எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். ஜெயலலிதாவின் உடல் தங்கப் பேழையில் வைக்கப்பட்டு பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டது. தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் மூலம் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.
ஜெயலலிதா உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டதும், முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா நடராஜன், நடராஜன் உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அவரது தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகன் தீபக்கும் இறுதிச் சடங்குகளை செய்தனர். 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.