ஜோக்கர் – விமர்சனம்
அரசியல் அதிகாரங்களின் அக்கிரமங்களில் சிக்கி அல்லலுறும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை இப்படித்தான் சொல்ல முடியும் என்று ‘ஜோக்கர்’ படத்தின் வழியாக நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன்.
கக்கூஸ் கட்டுவதில்கூட கமிஷன் பார்க்கப் பழகிவிட்ட நிகழ்கால அரசியல் நிர்வாக சூழலின் வெப்பத்தை எதார்த்தப் பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. நம்முடைய பொதுவான உரையாடல்களில் தவிர்க்க நினைக்கிற பாசாங்கற்ற வார்த்தைகளை வசனங்களில் பார்க்க முடிகிறது.
வெகுஜன தமிழ் சினிமாவின் போலியான வாழ்க்கை ‘ஜோக்கரி’ல் இல்லை. அது தருமபுரி மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றை மையமாக வைத்து தமிழக கிராம மக்களின் தீராத வறுமையை, தொடரும் இயலாமையை, முடியாத போராட்டத்தை, சொல்லாத காதலைப் பேசுகிறது. அரசியலை அப்பட்டமாக நையாண்டி செய்கிறது.
தருமபுரி மண்ணின் நிறத்தை, குணத்தை தன் ஒளிப்பதிவின் மூலம் காட்டியிருக்கும் செழியன், மக்கள் ஜனாதிபதியாகவே வாழ்ந்திருக்கிற நாயகன் குருசோமசுந்தரம், நாயகி ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, நாடகப் பேராசிரியர் மு. ராமசாமி, பவா செல்லதுரை, அருள் எழிலன், மை.பா.நாராயணன் என பாராட்டிச் சொல்ல படத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
“டாய்லட் கூடவா இல்லை?” என்று கேட்கிறார்கள். ‘வேர் ஈஸ் மை டாய்லட்’ என்றொரு டாக்குமென்டரியை விகடன் இணையத்தில் எடுத்திருந்தார்கள். சென்னை அண்ணா சாலையில் பெண்களுக்கு கழிப்பறை இல்லை என்ற உண்மை அதில் தெரிய வந்தது. சிங்காரச் சென்னையிலேயே இந்த நிலைதான்.
முடைநாற்றம் வீசுகின்ற அரசு நிர்வாகத்தை எதிர்க்கும் எத்தனையோ சாமானிய மனிதர்கள் நீதி கேட்டுப் போராடி மடிந்த எண்ணற்ற துன்பியல் கதைகள் காற்றில் கலந்திருக்கின்றன. பல பேரை பாய்ந்து அடிக்கிற ஹீரோக்கள் அது பற்றி யோசித்தால் நல்ல சினிமாக்கள் தமிழில் மலரும்.
இயக்குனர் ராஜு முருகனுக்கு வாழ்த்துக்கள்.
– சுந்தரபுத்தன்
ஊடகவியலாளர்
# # # # # #
நீண்ட நாட்களுக்குப்பின் நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்து உடனே என் கருத்துகளை சொல்ல ஆசைப்பட்ட படம் ‘ஜோக்கர்’.
முதலில் சொல்ல வேண்டிய விஷயம், hats off …
விரிவாக சொல்ல வேண்டிய விஷயம், why this film is toe appreciated …
- நடிப்பு என்பது அழகு, நிறம் சம்பந்தப்பட்டது அல்ல என ஓங்கி சொன்னதால்…
- திரைப்படம் என்பது பொழுதுபோக்குதான்; ஆனாலும் உருப்படியாக பொழுது போக்க என தைரியமாக சொன்னதால்…..
- அரசியல், அதிகாரம், மதம், சினிமா கவர்ச்சி, மதுப்பழக்கம், பண ஆசை, தனிமனித ஒழுக்கமின்மை, சமூக அக்கறை இன்மை, சுயநல சிந்தனை, பொதுநலம் குறித்த அக்கறை இன்மை மற்றும் பொது அறிவு என்பதே இல்லாத நிலை என நிலவும் சமூக சூழல்கள் அனைத்தையும் ஒரே படத்தில் சாட்டை அடிகளாக திரையில் இருந்து பார்வையாளர்களை நோக்கி அடித்திருக்கும் நேர்த்தி…
- இசையிலும், ஒளிப்பதிவிலும் உள்ள நிஜம்…
- வசனங்களில் உள்ள வளம் நிறை கனல்…
- தயாரிப்பாளர்களின் துணிச்சல்…
- பத்திரிகையாளனாக இருந்தபோது இருந்த கோபம் குறையாமலே இயக்குனராக மாறி உள்ள ராஜுமுருகனின் கதை அமைப்பு…
இப்படி இன்னமும்கூட சொல்ல வேண்டிய சில அம்சங்கள் உண்டு.
இருப்பினும், திரைப்படம் என்பது இரண்டு மணி நேரம் பார்வையாளனை கட்டிப்போட்டு, திரையில் உள்ள காட்சிகளோடு ஒன்ற வைக்க வேண்டிய வித்தை. குழந்தைக்கு பால் கொடுக்கும் போதுகூட பரவாயில்லை, மருந்து கொடுக்கும்போது தாய்க்கு அதிக கவனம் அவசியம். குழந்தைக்கு புரை ஏறிவிட்டால் மருந்து வெளியே வந்து விடும். இப்படத்தில் அந்த ஆபத்து நிகழ வாய்ப்பு உண்டு.
அதிக உணவும் விஷம்; அதிக மருந்தும் விஷம். அளவுதான் முக்கியம்.
ஜோக்கர் மாபெரும் வணிக ரீதியிலான வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ் சினிமா அர்த்தமுள்ளதாக இருக்கும்.
வெற்றிச்செய்திக்காக காத்திருக்கிறேன்.
– வெங்கட் சுபா
திரைத்துறை