“அரசியலுக்கு வர தயார்”: ஜெயலலிதா அன்ணன் மகள் தீபா திடீர் அறிவிப்பு!
பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான ‘சமூக நீதி – சுயமரியாதை இயக்க’த்தின் ஒரு கிளையாக வளர்ந்த அ.இ.அ.தி.மு.க.வில், காலச்சூழல் காரணமாக, ஜெயலலிதா என்ற பார்ப்பனர், அதிகாரம் மிக்க பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அவரது மறைவுக்குப் பிறகு, அவருடைய பதவியில் இன்னொரு பார்ப்பனரையே அமர்த்த வேண்டும் என்று சில இந்துத்துவ சக்திகள் தீர்மானித்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை முன்நிறுத்தி பரப்புரை செய்து வருகின்றன. இந்நிலையில், “மக்கள் விரும்பினால், நான் அரசியலுக்கு வர தயாராக இருக்கிறேன்” என்று அறிவித்துள்ளார் தீபா.
இது குறித்து ‘நியூஸ் எக்ஸ்’ ஆங்கில செய்திச் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தீபா கூறியிருப்பதாவது:
நான் பிறந்தது போயஸ் இல்லத்தில்தான். ஆனால் பிற்காலத்தில் எங்கள் குடும்பம் சசிகலாவால் வெளியே விரட்டப்பட்டது. எனது அத்தை (ஜெயலலிதா) அவரது ரத்த உறவுகளிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார். எனது அத்தை சிறையில் அடைக்கப்பட காரணமே அவரை சுற்றி இருந்த மோசமான நபர்கள்தான்.
எனது அத்தை உடல்நலக் குறைவால் அவதிப்பட்டபோது, அவருக்கு உரிய பராமரிப்பு கொடுக்கப்படவில்லை. உரிய நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல் வெளியே தெரிவிக்கப்படவில்லை. சரியான நேரத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனது அத்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்த நான் வந்தபோது என்னை அனுமதிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தளவில், ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளதாக வரும் தகவல் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு தீபா கூறியுள்ளார்.