ஜிகிரி தோஸ்து – விமர்சனம்
நடிப்பு: ஷாரிக் ஹாசன், அரண் வி, விஜே ஆஷிக், அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி, சிவம், கேபிஒய் சரத், துரை சுதாகர், கௌதம் சுந்தர்ராஜன், அனுபமா குமார் மற்றும் பலர்
இயக்கம்: அரண் வி
இசை: அஸ்வின் விநாயக மூர்த்தி
ஒளிப்பதிவு: ஆர்.வி.சரண்
படத்தொகுப்பு: அருள்மொழி வர்மன்
தயாரிப்பு: லார்ட்ஸ் பி இண்டர்நேஷனல்ஸ் & விவிகே என்ட்டெயின்மெண்ட்
தயாரிப்பாளர்கள்: பிரதீப் ஜோஸ்.கே & அரண் வி
பத்திரிகை தொடர்பு: பி.ஸ்ரீ வெங்கடேஷ்
பொறியியல் கல்லூரி மாணவர்களான ரிஷி (ஷாரிக் ஹாசன்), விக்கி (அரண் வி), லோகி (விஜே ஆஷிக்) ஆகிய மூவரும் ஜிகிரி தோஸ்து. அதாவது, உயிருக்குயிரான நெருங்கிய நண்பர்கள்.
கல்லூரி புராஜக்ட்டுக்காக ‘போன் ரெக்கார்டிங் சாஃப்ட்வேர்’ ஒன்றை வெற்றிகரமாக கண்டுபிடிக்கிறார் விக்கி. 500 மீட்டர் சுற்றளவில் நடக்கும் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக ஒட்டுக் கேட்கவும், பதிவு செய்யவும் ஆற்றல் உள்ள இந்த சாதனத்துக்கு ‘டெரரிஸ்ட் ட்ராக்கர்’ என பெயர் சூட்டுகிறார். ஆனால், கல்லூரியில் பேராசிரியர்கள் முன்னிலையில் டெரரிஸ்ட் ட்ராக்கரை டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டும்போது, அது சரியாக வேலை செய்யாததால், விக்கியின் கண்டுபிடிப்பு கல்லூரி நிர்வாகத்தால் நிராகரிக்கப்படுகிறது.
தோல்வியில் துவண்டிருக்கும் விக்கியை உற்சாகப்படுத்துவதற்காக அவரது இரு நண்பர்களான ரிஷியும், லோகியும் அவரை சிற்றுலாவாக மகாபலிபுரத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழியில், மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவரின் மகளான சஞ்சனா (பவித்ரா லட்சுமி), ஒரு மாஃபியா கும்பலால் கடத்திச் செல்லப்படுவதைப் பார்க்கிறார்கள். தான் கண்டுபிடித்துள்ள டெரரிஸ்ட் ட்ராக்கர் சாதனத்தைப் பயன்படுத்தி, அந்த பெண்ணை காப்பாற்ற முடிவு செய்கிறார் விக்கி. அவருடன் மற்ற இரண்டு நண்பர்களும் களத்தில் குதிக்கிறார்கள். கடத்தல் கும்பலின் காரை பின்தொடர்ந்து செல்கிறார்கள்.
அந்த மாஃபியா கும்பல் யார் யாருடன், என்ன பேசுகிறது? யார் யாருடைய துணையுடன் இக்குற்றச் செயலை துணிகரமாக செய்கிறது? என்பதை டெரரிஸ்ட் ட்ராக்கர் சாதனம் மூலம் நண்பர்கள் அறிகிறார்கள். இதன் மூலம், சஞ்சனாவை கடத்தல்கார்ர்களிடமிருந்து இந்த நண்பர்கள் காப்பாற்றினார்களா? கடத்தல்கார்ர்களை சட்டத்தின் முன் நிறுத்தினார்களா? டெரரிஸ்ட் ட்ராக்கர் சாதனத்துக்கு அங்கீகாரம் கிடைத்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதில் அளிக்கிறது ‘ஜிகிரி தோஸ்து’ திரைப்படத்தின் மீதிக்கதை.
மூன்று ஜிகிரி தோஸ்துகளில், ரிஷியாக வரும் ஷாரிக் ஹாசன் நல்ல உடல்வாகுவுடன் இருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிளிருகிறார். அறிவாளி விக்கி கதாபாத்திரத்தில் வரும் அரண் வி, அறிவியலாளருக்கு உரிய சீரியஸ்னெஸ்ஸை நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடி நண்பன் லோகியாக வரும் விஜே ஆஷிக் நிறையவே ‘கடி’க்கிறார்.
ரிஷி மீது அக்கறை கொண்ட காதலி திவ்யாவாக வரும் அம்மு அபிராமி, கடத்தப்படும் பணக்கார சஞ்சனாவாக வரும் பவித்ரா லட்சுமி ஆகியோர் சில காட்சிகளில் மட்டும் வந்துபோனாலும், நடிப்பில் குறை வைக்கவில்லை.
முரட்டு வில்லன் அர்ஜுனனாக நடித்திருக்கும் சிவம் மிரட்டியிருக்கிறார், காமெடியும் வில்லத்தனமும் கலந்த அமைச்சர் கதாபாத்திரத்தில் வரும் துரை சுதாகர் பல இடங்களிலும், வில்லனின் கார் டிரைவர் மாரியாக வரும் கேபிஒய் சரத் சில இடங்களிலும் சிரிக்க வைப்பதோடு, கதை நகர்த்தலுக்கும் பயன்பட்டிருக்கிறார்கள்.
மூன்று நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பதோடு, தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்துகொண்டு, கதை எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அரண் வி. லோ பட்ஜெட்டில், கைக்கு அடக்கமான கதாபாத்திரங்களை வைத்து, இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ற தரமான படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள்.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவும், அஸ்வின் விநாயக மூர்த்தியின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளன.
’ஜிகிரி தோஸ்து’ – நெருக்கமான நண்பர்களோடு / நண்பிகளோடு சேர்ந்துபோய் பார்த்து மகிழலாம்!