ஜித்தன் 2 – விமர்சனம்
‘ஜித்தன்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ். அவர் தன் பெயருடன் ‘ஜித்தன்’ என்பதை இணைத்து, ‘ஜித்தன் ரமேஷ்’ என அழைத்துக்கொள்ளும் அளவுக்கு அந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. ஆனால் அதற்குப்பின் அவர் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லாததால், படவாய்ப்பு இல்லாமல் முடங்கிப்போனார். சுமார் 3 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் நாயகனாக வலம் வரும் நோக்கத்துடன் அவர் நடித்துள்ள படம் தான் ‘ஜித்தன் 2’.
இந்த படம் ‘ஜித்தன்’ படத்தின் தொடர்ச்சி போல ஆரம்பிக்கிறது. அது வெறும் பாவனைதான். இரண்டு படக்கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாயகன் ரமேஷ் தனது மறைந்த தந்தையின் ஆசையை நிறைவேற்ற சொந்தமாக ஒரு வீடு வாங்க நினைக்கிறார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு தனி பங்களா வெறும் ரூ.50 லட்சத்திற்கு அவருக்கு கிடைக்கிறது. ஆனால், அங்கு இருக்கும் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி அவரை அங்கு தங்கவிடாமல் பயங்கரமாக பல தொந்தரவுகள் செய்கிறது. அவரை வீட்டைவிட்டு விரட்டியடிக்க முயலுகிறது. அந்த அமானுஷ சக்தியை எதிர்த்து சமாளிக்க ரமேஷ் பல தொடர் முயற்சிகள் செய்கிறார். பலிக்கவில்லை.
இடைவேளைக்குப் பிறகு நாயகி சிருஷ்டி டாங்கே ஆவிதான் அந்த அமானுஷ சக்தி என தெரிய வருகிறது. ரமேஷை அந்த வீட்டில் தங்கவிடாமல் துரத்த முயல்வது ஏன் என்பதற்கு தனது காதல் கதையை ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் மூலம் சொல்லுகிறது ஆவி. இறுதியில் ஆவியே அந்த வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்து ஒரு நிபந்தனை விதிக்கிறது. அது என்ன நிபந்தனை என்பதும், அதை ரமேஷ் பூர்த்தி செய்தாரா என்பதும் மீதிக்கதை.
நாயகனாக வரும் ஜித்தன் ரமேஷ் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். ஆனால், நடிகர்களின் திறமையை வெளிக்காட்டுவது அவர்கள் நடிக்கும் படத்தின் கதைக்களமும், அவர்களது கதாபாத்திரமும் தான். அந்த வகையில், ரமேஷ் தனது திறமையை நிரூபிப்பதற்கான எந்தவிதமான வாய்ப்பும் இந்த படத்தில் அவருக்கு இல்லை. அப்படி இருக்க, இந்த படத்தை தனது ரீ எண்ட்ரிக்கு அவர் ஏன் தேர்வு செய்தார் என்பது அந்த பேய்க்கு தான் வெளிச்சம்.
படத்தில் ரொம்ப ரொம்ப லேட்டாக எண்ட்ரி ஆகிறார் சிருஷ்டி டாங்கே. அவரை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் இயக்குனர் பேய் முழி முழித்திருக்கிறார் என்பது தெரிகிறது.
படத்தில் நடித்த ஏனைய நடிகர்களுக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. ஏனெனில் படத்தின் கதையிலோ, திரைக்கதையிலோ எந்த அழுத்தமோ சுவாரஸ்யமோ இல்லை. இது ஒரு பேய் படமாக திகிலூட்டவும் இல்லை. நகைச்சுவையும் எடுபடவில்லை. சில இடங்களில் மட்டும் ரோபோ சங்கரின் வசனங்களும், கருணாஸின் முகபாவனைகளும் சிரிக்கத் தூண்டுகிறது. வழக்கமான பேய் பட டெம்ப்லேட் கூட இல்லை. ஆனால் ஒன்று செய்திருக்கிறார்கள் பேயையே பயப்படவும், அழவும் வைத்திருக்கிறார்கள். அதுவும் தேவையே இல்லாத காரணத்திற்கு.
படம் ஒரு பக்கம் போய்கொண்டு இருக்க ஸ்ரீ காந்த்தேவாவின் இசை இன்னொரு பக்கம் போகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இரண்டும் ரொம்ப சுமார் தான். படத்தின் கிராஃபிக்ஸ் அபத்தம்.
திரைக்கதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறதா? அதை அப்படியே ரசிகர்களுக்கு பிடிக்கும்விதமாக காட்சிப்படுத்தும் திறமை இயக்குனருக்கு இருக்கிறதா? என பார்த்து தான் ஒரு படத்தில் நடிக்க சம்மதிக்க வேண்டும் என்ற பாடத்தை இதன் பிறகாவது ஜித்தன் ரமேஷ் கற்றுக்கொண்டால் தேவலை!
‘ஜித்தன் 2’ – என்னத்தைச் சொல்ல…!