மைசூர் அரண்மனையில் இருந்து சென்னை கோட்டை வரை: ஜெ. வாழ்க்கை குறிப்பு

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, கடந்த 28 ஆண்டுகால தமிழக அரசியலில் தனிப்பெரும் செல்வாக்கு மிகுந்த ஆளுமையாக திகழ்ந்த ஜெயலலிதா, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை பூர்விகமாகக் கொண்டவர்.
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானபோது, அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட வைணவ பார்ப்பன குடும்பங்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை என்ற கிராமத்துக்கு குடிபெயர்ந்தன.
அவ்விதம் குடிபெயர்ந்த குடும்பங்களில் ஒன்று தான் ஜெயலலிதாவின தாத்தா குடும்பமும். அந்த கிராமத்தில் தான் ஜெயராம் – வேதவல்லி தம்பதியரின் மகளாக 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. அவரது இயற்பெயர் கோமளவல்லி.
அவருடைய தாத்தா, மைசூர் அரண்மனைக்கும், மைசூர் மன்னர் ஜெயசாமராஜேந்திர உடையாருக்கும் நெருக்கமானவராக திகழ்ந்தார். இதனால், மைசூர் அரண்மனை மற்றும் மைசூர் மன்னர் ஜெயசாமராஜேந்திர உடையாருக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தைப் பிரதிபலிக்கும் பொருட்டு, தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெய’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். இதனால் தான் ஜெயலலிதாவின் அப்பா – ‘ஜெய’ராம்; ஜெயலலிதாவின் சகோதரர் – ‘ஜெய’குமார்; கோமளவல்லி – ‘ஜெய’லலிதா
ஜெயலலிதா 2 வயது குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை ஜெயராம் காலமாகிவிட்டார். அதன்பிறகு, அவருடைய அம்மா, தனது பெற்றோர்கள் வாழும் பெங்களூருக்கு தன் குழந்தைகளுடன் சென்று வசித்தார். பெங்களூரில் வசித்த அந்த குறுகிய காலத்தில், ஜெயலலிதா சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளி’யில் கல்வி பயின்றார்.
அவரது அம்மாவுக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவர் தன் குழந்தைகளுடன் சென்னைக்கு குடி பெயர்ந்தார். வேதவல்லி என்ற தன் பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஜெயலலிதா 1958ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சென்னை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா, சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆனால், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில், குடும்ப பொருளாதார சிக்கல் காரணமாக, அவரது அம்மா அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். எனவே படிப்பை கைவிட்டு ஜெயலலிதா நடிகை ஆனார்.
ஷங்கர் வி.கிரி இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக ஜெயலலிதா தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை.
அதன்பிறகு அவர் நடிப்பில் 1964ல் வெளியான “சின்னத கொம்பே” என்ற கன்னட படம் அவருக்கு நல்ல விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைதட்டலையும் பெற்றுத் தந்தது.
ஸ்ரீதர் இயக்கிய ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக 1965ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தார் ஜெயலலிதா. இதனை அடுத்து எம்.ஜி.ஆருடன் இணைந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து, தமிழ் படங்களில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்தார்.
ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்குமுன் தொழில்முறை நடிகையாக இருந்து நடித்து வெளியான கடைசி படம், 1980ல் வெளியான ‘நதியை தேடிவந்த கடல்’. அதன்பிறகு, நீண்ட இடைவெளிக்குப்பின் அவருடைய ‘நீங்க நல்லா இருக்கணும்’ படம் 1992ஆம் ஆண்டு வெளியானது.
ஜெயலலிதா மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசனுடன் 17 படங்கள், ஜெய்சங்கருடன் 8 படங்கள், ரவிச்சந்திரனுடன் 10 படங்கள், நாகேஸ்வரராவ்வுடன் 7 படங்கள், முத்துராமனுடன் 6 படங்களில் நடித்துள்ளார். மேலும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன், என்.டி.ராமராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
அவர் தமிழில் நடித்த 92 படங்களில் 85 படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதுபோல் அவர் நடித்த 28 தெலுங்கு படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
இதுதவிர, 10க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். அவர் முதன்முதலாக, எம்.ஜி.ஆரின் ‘அடிமை பெண்’ படத்தில் “அம்மா என்றால் அன்பு…” என்ற பாடலை பாடினார். இந்த பாடல் இன்று வரை அனைவரும் விரும்பி கேட்கும் பாடலாக இருந்து வருகிறது.
ஜெயலலிதா திரையுலக மார்க்கெட்டை இழந்துவிட்ட நிலையில், 1981ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன்பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான இவருக்கு 185-வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசியலில் கருணாநிதிக்கு மாற்றான மிகப்பெரிய அரசியல் சக்தியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்.
1991-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்றார்.
2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்றார் ஜெயலலிதா. ஆனால், நான்கு தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத் தீர்ப்பையடுத்து அவர் பதவி விலகினார். பின்னர் நடைபெற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் 2002-ம் ஆண்டு 3-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
2006-ல் அதிமுக ஆட்சியை இழந்தது. 2011-ம் ஆண்டு மீண்டும் முதல்வரானார். 2014-ல் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால், முதல்வர் பதவியை அவர் இழந்தார். தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து 5-வது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். ஆர்.கே.நகரில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று லட்சக்கணக்கான அ.திமு.க.வினர் மற்றும் அ,தி.மு.க ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 2016, டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா காலமானார்.