ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – விமர்சனம்

நடிப்பு: ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, நவீன் சந்திரா, சத்யன், சஞ்சனா நடராஜன், ஷைன் டாம் சாக்கோ, அரவிந்த் ஆகாஷ், ஆதித்யா பாஸ்கர், தேனி முருகன், விது மற்றும் பலர்

இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்

ஒளிப்பதிவு: எஸ்.திருநாவுக்கரசு

படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: ‘ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்’ கார்த்திகேயன் சந்தானம், ’ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ எஸ்.கதிரேசன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

”வாளை விட எழுதுகோல் வலிமையான ஆயுதம் (Pen is mightier than sword)” என சொல்லக் கேட்டிருப்போம்; அல்லது படித்திருப்போம். இந்த பொன்மொழியை காலத்துக்கேற்ப சற்று மாற்றி “துப்பாக்கியை விட திரைப்படக் கேமரா வலிமையான ஆயுதம்” என்ற கருத்தை உருவாக்கி, அதை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற மூன்று மணி நேரத் திரைப்படம் மூலமாகவே ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

கதை 1970களின் முற்பாதியில் – ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வருவதற்கு முன் – நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ரத்தத்தைப் பார்த்தாலே பயத்தில் வலிப்பு வந்து கை கால் உதறி மயங்கி விழுந்துவிடும் இளைஞர் கிருபாகரன் (எஸ்.ஜே.சூர்யா), தன் அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக காவல்துறைப் பணியில் சேரும் முயற்சியில் இருக்கிறார். பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் வேளை, அவர் செய்யாத கொலைக்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். கிரிமினல் வழக்கில் சிக்கிக்கொண்டதால் இனி காவல்துறை பணி கிடைக்காது என்ற வேதனையில் இருக்கும் அவரை, ஒரு கடைசி வாய்ப்பு தேடி வருகிறது. மதுரையில் இருக்கும் பிரபல தாதா அலியஸ் சீசரை (ராகவா லாரன்ஸ்) கொல்ல வேண்டும்; இதை வெற்றிகரமாக சாமர்த்தியமாக செய்து முடித்தால், காவல்துறை பணி வழங்குவதாக அரசின் உயர் அதிகார வர்க்கம் உறுதியளிக்கிறது. இந்த அசைன்மெண்டை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறார் கிருபாகரன்.

கருமை நிறம் கொண்ட மதுரை தாதா அலியஸ் சீசருக்கு திரைப்பட ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசை. ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகரான இவர், ’தமிழ் சினிமாவின் கிளிண்ட் ஈஸ்ட்வுட்’டாகப் புகழ் பெற விரும்புகிறார். “உன்னால் அது முடியாது அண்ணே. கருப்பா இருக்கிறவங்களை ஹீரோவாக இந்திய மக்கள் ஏத்துக்க மாட்டாங்க” என்று ஒருவர் சொல்ல, இந்த கருத்தை உடைத்தெறிய வெறிகொள்ளும் சீசர், “இந்திய சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ நடிக்கத் தகுந்த சினிமாக் கதை வைத்திருந்தால் அணுகவும்” என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிறார்.

கொலைத் திட்டத்துடன் வந்து சீசரை சந்திக்கும் கிருபாகரன், தன்னை ”பிரபல இயக்குனர் சத்யஜித் ரேயின் உதவி இயக்குனர் ரே தாசன்” என்று போலிப்பெயரில் அறிமுகம் செய்துகொண்டு, ஒரு தாதாவின் கதையை ’காட் ஃபாதர்’ என்ற திரைப்படமாக எடுத்து ஆஸ்கர் விருது பெற்றதைப் போல, நானும் உங்கள் வாழ்க்கைக்கதையை உலக சினிமாவாக எடுத்து ஆஸ்கர் விருது பெற விரும்புகிறேன்” என்று சொல்ல, இதை கேட்டு மெய்சிலிர்க்கும் சீசர் ஓ.கே சொல்லுகிறார்.

இருவரும் இணைந்து திரைப்படம் எடுக்கும் பணியைத் தொடங்குகிறார்கள். இந்த பணியினூடே, தொடை நடுங்கியான கிருபாகரன், சீசரை கொன்றாரா? அல்லது குட்டு உடைந்து சீசர், கிருபாகரனை கொன்றாரா? சீசரை கொல்ல அரசின் உயர் அதிகார வர்க்கம் முனைப்புக் காட்டுவது ஏன்? சீசரும், கிருபாகரனும் இணைந்து எடுக்கத் தொடங்கிய திரைப்படம் என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு அடுக்கடுக்கான திருப்பங்களுடன் விடை சொல்லுகிறது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகர், சினிமா ஹீரோ ஆக ஆசைப்படும் மதுரை தாதா ஆகிய அடிப்படை குணநலன்கள் கொண்ட அலியஸ் சீசர் கதாபாத்திரத்தில் வருகிறார் ராகவா லாரன்ஸ். மிடுக்கான தோற்றம், கம்பீரமான உடல்மொழி ஆகியவற்றுடன் எந்நேரமும் துப்பாக்கியும் கையுமாக இருக்கும் பக்கா மாஸ் ஹீரோவாக கலக்கியிருக்கிறார். அவர் ’மக்கள் நாயகனாக’ மாறி நிமிர்ந்து நிற்கும் காட்சிகளில் ‘அட…’ சொல்ல வைக்கிறார். அவரது வாழ்நாள் சிறந்த நடிப்பாக இது இருக்கும் என்பது திண்ணம்.

