யூதர்கள்: மார்க்ஸ் காலமும் நம் காலமும்! – அருணன்
மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பே அவர் தந்தையார் யூத மதத்திலிருந்து புராட்டஸ்டென்ட் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார். பாட்டனார் யூத மதகுருவாக இருந்தவர்தான். அந்த மதம் பற்றி மார்க்ஸ் நன்கு அறிவார். அந்தக் காலத்தில் கிறி்ஸ்தவம் வட்டிக்கு கடன் தருவதை ஆதரிக்கவில்லை. ஆனால் யூதர்கள் கந்துவட்டித் தொழிலில் தீவிரமாக இருந்தார்கள். ஒரு நாட்டின் நிதி கட்டமைப்பு அவர்கள் கைக்குச் சென்றதைக் கண்ட கிறிஸ்தவச் சார்பு அரசுகள் அவர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தன. இப்படிக் கிறிஸ்தவ – யூத வேறுபாடு ஐரோப்பாவில் நிலவியிருந்தது.
ஷேக்ஸ்பியர்கூடத் தனது “வெனிஸ் வணிகன்” நாடகத்தில் யூத ஷைலக் – கிறிஸ்தவ அன்டோனியோ மூலம் இந்த முரணைச் சித்தரித்திருப்பார். வாங்கிய கடனை உரிய காலத்தில் அன்டோனியோ தரவில்லை என்பதால் அதற்கு ஈடாக அவனின் ஒரு பவுண்டு சதை கேட்பான் ஷைலக்! சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அப்போதிருந்தே இந்த விவகாரம் இருந்து வந்தது.
மார்க்ஸ் காலத்திலும் இது பற்றி விவாதம் நடந்தது. புரூனோ பௌவர் என்பார் இதற்குச் சொன்ன தீர்வு “யூதர்கள், கிறிஸ்தவர்கள் இருவருமே தத்தம் மதங்களைக் கைவிட வேண்டும்” என்பது. மக்களிடம் உள்ள மத உணர்வை மிகவும் குறைத்து மதிப்பிட்டார். இதற்கு பதில் சொன்னது மார்க்ஸ் எழுதிய “யூதர் பிரச்சனை பற்றி” எனும் நீள் கட்டுரையின் முதல் பகுதி.
மதச்சார்பற்ற அரசே தீர்வு
மார்க்ஸ் கூறினார்: “யூதர், கிறிஸ்தவர் மற்றும் மதநம்பிக்கையுள்ள மனிதரின் அரசியல் விடுதலை என்பது யூதம், கிறிஸ்தவம் மற்றும் மதத்திலிருந்து அரசு விடுதலை பெறுவதாகும். அரசானது அரசு என்ற வகையில் மதத்திடமிருந்து விடுதலை பெற வேண்டும், அரச மதம் என்பதிலிருந்து விடுதலை பெற வேண்டும். அதாவது, எந்தவொரு மதத்தையும் முன்வைக்காமல் அரசு, அரசாக இருக்க வேண்டும். மக்களில் ஆகப்பெரும்பாலோர் மத உணர்வுள்ளவர்களக இருந்தாலும், அரசானது மதத்திலிருந்து விடுதலை பெற்றிருப்பது சாத்தியமே”.
யூதர் பிரச்னைக்குத் தீர்வு மத ஒழிப்பும் அல்ல, கிறிஸ்தவ சார்பு அரசுக்குப் போட்டியாக யூத சார்பு அரசை அமைப்பதும் அல்ல. மாறாக குடிமக்களுக்கு மத உரிமை தந்து, அரசு எந்த மதச் சார்பற்றதாகவும் இருப்பது. இதுவே யூத – கிறிஸ்தவப் பிரச்னைக்கு சரியான, சாத்தியமான தீர்வு என்றார். இதை மார்க்ஸ் எழுதியது 1843ல், அப்போது அவருக்கு வயது 25தான். அந்த இளம் வயதிலேயே இப்படி அருமையாகச் சிந்திக்கிற பக்குவம் அவருக்கு வந்திருந்தது. குடிமக்கள் அனைவருக்கும் மதப் பாகுபாடின்றி சமமான உரிமைகள் தருகிற அரசு வந்தால் அது அரசியல் விடுதலையாக இருக்கும் என்றவர், ஆனால் அதுவே முழு விடுதலையாகாது என்றும் சொன்னார். அவர் எழுதினார்:
“மதத்தை பொது சட்டத்திலிருந்து விலக்கி தனிச் சட்டத்தில் வைப்பதன் மூலம் மதத்திலிருந்து மனிதன் அரசியல் ரீதியாக விடுதலை பெறுகிறான். எனவே யூதர்களிடம் பௌவர் கூறுவது போல, யூத மதத்திலிருந்து விடுதலை பெறாமல் நீங்கள் அரசியல் ரீதியாக விடுதலை பெற முடியாது என்று நாம் கூறவில்லை. மாறாக, நீங்கள் யூத மதத்தை கைவிடாமலேயே அரசியல் ரீதியாக விடுதலை பெற முடியும் என்பதால், அரசியல் விடுதலை என்பதே மனித விடுதலையாகாது என்கிறோம்”.
