ஜேப்பியாருக்கு அஞ்சலி: “எவனும் முழுக்க நல்லவனும் இல்லை; கெட்டவனும் இல்லை!”

2004 பலருக்கு நினைவிருக்கும்.

ஆனால் 1986ல் அதைவிட கடும் தண்ணீர் பஞ்சம் சென்னையில்.

மக்கள் குடங்களுடன் அலைந்த காட்சிகள் நினைவை விட்டு அகலாது. குடும்பத்தை சொந்த ஊருக்கு அனுப்பியவர்கள் நிறைய.

‘ஜேசு அடிமை பங்கி ராஜ்’ என்கிற ஆளை சென்னை குடிநீர் வடிகால் வாரிய தலைவராக நியமித்தார் எம்ஜிஆர்.

தெருத் தெருவாக வீடு வீடாக தேடி வந்தது குடிநீர்.

ஐந்தோ பத்தோ நாமாக கொடுத்தால்கூட வாங்க மறுத்தார்கள் தண்ணீர் லாரி டிரைவர்கள்.

பிரமாண்டமான வாட்டர் டேங்குகள், டேங்கர் லாரிகளை சென்னைவாசிகள் முதல் முறையாக பார்த்தார்கள்.

“முரட்டுத்தனமாக நடக்கிறார்”, “மிரட்டுகிறார்” என்று ஊழியர்கள் பலர் கொந்தளித்தாலும், “இப்படி எல்லாம்கூட சிந்திக்கிறாரே” என்று சில அதிகாரிகள் வெளிப்படையாக பாராட்டினர். ஐஏஎஸ் அதிகாரி அல்லாத முதல் மற்றும் ஒரே மெட்ரோ வாட்டர் சேர்மன் ஜேப்பியார்.

குமரி மாவட்டம் முட்டம் என்ற கிராமத்தில் மீனவ குடும்பத்தில் பிறந்து, போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்தபோது எம்ஜிஆர் பார்வையில் பட்டு, அதிர்ஷ்ட ஏணியில் ஏறிய ஜேப்பியார் பற்றி ஒருமித்த கருத்து நிச்சயம் இல்லை.

அடியாள், ரவுடி, பொறுக்கி என தாராளமாக வர்ணிக்கிறார்கள். அதெல்லாம் தப்பு என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை.

ஆனால் அவர் ஒரு சோதனையாளர். பல வகைகளில் சாதனையாளர். தமிழின் முதல் கலர் நாளிதழை கொண்டு வந்தவர் அவர்.

கல்லூரி நடத்தியதும், விதிகளை மீறியதும், மனித உரிமைகளை மிதித்ததும் பரவலாக தெரிந்த அளவுக்கு அவருடைய ஏனைய முயற்சிகள் தெரியவில்லை.

ஒப்பிட்டால், இதர கல்வித் தந்தைகளுக்கு அவர் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. அவர்கள் சொல்வதில்லை. இவர் சொன்னார்:

”எனக்கு கொள்கை,லட்சியம் எதுவும் கிடையாது. எம்.ஜி.ஆர் ரசிகன். அவர் என் தலைவன். அவருக்காக உயிரையே கொடுப்பேன். நான் விரும்புவது, என் தலைவன் பின்பற்றிய வழிக்கு மற்றவர்களை கொண்டு வருவது. அதை செய்து கொண்டிருக்கிறேன்”.

முழுக்க நல்லவன் எவனும் இல்லை.

கெட்டவனும்.

                 * * *

மய் நேம் ஈஸ் ஜேப்பியார்.
அயம் குட் பெர்சன்.
அயம் நாட் பேட்.

அயம் ஒன்லி ஸ்டிரிக்ட்.
அய் வாண்ட் டிசிப்லின்.
தேட் ஒன்லி ஹெல்ப் யு இன் லைஃப்.
யு பிகம் க்ரேட் வென் யு ஆர் டிசிப்லிண்ட்.

ஸ்டடி இஸ் நாட் பிக் ப்ராப்லம்.
எனி ஒன் கேன் ஸ்டடி.
மார்க் இஸ் நாட் எ ப்ராப்லம்.
வாட் மேக்ஸ் மேன் அண்ட் உமன் இஸ் டிசிப்லின்.

ஈட் வெல், ப்லே வெல், ஸ்டடி வெல், ஸ்லீப் வெல்.
யு வில் பிகம் ஒண்டர்ஃபுல் ஹியூமன் பீயிங்.

அய் டோண்ட் இண்டர்ஃபியர்.
திங்க் அபவ்ட் யுவர் மதர், ஃபாதர்.
ஹவ் தேய் சஃபர் ஃபார் யு.
யு பிகம் பிக் பேர்சன்.
தென் யு டு வாட் யு வாண்ட்.

அண்டர்ஸ்டேண்ட்?

ஆர் யு டோண்ட் கம் ஹியர்.
தேர் ஆர் மெனி காலேஜஸ்.
நோபடி ஆஸ்க் யு கொஸ்டின்.
கோ தேர்.

காட் ப்லெஸ் யு.
மை லெச்சர் அவ்ளோதான்.

குட் பய் எவ்ரிபடி.

– கதிர்வேல்

பத்திரிகையாளர்