முதலில் பயந்தாங்கொள்ளி கிருபாகரனாகவும், அதன்பின் இயக்குனர் சத்யஜித் ரேயின் நடை, உடை, பாவனை கொண்ட ரே தாசனாகவும் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அமெச்சூர்தனமாக ‘ஸ்டார்ட் கேமரா, சவுண்டு, ஆக்‌ஷன், கட்’ சொல்ல கற்றுக்கொள்வது, யாருக்கும் அடங்காத  அலியஸ் சீசரை மவுத் ஆர்கனை வாசித்து அடக்குவது, எந்நேரமும் 8 எம்.எம் கேமராவைத் தூக்கிக்கொண்டு திரிவது, சீசரின் மனைவியை ‘பாசமலர்’ தங்கச்சியாக பாவித்து உருகுவது, மலைவாழ் பழங்குடி மக்களது துயரங்களின் ஒரே சாட்சியாக உருமாறி நிற்பது என பன்மைத் தன்மை கொண்ட தனது கதாபாத்திரத்துக்கு சிறந்த நடிப்பால் நியாயம் சேர்த்திருக்கிறார். இறுதியில் வரும் அழுத்தமான காட்சிகளில் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

தாதா அலியஸ் சீசரின் கர்ப்பிணி மனைவியாகவும் மலைவாழ் பழங்குடிப் பெண்ணாகவும் மலையரசி என்ற கதாபாத்திரத்தில் வரும் நிமிஷா சஜயன் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இவர்களுடன் கிருபாகரனின் ”மச்சான் தம்பி(!)” துரைபாண்டியாக வரும் சத்யன், சினிமா ஹீரோ கம் அரசியல்வாதி ஜெயக்கொடியாக வரும் ஷைன் டாம் சாக்கோ, நாயகி மலையரசியின் அப்பா சங்கையனாக வரும் தேனி முருகன், இரக்கமற்ற காவல்துறை அதிகாரி ரத்னாவாக வரும் நவீன் சந்திரா, அமைச்சர் கார்மேகமாக வரும் இளவரசு, பைங்கிளியாக வரும் சஞ்சனா நடராஜன், செட்டானியாக வரும் விது, சின்னாவாக வரும் அரவிந்த் ஆகாஷ், கோவிந்தனாக வரும் ஆதித்யா பாஸ்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. இவர்களுக்கு சிறுசிறு வேடங்கள் தான் என்றாலும், ஒரு காட்சியிலாவது முக்கியத்துவம் பெற்று கவனம் ஈர்க்கிறார்கள்.

காமெடி, அதிரடி ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த ஒரு வலுவான அரசியல் கதையுடன் ‘கம்பேக்’ கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். ‘மெர்குரி’ படத்துக்குப் பிறகு இம்முறை மீண்டும் வெகுமக்கள் பிரச்சனையைப் பேசும் களத்தில் இறங்கியிருக்கும் அவர், முடிந்த அளவு அதை வெகுஜன பார்வையாளர்களுக்கான படமாக மாற்றியிருப்பது பலம்.

 1970-களின் உடைகள், ‘அபூர்வ ராகங்கள்’ ரஜினிகாந்த் மற்றும் சத்யஜித் ரே ரெஃபரன்ஸ், கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் ரசிகராக ராகவா லாரன்ஸ் செய்யும் அதகளங்கள் ஆகியவை கதைக்குள் நுழையாத முதல் பாதியை ரசிக்க வைக்கின்றன. ஒருபுறம் துப்பாக்கியை ஆயுதமாக ஏந்திக்கொண்டு ராகவா லாரன்ஸும், மறுபுறம் கேமராவை ஆயுதமாக ஏந்திக்கொண்டு எஸ்.ஜே.சூர்யாவும் நின்றுகொண்டிருக்கும்போது வரும் ‘இடைவேளை’ கார்த்திக் சுப்பராஜ் டச்.

மலைகிராம பழங்குடி மக்கள் மீது அத்துமீறல்களை நிகழ்த்தும் காவல் துறை, காடுகளை அழித்து பழங்குடி மக்களை வெளியேற்ற முயலும் ஒன்றிய, மாநில அரசுகள், பழங்குடி மக்களின் கலாசாரம், நாட்டார் தெய்வ வழிபாடு, மாநில அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்பதெல்லாம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸின்’ எதிர்பார்க்காத ஆச்சரியங்கள். அதனை பிரச்சாரமாக மாற்றாத திரைமொழியில் யானையைக் கொண்டு நிகழ்த்தியிருக்கும் எமோஷன்ஸ் கைகொடுக்கிறது.

 ‘தனியாவா போற’ என கேட்கும்போது, ‘சினிமாங்குற ஆயுதத்தை கொண்டு போறேன்’ என்ற எஸ்.ஜே.சூர்யாவின் பதில் மொழி, சினிமா  மூலம் அதிகார துஷ்பிரயோகங்களை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்ட முடியும் என்ற சினிமா மீதான தன் காதலை வெளிப்படுத்துகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். பாராட்டுகள்.

சந்தோஷ் நாராயணன் இசயில்  ‘மாமதுரை’ பாடல் ரசிகர்களுக்கான கொண்டாட்டம். பின்னணி இசை பல இடங்களில் நாராசம். ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் போற்றுதலுக்குரிய அபார உழைப்பு பிரேமுக்கு பிரேம் பளிச்சிடுகிறது.

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ – இந்த தீபாவளிக்கேற்ற சுவையான கறிவிருந்து! கண்டு, உண்டு மகிழுங்கள்!