மனித விடுதலை என்பது இன்னும் ஆழமானது, அகலமானது. அது அரசியல் விடுதலை மட்டுமல்லாது, பொருளாதார விடுதலையும்கூட. சொல்லப் போனால் அனைத்து வகையான செயற்கைத் தளைகளிலிருந்தும், சகல விதமான அந்நியப்படுதலிலிருந்தும் விடுதலை பெறுவது. அந்த நோக்கில் அவர் அலசும்போதுதான் யூதர்கள் பற்றிய சில விமர்சனங்களைக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் வைத்தார்.
யூதரின் கடவுள் மதம் கடந்தவர்!
“யூதத்தின் மதம் தாண்டிய அடிப்படை என்ன? நடைமுறைத் தேவை: சுயநலம். யூதரின் லெளகீக மதம் என்ன? பேராசை. அவரின் லெளகீக கடவுள் யார்? பணம். அப்படியெனில், பேராசை மற்றும் பணத்திலிருந்து விடுதலை பெறுவதே, அப்படியாக நடைமுறை மற்றும் யதார்த்த யூதத்திலிருந்து விடுதலை பெறுவதே நமது காலத்தின் சுயவிடுதலையாகும்” என்றார். கந்துவட்டித் தொழில் முதலாளித்துவத்தின் மோசமான கூறாகி, அது மாந்தரை பணத்தின் பின்னால் ஓடச் செய்திருப்பதையே அவர் சுட்டினார். இதைத் தடுப்பதற்குப் பதிலாக யூதம் அதற்கு புனிதத்தைச் சேர்த்தது. எனவே எழுதினார்:
“பணம் இஸ்ரேலின் துடிப்பான கடவுளாகும். அதன் முன்னால் வேறு எந்தக் கடவுளும் நிற்க முடியாது. பணமானது மனிதர்களின் அனைத்து கடவுள்களையும் தரம் தாழ்த்துகிறது-அவர்களை சரக்குகளாக மாற்றுகிறது. பணமானது சகலத்தின் மதிப்பாகத் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அது முழு உலகையும், மனிதன் – இயற்கை எனும் இரு உலகையும் கொள்ளையடித்துவிட்டது. அது மனிதனின் வேலை மற்றும் இருப்பின் விலகிப்போன சாரமாக உள்ளது. இந்த அந்நியம் அவனை ஆளுகிறது; ஆகவே அதை அவன் துதிக்கிறான்”.
இங்கே மார்க்ஸ் யூத மதத்தை, யூதர்களை விமர்சிக்கிறார் என்பதைவிட பணம் மனித வாழ்வை மொத்தமாக விலை பேசி விட்டதைச் சாடுகிறார். அதற்குத் துணை போவதாலேயே வட்டித் தொழிலில் இருந்த யூதர்களை விமர்சித்தார். அதேநேரத்தில் பணமானது யூதர்களை மட்டுமல்லாது கிறிஸ்தவர்களையும், அப்படியாக முழு ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் ஆட்டுவிப்பதையும் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. அவர் கூறினார்:
“யூதரின் கடவுள் மதம் கடந்தவராகிப் போனார்- அவர் உலகின் கடவுளானார். யூதரின் உண்மையான கடவுள் புரோ நோட்டு. ஒரு கற்பிதமான புரோ நோட்டு அவரின் கடவுள். கிறிஸ்தவம் யூதத்திலிருந்து வந்தது. மீண்டும் அது யூதத்தில் கலந்து விட்டது. கிறிஸ்தவன் யூதத்தின் கொள்கையைக் கொண்டவன், அதனால் யூதன் நடைமுறை கிறிஸ்தவன். நடைமுறை கிறிஸ்தவன் மீண்டும் யூதனாகிப் போனான்”.
