சசிகலா மீண்டும் சிறையில் அடைக்கப் படுவாரா?: ஒரு வாரத்தில் தெரியும்!
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இத்தீர்ப்பு வழங்கப்பட்டவுடனே நால்வரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப்பின் ஜாமீனில் வெளியே வந்தார்கள்.
பின்னர், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள் இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். அதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இரண்டாவது குற்றவாளியான சசிகலா நியமனம் செய்யப்பட்டார். தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதல்வராக ஓரிரு நாட்களில் பதவி ஏற்க உள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்க இருக்கிறது. அப்போது குமாரசாமி தீர்ப்பு செல்லும் என்று அறிவிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல் வராது. ஆனால், குன்ஹா தீர்ப்பு செல்லும் என்று அறிவிக்கப்பட்டால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இவற்றில் எது நடக்கும் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.