ஜெயலலிதா ஐசியூ-வில் இருந்து தனி அறைக்கு மாற்றம்: அ.தி.மு.க.வினர் குத்தாட்டம்!
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அப்போலோ டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக், சிங்கப்பூர் பிசியோ தெரபி பெண் நிபுணர் ஆகியோரும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
58 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருகிறது. இதனால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டதை அறிந்த அதிமுகவினர், அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் இனிப்பு வழங்கி, குத்தாட்டம் போட்டு உற்சாகமாக கொண்டாடினார்கள்.