மார்க்சின் தனித்துவமான நடை இது. கேலியில் மகத்தான உண்மை அடங்கியிருக்கும். யூதர்கள் அரசியல் உரிமையற்றவர்களாக பல நாடுகளில் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அங்கு பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக அப்போதே இருந்தார்கள் – தங்களது வங்கித் தொழில் மூலம். “உண்மையில் வட அமெரிக்காவில் கிறிஸ்தவ உலகத்தின் மீது யூதத்தின் நடைமுறை ஆதிக்கம் சாதிக்கப்பட்டுள்ளது” என்று அதனால்தான் எழுதினார் மார்க்ஸ்.
தொடர்ந்து கூறினார்: “யூதரின் நடைமுறை அரசியல் அதிகாரத்திற்கும், அவரின் அரசியல் உரிமைகளுக்கும் இடையிலான முரண்பாடு அரசியலுக்கும் பணத்தின் அதிகாரத்திற்கும் இடையிலான பொது முரண்பாடு. கருத்தியல் ரீதியாக முன்னது பின்னதைவிட உயர்ந்தது என்றாலும் யதார்த்தத்தில் அரசியலானது நிதி அதிகாரத்தின் அடிமையாக மாறிவிட்டது”.
நிதித் துறையில் யூத அமெரிக்கர்கள்
மார்க்ஸ் காலத்தின் இந்த நிலை இன்று மேலும் வலுவாகியிருக்கிறது. பன்னாட்டு நிதியில் யூதர்களின் பங்கு என்னவென்று இணையத்தில் தேடினால், அமெரிக்காவின் வங்கித்துறையில் அவர்களது ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பது தெரிகிறது. “நிதித்துறையில் யூத அமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியல்” தருகிறது விக்கிபீடியா. லியோனர்டு எல் அபேஸ் என்பவரில் துவங்கி பேரி ஜுப்ரோ வரையில் 200க்கு மேற்பட்டவர்கள் அதில் உள்ளனர். இதுவும் முழுப்பட்டியல் அல்ல எனப்படுகிறது. நிதித் துறையில் ஆதிக்கம் என்பது முழுப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் என்பதாகும். இதைக் கொண்டுதான் அமெரிக்க அரசியலில் ஆட்டம் போடுகிறார்கள்.
பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று ஒரு நாடு, அங்கே யூதமதச் சார்பு அரசு, அதுவே “ஜியோனிசம்” என்பதாக ஒரு கருத்தியலை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் உருவாக்கிக் கொண்டார்கள். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் உதவியோடு 1948ல் இஸ்ரேல் என்கிற நாட்டை பாலஸ்தீனத்தில் அமைத்தும் விட்டார்கள். அங்கு ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருந்த பாலஸ்தீன முஸ்லிம்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி விட்டார்கள்! 1967ல் முழு பாலஸ்தீனத்தையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவந்து விட்டார்கள். இப்போதோ அந்த நாட்டை குண்டு மழையால் சல்லடையாகத் துளைக்கிறார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டேரை படுகொலை செய்து விட்டார்கள். அவர்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகள்! தாற்காலிகப் போர் நிறுத்தத்திற்கும் தயாராக இல்லை, பாலஸ்தீனம் – இஸ்ரேல் எனும் இரு சுயாதிபத்திய நாடுகள் இருக்கட்டும் எனும் ஐ நா வின் நிரந்தரத் தீர்வுக்கும் தயாராக இல்லை.
இஸ்ரேலின் இவ்வளவு அட்டகாசத்திற்கும் அமெரிக்கா உடைந்தையாக இருக்கிறது என்றால், அந்த நாட்டுப் பொருளாதாரத்தின் மீது யூத ஜியோனிஸ்டுகளின் ஆதிக்கம் இருப்பது காரணமாகும். அதையும் மீறித்தான் பாலஸ்தீனியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியுள்ளது. உலகமெங்கும் அதற்காக நடக்கும் ஆவேசமிக்க ஆர்ப்பாட்டங்களும், அமெரிக்கத் தலைநகரிலேயே நடந்த எழுச்சிமிகு பேரணியும் நமக்கு நம்பிக்கைத் தருகின்றன.
பணத்தின் குதியாட்டம் ஒருநாள் மனிதத்தின் முன்பு அடங்கத்தான் செய்யும்.
-Ramalingam Kathiresan (Arunan)
(நன்றி: தீக்கதிர் 14-11-23)