பதால் தப்பித்துக் கொள்கிறார். பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் முழுப்படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்த நோக்கத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அஸ்வின் விநாயகமூர்த்தியின் பாடலிசையும், பின்னணி இசையும் ஓ.கே ரகம். ஜெகன் கவிராஜின் பாடல் அருமை. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஆர்.ராமர் & நிரஞ்சன் ஆண்டனியின் படத்தொகுப்பும் இயக்குநரின் கதை சொல்லலுக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

‘ஜாலியோ ஜிம்கானா’ – ஜாலியாக பார்த்து மகிழலாம்!