ஜார்கண்ட் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தல்: பாலத்தை தகர்த்தனர் தீவிர கம்யூனிஸ்டுகள்!

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில், கும்லா மாவட்டத்தில் உள்ள காக்ரா- காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்னுபூர் எனும் இடத்தில் உள்ள தரைப்பாலத்தை நக்சலைட்டுகள் வெடிகுண்டு மூலம் தகர்த்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த 13 தொகுதிகளில் 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இவர்களில் 15 பேர் பெண் வேட்பாளர்கள்.

அதிகபட்சமாக பவாந்த்பூரில் 28 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக சதாராவில் 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

முக்கிய வேட்பாளர்களாக பாஜக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் ராமச்சந்திர சந்திரவான்சி, பிஷ்ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர் ராமேஷ்வர் ஓரான், லோகர்தாகா தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ம கிஷோருக்கு கட்சியில் சீட் மறுக்கப்பட்ட நிலையில், அவர் அனைத்து ஜார்கண்ட் மாணவர் அமைப்பு சார்பில் சதார்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜகவுக்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளும் வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளன. ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், பாபுலால் மாரண்டியின் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சிகளும் களத்தில் உள்ளன

தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வினய் குமார் சவுபே கூறுகையில், “13 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக மொத்தம் 4 ஆயிரத்து 892 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,262 இடங்களில் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 11சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையத்தின் தகவல் தெரிவிக்கின்றன. இந்த தொகுதிகளில் மாலை 3 மணிவரை மட்டுமே வாக்குப்பதிவு நடக்கிறது.

போலீஸ் கூடுதல் டிஜிபி முராரி லால் மீனா கூறுகையில், “நக்சலைட் அதிகமாக இருக்கும் இடங்களில் ஆயிரத்து 97 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 461 வாக்குப்பதிவு மையங்கள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாக நடக்கும் வகையிலும், நக்சலைட்டுகளால் எந்தவிதமான பிரச்சினையும் வராமல் இருக்கும் வகையிலும் ஆயுதம் ஏந்திய போலீஸாரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார்

13 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கும் சூழலில் கும்ரா தொகுதிக்கு உட்பட்ட காக்ரா-காத்கோத்வா நகரங்களுக்கு இடையே விஷ்னுபூர் எனும் இடத்தில் உள்ள தரைப்பாலத்தை நக்சலைட்டுகள் இன்று வெடிகுண்டு மூலம் தகர்த்தனர். இதில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.