ஜோக்கரின் காதல் மனைவி மல்லிகா, தோழர் இசை கதாபாத்திரங்கள்!

இவங்க ரெண்டு பேரும் தான் மல்லிகாவும், இசையும்.

மல்லிகா யார் தெரியுமா? நம்ம அத்தை பொண்ணு, சித்தி பொண்ணு மாதிரி ஒரு பொண்ணு. கருப்பா இருந்தாலும் அழகா இருப்பா. மணிக்கணக்குல நேரம் செலவழிச்சு சேலை கட்டலேன்னாலும், அவ சேலை கட்டியிருககிறதுல ஒரு அழகு இருக்கும். சோகம் ததும்ப அவ சிரிக்கிறப்போ, கள்ளங்கபடம் இல்லாத அவளோட மனசு தெரியும். கோபக்காரி…. ஆனா குணத்துல தங்கம்.

ரோஜா தோட்டத்துல வேலை செஞ்ச அவளை தேடித்தேடி வந்து ரோஜா கொடுத்து, “உன்னை காதலிக்கிறேன்”னு சொன்னான் ஒரு ஜோக்கர். வழக்கமா பொண்ணு வீட்டுக்காரங்க தான் தங்களோட பொண்ணு வாழப்போற வீட்டை வந்து பார்ப்பாங்க. ஆனா, இந்த மல்லிகா, தான் வாழப்போற வீட்டை தானே தேடிப்போயி பார்த்தா. தன்னை கட்டிக்க ஆசைப்பட்ட அந்த ஜோக்கர் பயபுள்ளைகிட்ட, “வீட்ல கழிவறை இல்லையா?”ன்னு கேட்டா. “இல்லை”ன்னு சொன்னதும், யோசிக்காம, “நான் உன்னை கட்டிக்க மாட்டேன்”னு சொல்லிட்டு வந்துட்டா. அப்புறம் ஒரு வழியா சமாதானம் ஆகி, கல்யாணம் கட்டிக்கிட்டு, ஆசை ஆசையா வயித்துல புள்ளை சுமந்துகிட்டு, மகிழச்சியா சந்தோசமா இருந்த இந்த மல்லிகாவை, நம்ம இந்தியா என்ன பாடு படுத்திச்சு தெரியுமா? அதுவும் நம்ம ஜனாதிபதியும் சேர்ந்து…

இசை யார் தெரியுமா? பாவம், அவ புருஷன் குடிச்சே செத்துப் போனான். டாஸ்மாக்கு, தாலியை கட்டிக்கிட்ட அன்னைக்கே அவகிட்ட இருந்து அவ தாலியை பறிச்சது. இசை ஒரு தோழர்… துப்பட்டாவை தலையில கட்டிக்கிட்டு பறை ஆட்டம் ஆடுவா பாருங்க…. நமக்கெல்லாம் உணர்ச்சி வெதும்பும். இசை… தன்னம்பிக்கையின் இசை… இசையின் ஓசை… உரிமையின் குரல்… இசைகிட்ட அவ அழகையும் தாண்டி ஒரு கம்பீரம் இருந்துட்டே இருக்கும். இசைக்கு எவிடென்ஸ கதிரையும் தெரியும்… ஹென்றி டிபேனையும் தெரியும்… அதிஷாவையும், யுவகிருஷ்ணாவையும் கூடத் தெரியும். இசை ஒரு போராளி… நம்மளால இசை மாதிரி இருக்க முடியுமான்னு தெரியல… ஆனா இசைக்கும், இசை மாதிரி இருக்கிறவங்களுக்கும் கண்டிப்பா சப்போர்ட் பண்ணனும்.

மல்லிகாவும் இசையும் அக்கா தங்கச்சியான்னு கேக்கிறீங்களா? தோழிகளான்னு கேக்கிறீங்களா? சொந்தக்காரங்களான்னு கேக்கிறீங்களா?

இவங்களோட கதையை ராஜூமுருகன் சொல்லிக் கேட்டப்போ, ரொம்ப வேதனையா இருந்துச்சுன்னு சொல்றதை விட, ரொம்ப ரொம்ப வெக்கமா இருந்துச்சு. ஏன் நம்ம இப்டி ஆயிட்டோம்… வீண் பெருமை பேசிப்பேசி வீணாப் போயிட்டிருக்கோம்னு ஒரு குற்ற உணர்ச்சி வந்துச்சு…

ஏன்னு தெரிஞ்சுக்கணுமா…. போங்க… நீங்களும் போய் ‘ஜோக்கர்’  கதை கேட்டுட்டு வாங்க… இல்லை, பாத்துட்டு வாங்க…

அன்பின் வாழ்த்துகள் நிறைந்த முத்தங்கள்… சகோதரி மல்லிகா… தோழர் இசை…!

– முருகன் மந்திரம்

திரைப்பட பாடலாசிரியர்

0a5s

மேலே உள்ள படத்தில் ‘ஜோக்கர்’ நாயகிகள் ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா ஆகியோருடன் முருகன் மந்திரம்.